முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராட்டி

வெள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது.

அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது.

எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கென்று மகன் பிறந்திருந்தால், அவன் வயதை ஒத்திருப்பான். தம்பி அல்லது மகன் இரண்டில் ஒருவனாக இருக்கத்தக்கவன், அவன்.

என்ன வார்த்தைக் கேட்டுவிட்டான், அப்படிக் கேட்க, அவனுக்கு எப்படி மனம் வந்தது? இந்தத் தைரியத்தை அவனுக்கு யார் கொடுத்தது? நான் பெண் என்பதாலா, அவன் ஆண் என்பதாலா? கேட்டதை விடும், அதன்பிறகு அவன் சிரித்தது, மீசை மயிற்றைக் கடித்தது, என்ன சொல்கிறாய், என்று கேட்டு நின்றது, சட்டைப் பையைத் துலாவியது, அங்கே இங்கேயென பார்வையால் துளைத்தது...அதையெல்லாம் நினைக்கையில், அவளுக்குக் கோபமும் விரக்தியும் உடம்பெல்லாம் எரிச்சலாய் பற்றியது.

கரம்பக்குடி வாணிபத் தெருவையொட்டிதான் அவளுடைய வீடு. குடிசை என்பதும் வீடுதானே. வீட்டின் கூரை எப்படியிருந்தாலும், சுவர் அவளது தொழிற்கேற்றதாக இருந்தது. இரு பக்கமும் மண்ணால் குழைத்து மெழுகப்பட்ட மண் சுவர். ஊரணிபுரத்தில் இளவயதில் வாக்கப்பட்டு, மூச்சு முட்டும் குடியால் புருசனைப் பறிகொடுத்து, விதவைக்கோலத்தில் பிறந்தகத்திற்கு வந்துவிட்டவள்தான் இந்த பார்வதி. தாயை கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் இழந்திருந்தாள். அவள் தட்டி எடுத்த விராட்டியில்தான், அவள் எரிந்திருந்தாள். இப்போது, தந்தையுடன் வாழ்கிறாள். இல்லை, வாழ்கிறாள் என்கிற பெயரில் வசிக்கிறாள்.

மனித நடமாட்டத்திற்கு நிகராக, கால்நடைகள் அதிகம் புழங்குமிடம் சீனிக்கடை முக்கம். அங்கு ஒரு பெரிய கூடை அளவிற்குச் சாணம் கிடைத்திருந்தது. அங்கேயிருந்து பட்டுக்கோட்டை சாலை வழியே அரசமரத்து மண்டபத்திற்கு வந்திருந்தாள். போதுமான அளவிற்கு சாணம் கிடைக்கும் இடம் அது. ஆனால் அன்றைய தினம், அரைக் கூடை அளவுக்கே கிடைத்திருந்தது. அப்படியே மாரியம்மன்கோவில்  திடலுக்கு வந்தாள். அங்கு சாணம் நிறையக் கிடந்தது, ஆனால் அதை அள்ளிக் கூடையில் போட்டுக்கொள்ள கைகள் கூசச்செய்தன. ஒரு முறை மாட்டுச்சாணமென நினைத்து, மனித சாணத்தை அள்ளியதில் இரண்டு நாட்கள் அவளது தொண்டைக்குள் கஞ்சித்தண்ணீர் இறங்கவில்லை. வயிறு குமட்டிக்குமட்டி வந்தது. இரண்டு , மூன்று கூடைகள் அள்ளுமளவிற்கு அங்கு சாணமிருந்தும் அதையெல்லாம் அவள் அள்ளாமல், கோழிச்சந்தை கூடுமிடத்திற்கு வந்திருந்தாள். அங்கு கிடந்த சாணங்கள் பேருந்து, வாகனங்கள் ஏறி இறங்கி நைந்துப் போயிருந்தன. அங்கேயிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் பேருந்து நிலையம் இருந்தது. அங்குச் சென்றால், இரண்டுக்கூடை சாணம் அல்லலாமென நினைத்தாள்.

பார்வதி, தினமும் வீதிக்கு வருபவள் அல்ல. வாரம் ஒரு நாள் பொறுக்கினால், அதில் உம்மி, மரப்பட்டறைத் தவிட்டைக் கலந்து, விராட்டித் தட்டி, காய வைத்து, பொறுக்கி அடுக்க ஒரு வாரம் பிடிக்கும். அதை எடுத்து அடுக்கியப் பிறகுதான், மறுபடியும் விராட்டித் தட்டமுடியும். இப்போது அவளிடம் நான்கு மூட்டை அளவுக்கே விராட்டி இருந்தது. மழைக்காலம் வேறு. ஒன்றுக்கு இரண்டு சாவு விழுந்தால், நம்பி கேட்டுவருகிறவர்களுக்குக் கொடுக்க விராட்டி இல்லாமல் இருந்தது. மழைக்காலத்தில் சாணம் கிடைப்பது அரிது. மாடு சாணம் போடும்தான். ஆனால், மழைத்தண்ணீர் அதைக் கரைக்காமல் விட்டுவைக்க வேண்டுமே, விராட்டித் தட்டுவது, முன்னே பின்னே ஆனாலும் சாணியைப் பஞ்சமில்லாமல் கொண்டுவந்து சேர்த்து விடணும், என பார்வதி இவ்வாரத் தொடக்கத்தில் நினைத்திருந்தாள். நினைத்தபடியே அவள், நான்கைந்து கூடைகளுடன் வீதிக்கு வந்திருந்தாள்.

பேருந்துநிலையம், திலகர்திடல், மீன்கடைச்சந்தை, பழக்கடை வீதிகளில் அவ்வளவாக சாணம் கிடைத்துவிடாது. அப்படியே கிடைத்தாலும் துப்புரவாளர்கள் கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வதற்குள் அள்ளியாக வேண்டும். எப்போது போனாலும் சாணிக் கிடைக்குமிடமாக இருந்தது காந்திப்பூங்காதான். முன்பு இதற்கு பூட்டு, வேலியெல்லாம் இருந்தது. இப்போது அது எந்நேரமும் திறந்த மேனிதான். இரவானால், அங்கேதான் ஊர் மாடெல்லாம் கிடை. காளைமாடுகள் அங்கே, இங்கேயென கண்ட இடத்தில் படுத்து எழுந்தாலும், பசுக்களுக்கு ஒதுக்குப்புறமான இடம் அதுதான். அங்கு சென்றால், இரண்டு கூடை சாணி வாறி அள்ளலாம்.

பார்வதி, காந்திப்பூங்காவிற்கு வந்திருந்தாள். அவள் நினைத்து வந்ததைவிடவும், அதிகமான சாணம் அங்கு கிடைத்திருந்தது. அவள் கொண்டு வந்திருந்த ஐந்து கூடைகளில் மூன்று கூடைகளை அங்கேயே நிரப்பினாள். அங்குமே அவள் கவனமாகவே சாணத்தைப் பொறுக்கினாள். பூங்காவுக்கும் வெளியே முள்வேலி. அதைத்தாண்டினால் பங்களாக்குளம். அதன் கரையில், தவறி கையை வைத்துவிட்டால், மாட்டுச்சாணமாகவே இருந்தாலும், நாறவேச் செய்யும்.

ஒரு காலத்தில் குடிநீர்க்காக கட்டப்பட்ட குளம் அது. மன்னர் ஆட்சிக்காலத்தில் குதிரைகளை குளிர்ப்பாட்டி இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு, கரையைச் சுற்றிலும் நரகல்காடுகள், பன்றி மூட்டங்கள். அந்தியானால் நெல் எது, பதர் எது எனத் தெரியாததைப் போல மாட்டுச் சாணங்கள், பன்றி விட்டைகளுக்கிடையில் கலந்து கிடந்தன. அவள் நடுபூங்காவுக்குள் கிடந்த சாணத்தை மட்டும் பொறுக்கி, இரண்டு கூடைகளிலும் நிரப்பினாள். கூட பன்றி விட்டைகள் கூடைக்கு வராமல் பார்த்துக்கொண்டாள். இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து சும்மாடாகச் சுற்றி, கூடையைத் தூக்க முடியாமல் தூக்கி, முழங்கால் வழியே, தலைக்குக் ஏற்றுகையில், சும்மாடு பின்பக்கமாக நழுவிக்கொண்டது.

ஈச்சங்கூடை, மூங்கில் கூடையாக இருந்தால், உச்சந்தலை தாங்கும். இது, சவுக்குக்கூடை. கூடையைத் தலைக்கு ஏற்றுகையில், உச்சந்தலை உயிர்ப்போவதைப் போல ‘விண்,விண்’ எனத் தெறித்தது. தலையில் வைத்தப்படியே, ஒரு கையைப் பின்பக்கமாகக் கொடுத்து, குடுமியைப்போல முந்தானையைச் சுருட்டி, உச்சந்தலைக்கு ஏற்றிக்கொண்டவள், திலகர் திடல், தானியக் கடை வீதி வழியே வீடு வந்து சேர்கையில் டீக்கடைகளின் கடைத் திறப்புகள், சன்னமாகக் கேட்கத் தொடங்கின.

இன்னும் நான்கு கூடைகள் இருக்கின்றன. அதில் மூன்று கூடைகள் புதிதாக வாங்கியவை. இதற்கு முன்பு நான்கைந்து கூடைகளை அவள் தொலைத்திருந்தாள். சாணி நிரப்பிய கூடையாகவே இருந்தாலும், புதுக்கூடையாக இருந்ததால், சாணியோடு கூடையைத் தூக்கிச் செல்ல ஆட்கள் உண்டு. சீனிக்கடை முக்கத்திலிருந்த கூடை புதுக்கூடை. அதை எடுத்து, அடுத்தடுத்தக் கூடைகளை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தாள். பொழுது நன்றாகவே விடிந்துவிட்டிருந்தது.

இவ்வளவு நேரத்திற்கு அவளுக்கு வந்திராத அந்த கசந்த சம்பவம், கன்னத்தில் ஒழுகியிருந்த சாணத்தைத் துடைத்து, முகம், கால் கைகளைக் கழுவுகையில், அவளது நெஞ்சுக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டது. அச்சம்பவத்தை, கட்டிலில் கயிறோடு கயிறாக ஒட்டிக் கிடந்த தகப்பனாரிடம் சொல்லலாமென, நினைத்தாள். அவரிடம் சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது? எழுந்து நடக்கவே சக்தியற்று கிடக்கிறவரிடம், இதைச் சொல்லி ஏன் கலங்கப் படுத்துவானேன், என நினைத்தவளாய், அள்ளி வந்திருந்த சாணத்தை இரண்டு முட்டுகளாக் குவித்தாள். அவளுக்கே வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் மூன்று கூடைகளுக்கும் மேல் சாணிப் பொறுக்கவோ, தூக்கவோ முடிந்ததில்லை. அன்றைக்கு இரண்டு கூடை சாணம் கூடுதலாக அள்ளி வந்திருந்தாள். காலை மயக்கம், அவளது தலையைத் தனியே திருகி எடுப்பதைப் போலிருந்தது. அவளது நாக்கு கூட வியர்க்கச் செய்தது. டீ வாங்கும் தூக்குக் குவளையை எடுத்துக்கொண்டு, குட்டக்குளத்து டீக்கடைக்கு ஓடினாள். அந்தக் கடையில்தான் ஒரு பார்சல் டீ கேட்டால், ஒன்றரைப் பார்சல் அளவுக்குக் கொடுப்பார்கள். டீயோடு பண்ணும் வாங்கி வந்தவள், அப்பனுக்குச் சூடு பறக்க ஆற்றிக் கொடுத்துவிட்டு, அவள் இரண்டொரு மிடறுகள் பருகினாள்.

கடந்த வாரம் வாங்கி வந்திருந்த உம்மியும், மரப்பட்டறைத் தவிடும் மீதமிருந்தது. சாணத்தை குன்றைப்போல குவித்து, அதன் மையத்தைக் கையால் குலாவி, அதற்குள் உம்மியையும் தவிட்டையும் கொட்டி தண்ணீர் தெளித்து, மூன்றையும் இரண்டறக் கலக்கும்படியாக மிதிமிதியென மிதித்தாள். எப்போதும் அவள் சாணத்தை அப்படியாக மிதிப்பவள் அல்ல. ஆனால், அன்றைய தினம் மிதிப்பதற்கு நேற்றைக்கு நடந்த சம்பவம் காரணமாக இருந்தது. அவனை மிதிப்பதாக நினைத்துக்கொண்டே, அவள் சாணத்தை மிதித்தாள்.

“ உனக்குத்தான் எவ்ளோ கொழுப்பு, ஆம்பளைங்கிற திமிர். உங்க வீட்டிலும் அக்கா, தங்கச்சி, அம்மா இருக்கிறாள்தானே, அவளிடம் போய் இதைக் கேட்கிறது, வெள்ளை வேட்டிக் கட்டிட்டா, மீசைய முறுக்கிட்டா, காந்தி நோட்ட நாலுபேர் பார்க்க சட்டைப்பையில வச்சிட்டா, யாரிடமும் எதையும் நீ கேட்டுடுவியா நீ ” அவனை நினைக்க அவளுக்குக் கோபமும், விரக்தியும் பாதம் வழியே தலைக்கு ஏறியது. அடித்தொண்டையிலிருந்த எச்சிலைக் காறி ‘பொளிச்’சென சாணியில் துப்பியவள், துப்பிய இடத்தை, அவனது மார்பகமாக நினைத்து, மிதி மிதியென மிதித்தாள்.

அவளது வீட்டு குட்டையானச் சுவரும், பக்கத்துவீட்டு பெரிய அகன்ற உயரமானச் சுவரும் விராட்டி அடிக்கப்பட்ட தடங்களாக இருந்தன. அவள் வீட்டுச் சுவரில் எவ்வளவு விராட்டி அடித்துவிட முடியும்? பக்கத்துவீட்டு சுவரை மாதம் இருநூறு ரூபாய் கொடுத்து, வாடகைக்குப் பிடித்திருந்தாள். அந்த வாடகைக்கேனும், இந்த வாரம் விராட்டி அடித்து, விற்றாக வேண்டும்,.. என அவள் முழு மூச்சாக இறங்கினாள்.

ஒரு கூடையில் நெல் உம்மியையும், மரத்தவிட்டையும் கலந்து வைத்துக்கொண்டாள். ஈரக்கையை தவிட்டு உம்மிக்குள் வைத்துஎடுத்து, அக்கையால் சாணத்தை எடுத்து, இரண்டு கைகளாலும் ஒரு தட்டுத்தட்டி, சுவற்றை நோக்கி எறிந்தாள். அவனை நினைத்துக்கொண்டு எறிந்ததில், சாணம் சுவற்றில் அறைந்து ஒட்டிக்கொள்வதாக இருந்தன.

 “நீயும் உன் மொகரையும்” , “ பணக்கொழுப்பு ” , “ அப்பவே உன் தலையில சாணிய உருட்டி அடிச்சிருந்திருக்கணும்”, “ இப்ப வந்து கேளடா ” , “ இந்த சாணிய உன் முகத்தில அடிக்கிறேன் ” , “ ஒரு நாள் என் கண்ணில” ,  “நீ படாமலாப் போயிடுவே” , “ அன்னைக்கு உன்ன வச்சிக்கிறேன்” , “பொம்பளைன்னா ” , “ பூவும் பொட்டும் இழந்தவள்னா ”, “ விதவைன்னா ”, “ புள்ளக்குட்டி இல்லாதவள்னா” , “ அவ்ளோ இளக்காரமா உனக்கு ”, “ என்ன யாரென நினைச்சே ”, “ இனி நீ அப்படிக் கேட்பே ”, “ கேட்பீயாடா”  எனச் சாணியைத் தட்டையாகத் தட்டி, அவனது முகமாகத் தெரிந்த சுவற்றில் அறைவதாக இருந்தாள் பார்வதி.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சவரக்கத்தி

அ ப்பா, வழக்கமாக க் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையை த் திறந்திருந்தேன். அப்பா, எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாக கண்ணாடியை எடுத்து வெளிச்சுவற்றில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன்.   அப்பா கடைக்குளில் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலிய...

புதுக்கோட்டை எழுத்தாளர்கள்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 01 #அகிலன் - சித்திரப்பாவை.  நான் வாசித்த முதல் நாவல். கரம்பக்குடி பள்ளி தமிழாசிரியர் திரு #மலையாண்டி அவர்கள்  இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த நாவலை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்ததற்குக் காரணம், இந்த நாவலிலுள்ள #மாணிக்கம் என்கிற கதாபாத்திரம். "வாழ்க்கை மிகவும் அழகானது. அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தி விடாதே". புதுக்கோட்டை எழுத்தாளர் -02  #புதுகை_சஞ்சீவி, சரக்கு வாகன ஓட்டுநர். மகத்தான சிறுகதை எழுத்தாளர்.  நிகழ் இலக்கிய நிகழ்வில், இவரை நான் முதலில் சந்தித்தேன். இவரது சமீப வெளியீடான #நிழல்_பிம்பங்கள் சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு நாள் சொன்னார், " இந்தத் தொகுப்பு ஓரளவேனும் வாசகர்களால் கவனிக்கப்படுமென எதிர்பார்த்தேன். சற்றே எனக்கு ஏமாற்றம்தான்".  பதிலுக்கு நான் சொன்னேன்,"எனக்கோர் ஆசை,  #நிழல்_பிம்பங்கள் போல ஒரு சிறுகதையை நான் எழுதிப் பார்த்திட வேண்டும் " என்று.  புதுக்கோட்டை எழுத்தாளர் - 03  #பெரி_சே_இளங்கோவன், அறந்தாங்கியில் வசித்து வரும் இவர், பட்டதாரி தமிழாசிரியர். நான், புதுகை புழங்க...