சுத்தம்! சுத்தம்!
மாமன்னர் மார்த்தாண்ட
வர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப்பிறகு அரண்மனை வளாகம், மாமணி மண்டபம், கோட்டை,
கொத்தளம் வாயில்கள்,.. யாவும் கூட்டிப் பெருக்கி ஒரு தூசியோ துரும்போ அல்லாமல் துடைத்தெடுத்த
சுத்தத்தில் இருந்தது. இதைவிடவும் படுசுத்தமாக இருந்தது சமஸ்தானத்தின் கஜானாதான்!
கிடங்கிலிருக்கும்
தானிய இருப்பைக் கூட்டி அள்ளினால் பதக்குத் தேறாது. ஒரு வார காலம் கொண்டாடு, கொண்டாடெனக்
கொண்டாடித் தீர்த்த மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கொடுக்க, வழங்க, அள்ளி இறைத்ததில்
கஜானா சுத்தம்! படுசுத்தம்!
கஜானாவை மீண்டும்
நிரப்ப வேண்டிய பொறுப்பு சமஸ்தானத்தின் திவான் டி.ஆர். பார்த்தசாரதி அய்யங்கார் தலையில்
வந்து விழுந்திருந்தது. திவான், மார்பின் குறுக்கே ஓடிக்கிடந்த பூணூலை விரல்களால் நீவி
விட்டுக்கொண்டு, குடுமியை அள்ளி முடிந்துகொண்டு கஜானா குறித்தும் அதை எப்படி நிரப்பலாமென்றும்
சிந்திக்கலானார். ஒன்றைக் குறித்து பலவாறு
பலகோணத்தில் சிந்திப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்றுதான். சிந்தித்தலும் சிந்தித்தல்
நிமித்தமுமே அவரது தொழில், பணி எல்லாம். மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து,
உல்லாசப் பயணமாகக் குளிர்தேசம் சென்றிருக்கிறார். அவர் தேசம் திரும்புவதற்குள் கஜானாவை
நிரப்பியாக வேண்டுமென்கிற அவசரக்கதியில் அவர் நின்றுகொண்டிருந்தார்.
மன்னரின் பெயரைப்
பயன்படுத்திக்கொண்டு யாரையும், எங்கேயும், எப்பொழுதும் சந்தித்து விட முடியும் என்கிற
அதிகாரக்குவிவு அவரிடமிருந்தது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மதராஸ் வைஸ்ராயையோ,
மைசூர் மகாராஜாவையோ மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கடன் கோரலாம் என நினைத்தார். ஆனால்,
இதற்கு முன்பு அவர்களிடம் வாங்கியக் கடன், வாங்கியக் கடனுக்கு வட்டிக்கட்டாத சுமை,..யோசனையை
மடை மாற்றியது. வேறென்னச் செய்யலாம்...? அப்படியாக யோசிக்கையில்தான் இருவழிப் பாதையை
எட்டுவழிப் பாதையாக மாற்றலாம், என்கிற யோசனை மனதிற்குள் துளிர்த்தது.
‘திருவிதாங்கூர்
சமஸ்தான அரண்மனைக்கும் - பத்பநாபர் கோவிலுக்கும் இடையிலான பாதையை அகலப்படுத்தி எண்வழிப்
பாதையாக மாற்றப்படும்...’ கருத்துருவை முன் வைத்ததும் கணநேரம் அவை சச்சரவால் அமிழ்ந்தது.
‘ இதற்கானத் தேவை
என்ன வந்தது, அதுவும் நான்கு வழிப் பாதையாகக் கூட இல்லாமல்...?,’ அனந்தராமன்தான் இதை முதலில் கேட்டார். மூத்த அமைச்சர்
என்பதால் அல்ல. மக்கள் மீதிருந்த பிணைப்பால்! திவான் பாதையை அகலப்படுத்தும் கருதுகோளை
முன்மொழிந்ததும் அனந்தராமனுக்கு மக்களின் பீழையுடன் சேர்ந்து வழியும் கண்ணீரின் சுரந்தமுகம்
கண்முன் நிழலாடியது.
திவான், அதிகம்
பேசுபவர் அல்ல. நான் முன்மொழிவதை வழிமொழிவது ஒன்றே உங்கள் வேலை எனச் சொல்வதைப்போல அவரது
வீற்றிருத்தல் இருந்தது. அவரது கேள்விக்கு திவான்தான் பதில் சொல்லவில்லையே தவிர அவருக்குப்
பதிலாக மற்ற அமைச்சர்கள் அவரது குரலில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
‘ பயணத்தை இலகுவாக்க...’
‘ யாருடைய பயணத்தை?’
‘ மன்னரின் பயணத்தை...’
எளிதில் அவிழ்க்க
முடிந்தக் கேள்விக்கு மன்னர் என்கிற பதத்தை இலகுவாகப் பயன்படுத்திவிடுபவர் திவான். மன்னர், விதி இவ்விரு சொற்களும் அவரை சதுர பிரச்சனையிலிருந்தும்
பல நேரம் விடுவித்திருக்கின்றன. திவானின் பதிலில் மன்னர் என்கிற பதம் சேர்ந்ததும் அனந்தராமன்
பக்கமாக நின்றிருந்த ஓரிருவர் திவான் பக்கமாகச் சாய்ந்ததை பலரும் கண்டு சிரித்தார்கள்.
சற்று முன் கேள்விகளாகத் திறந்திருந்த பலரின் வாய் அவர்களையும் அறியாமல் மூடிக்கொண்டது.
மேல் உதட்டிற்குள் கீழ் உதடு பூட்டாக மாறியது.
அமைச்சு சொற்படி
ஆட, அசைய வேண்டிய இந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் திவான் விரல்படி அசைவதைப் பார்க்கையில்
அனந்தராமனுக்கு நாசியும் காதுகளும் ஒரு சேர விடைத்தன.‘ அத்தனை இலேசு காரியமா இது?’
‘ அபசமாக காரியமென்று
சொல்லாதீர்கள். வேலையென்று சொல்லுங்கள்’
‘ சரி, இலேசான
வேலையா இது...?’
‘ மன்னரின் உத்தரவை
அமுல்படுத்துவது ஒன்றே நம் வேலை’
‘ வேலை மட்டுமல்ல,
கடமையும் கூட’ திவானின் பதிலுக்கு ஒருவர் ஒத்தூதினார்.
‘ இதனால் மக்களின்
கதி?’
‘ அதை மன்னர் பார்த்துக்கொள்வார்...’
நீள வேண்டிய விவாதம் மறுபடியும் தொண்டைக்குள் சுருண்டுப்
படுத்துக்கொண்டது. மன்னர் சமஸ்தானத்தில் உலா வருகையில் மக்களின் பாடு கொண்டாடும் படியாக
இருக்கிறது. வெளிதேசம் சென்றுவிட்டால் அதிரடியான வேலைகளும், காரியங்களும் நடந்தேறுகின்றன.
இது நேற்று, இன்று தொட்டில்லை. காலம் காலமாக நடந்தேறி வரும் நிகழ்வு. மக்கள் குறித்தப்
பிரச்சனையை இதயத்திலிருந்து எடுத்தாள வேண்டும். இதயம் எதையும் தெளிந்தெரிந்து பார்க்கும்.
ஆனால் திவான் மூளையிலிருந்து எடுத்திருந்தார்.
அனந்தராமன் மனதிற்குள்
தற்போதிருக்கும் இருவழிப் பாதையையும், இருபுறமிருக்கும் கட்டிடங்களையும் வேளாண்மை நிலங்களையும்
தராசு கொண்டு பார்த்தார். எத்தனை மாட மாளிகைகள், மணிவாய்ச்சுவர்கள். மரங்களென்ன, செடி,
கொடிகளென்ன,.. இத்தனையும் தவிடுபொடியாகப் போவதை நினைக்க நெஞ்சு கனகனத்தது.
‘ அதையும் மன்னர்
பார்த்துக்கொள்வார்...’
‘ எதையும் மன்னர்
பார்த்துக்கொள்வார்...?’
‘ இப்பொழுது மனதிற்குள்
நினைத்தீரே, முகம் சுழித்தீரே, அதைத்தான் சொல்கிறேன்...’ திவானின்
பதில் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது.
‘ எல்லாவற்றையும்
மன்னரே பார்த்துக்கொள்வார் என்றால், இதற்கு ஏன் இந்த கூடுகை, அவை, ஆலோசனை எல்லாம்...?’
‘ முன் மொழிந்தேன்,
வழி மொழிய வேண்டாமா?’
‘ தூக்குக்கயிறுக்கு
முத்தமிடச் சொல்கிறீர்கள்...’
அனந்தராமன் கேள்விக்குத்
திவானால் ஒரு பதிலும் சொல்ல முடிந்திருக்கவில்லை. அமைதியே உருவென வீற்றிருந்தார். ஆனால்
அவர் கொண்டிருந்த உறுதிபாட்டில் சற்றும் தளர்வு இருந்திருக்கவில்லை.
எப்படி இவரால்
இப்படியான முடிவை எடுக்க முடிகிறது..? அவரது இதயமென்ன இரும்போ,..! அவர் மண்டையில் சுரக்கும்
சுரப்பு ஏன் இதயத்தில் சுரக்கவில்லை....? பெரிய மூளைக்காரன்! சிறிய இதயக்காரன்!!. இமையைச்
சுருட்டி உதட்டைச் சுழித்தார்.
‘பத்மநாபர் கோவிலுக்கும்
திருவிதாங்கூர் அரண்மனைக்கும் இடையிலான இருவழிப் பாதையை அகலப்படுத்தப் போகிறார்களாம்,..’
செய்தி காற்றில் வெடித்து அரளி விதையென மக்களின் காதுகளில் விழுந்தது.
கோவிலும், அரண்மனையும்
என்னே அழகு! அக்கோவிலின் தேரடிப் பாதை எத்தனை பேரழகு!. இரு தேர்கள் ஒரு சேர வந்தால்
சாலை மக்கள் நிறையால் அடைந்து நிற்கும். தேரும் தேர் சூழ் மக்களும் சாலையின் இரு மருங்கால்
பேரழகு திளைக்கும். அழகு மாடங்கள், வணிக வளாகங்கள், சத்திர வாயில்கள்,...யாவும் பார்க்கக்
கண்கொள்ளாது. பேரழகை இடித்து அழகாக்குவதா? இடித்து அகலப்படுத்தினால் எப்படி இருக்கும்,
ஆம், கிழவிகள் உதட்டுச்சாயம் பூசியதைப் போலிருக்கும்! அவருக்குச் சிரிப்பு வந்தது.
கூட கோபமும் வந்தது.
கடைகள் எத்தனை, கன்னிகள் எத்தனை, குடியும், வாசலும்,
அரங்கும், கூடமும் எத்தனையத்தனை. இவ்வளவையும் தூளாக்கி, கூழாக்கி தரைமட்டமாக்காக்குவதா?
இதை மக்களால் ஏற்க முடியுமா? காதுகொண்டு கேட்கும் எனக்கே இப்படி!, கண்கொண்டு பார்க்கும்
அவர்களுக்கு...? உடை, ஆகார ஆதாரங்களை இழந்து நிற்பவர்களுக்கு...?,வாழ்வாதாரத்தைத் தொலைத்து
நிற்பவர்களுக்கு...? அனந்தராமன் யோசித்து யோசித்து அவரது மூளை வியர்த்தது.
திவான் எந்தவொரு
விமரிசனத்தையும் உள்வாங்கிக்கொள்ளாதவராக அடுத்தக்கட்ட வேலையில் மும்முரமாக இறங்கினார்.
தண்டோராக்காரனை அழைத்து செய்தியை எட்டுத்திக்கும் அறிவிக்கச் சொன்னார்.
‘ இதனால் சகலமானவர்களுக்கும்
அறிவிப்பது என்னவென்றால் இராஜாதிராஜ இராஜ கம்பீர மாமன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உத்தரவின்
படி , அரண்மனைக்கும் பத்பநாபர் கோவிலுக்கும் இடையிலான பாதையை அகலப்படுத்த இருபுற கடைகளும்
இடிக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது..’
தண்டோராக்காரனின்
அறிவிப்பு செவிடனின் காதினிலும் தீப்பழமென விழுந்தது. கோடை வெயில், அமில மழை, பிணங்கள்
பிளக்கும் படியாக பொங்கும் பூகம்பம் இத்தனையும் ஒரு சேர நிகழும் துக்கக்கனத்தை விடவும்
அந்த ஒரு அறிவிப்பு துயரக்கனலாக இருந்தது. சொல் காதினில் விழுந்ததும் கனத்தால் இதயம்
வரைக்குமாக அமிழ்ந்தது. புற்றை இழந்த எறுப்புகளைப் போல மக்களின் மொய்ப்பு. கொய்யோ,
மொய்யோ...வெனக் கரைதல். தேரடித் தெரு சுடுநீரும் மென்பாதமென இருந்தது. மரங்கள், செடி,
கொடிகள் ஆடாது அசையாது அச்சமுற்றும் அதிர்ச்சியுற்றும் நின்றுகொண்டிருந்தன.
‘மூடர் யோசனை!
முரட்டுச் சிந்தனை’ அனந்தராமன் திவானை நினைத்து தொண்டைக்குள் புழுங்கினார்.
ஒரு வழிப்போக்கன்
தன் பெண்டு, தன் பிள்ளையென அவன் போக்கில் நடந்துகொண்டிருந்தான். அவனை வழி மறித்துக்
கேட்டார் அனந்தராமன் ‘ இருவழிப் பாதை எட்டு வழிப்பாதையாகப் போகிறதாமே...’
‘ என்னே, அப்படியா...!
மன்னர் என்னவோ செய்துவிட்டுப் போகிறார். நமக்கென்ன..’ எத்தனை வேகமாகச் சொன்னானோ, அத்தனை
வேகமாக அவனது கால்கள் நடைக்கட்டின. அவனை நினைக்கையில் அனந்தராமனுக்கு மூக்கு வியர்த்து
பற்கள் வியர்த்தன. என்னே, வேடிக்கை மனிதனடா இவன்!.
‘ தெரியுமா செய்தி,
எட்டுவழிப் பாதையாமே...’
‘அப்படியென்றால்
இராஜவீதியில் எண் தேர்கள் ஒரு சேர வரப்போகிறது என்று சொல்லுங்கள். அழகே அழகுதான். பார்க்க
கண்களுக்கும் வியர்க்கும்..’
இவன் சரியான கேலி
மனிதனாக இருப்பான் போலும்!
‘ கேட்டீரா சேதி....’
‘ நல்ல செய்திதானே,
மதராஸ பட்டினத்தைப் பார்த்தீரா, பிரிட்டிஸார் எப்படியெல்லாமோ பாதையை அகலப்படுத்துகிறான்.
அழகுப்படுத்துகிறான். நம்ம தேசம் என்ன அப்படியாக வேண்டாமா...? ’
‘ நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்...?’
‘ மன்னர் செய்யும்
எதுவும் சரியாகவே இருக்கும்...’ சொன்னவன் நிற்கவில்லை. திரும்பிப் பார்க்கவில்லை. நமக்கு
ஏன் வம்பு, பெரிய இடத்தில் வீம்பென பாதையிலிருந்து விலகி அவனொரு பாதையில் நடந்துகொண்டிருந்தான்.
அனந்தராமன் எத்தனை
பேரிடமோ கேட்டுவிட்டார், திவான் வாக்கு ஒன்றே சித்தன் வாக்கென இருந்தது. அவரால் பாம்பாட்டி
சித்தரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. உளியால் செய்த சிற்பத்திற்கு உணர்ச்சியென்று
ஒன்றில்லை ஆடு பாம்பே, நீ ஆடுபாம்பே! நாக்கு தொண்டை வரைக்கும் முணங்கினாலும் கோபம்
இமை தாண்டி காது வரைக்குமாக நீண்டது.
திவானுக்கு மன்னன்
மீது குருபுத்தி. மக்கள் மீது குறுக்குப்புத்தி! பற்களைக் கடித்துக்கொண்ட ஆனந்தராமன்
சாலையின் விளிம்பில் வேரறுகப் போகும் ஒரு மரத்தடியில் கீழ் அமர்ந்தார்.
அவரை நோக்கி வந்திருந்த
ஒரு வயோதிகர், அன்ந்தராமன்... என விளித்தபடியே வந்தார். ‘நான்தான் தெரியாமல் கேட்கிறேன்,
என்றைக்கு டி.ஆர்.பார்த்தசாரதி அய்யங்கார் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக உட்கார்ந்தாரோ
அன்றைய தினமே நிதி இருப்பு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. கஜானாவைக் கூட்டி அள்ளினால்
கைப்பிடித் தேறாது. கையில் இருப்பில்லை. கஜானாவில் நெல் இல்லை. பிரிட்டிஸாரிடம் வாங்கியக்
கடனுக்கு வட்டிக்கட்ட ஒரு வழியுமில்லை. எதிலும் எல்லாவற்றிலும் வரி., வரி மேல் வரி,
வரிக்கு வரி. முலைக்கு வரி, தீட்டுத் துணிக்கு வரி, மீசை மயித்துக்கும் வரி,... இத்தனை
வரியிலும் சமஸ்தானத்தின் கஜானா வயிறு துவைத்துக்காய்கிறது. இந்த நிதிச்சுமையில் சாலையை
அகலப்படுத்தத்தான் வேண்டுமா...?’
அவரது கேள்வி அனந்தராமனுக்கு
இதமாக இருந்தது. தான் எத்தனையோ பேரிடம் கேட்டுத் திரிந்தக் கேள்வியை அவரைப் பார்த்து
ஒருவர் கேட்டிருந்தார்.
‘ மன்னர் பார்த்துக்கொள்வாராம்...’
‘ கூகை மனிதர்கள்’
‘ மன்னரையாச் சொல்கிறீர்கள்...’
‘ மன்னருக்கு ஊர்ச்சுற்றவே
நேரமில்லை. இதைப் பற்றியெல்லாம் யோசிக்க அவருக்கு ஏது நேரம், திவானைச் சொல்கிறேன்...’
‘ மனிதர்கள் என்றீரே’
‘ அவருக்குக் காது
குடைந்து விடும் மந்திரிகளையும் சேர்த்துச் சொல்கிறேன்...’
அனந்தராமன் தொண்டைக்குள்
மன்னனும் திவானும் ஒரு சேர உருண்டார்கள்.
அச்சாலையில்தான்
எத்தனை கடைகள்! கோயிலின் அழகை வரைந்து செல்லும் கைவினை பொருட்களின் கடை, வெங்கலக்கடை,
பாத்திரக் கடை, சில்வர், தட்டுமுட்டுச் சாமான்கள், தேங்காய் சூடம் பத்தி பூக்கடைகள்,
வாடகை வேட்டிக் கடைகள், ஜவுளிக்கடை, அகல் விளக்கு, குத்துவிளக்கு கடைகள், நெய்,வெண்ணெய்க்
கடை,வெற்றிலைக்கடை, அடுக்கடுக்காக அடைசலான
கடைகள்...இது தவிர சாலையோர நடைப்பாதை கடைகள்.
ஒரு பாட்டி ஒரு
மூங்கில் கூடையில் பூக்களை வைத்துகொண்டு முழத்தால் அளந்துகொண்டிருந்தாள். ஒரு கிழவர் விசிறி மட்டைகளை நட்சத்திரமாக விரித்து கூப்பாடுப் போட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு இளைஞன் கற்கண்டு விற்றான். மற்றொருவன் பானக்கம் விற்றான். சிறுவர் சிறுமிகள் நெய்,
வெண்ணைய் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
சாலையின் ஒதுக்குப்புறமாக
நின்று கொண்டு ஒரு கிழவி மோர் விற்றுக்கொண்டிருந்தாள். இன்னொரு கிழவி அதையே தானமாகக்
கொடுத்துக்கொண்டிருந்தாள். நவதானியம் கடையொன்று இருந்தது. அதற்கும் அருகில் மண்பானைக்
கடை. மரப்பாச்சி பொம்மைக்கடை. ஒருவன் சாலையின்
விளிம்பில் துண்டை விரித்து கிருஷ்ண அவதாரத்தை பென்சிலால் வரைந்துகொண்டிருந்தான். மற்றொருவர்
அதை எடுத்து கூவி விற்றுகொண்டிருந்தான். யானைக்கான தீனிக்கடையொன்று அச்சாலையில் ஒரு பக்கக் கடையாக இருந்தது. அதே கடையில்
குதிரைக்கான கொள்ளும் இருந்தது.
எள்ளுக்கென்றே
தனிக்கடை. நெல் ,அரிசி, குருணை, தவிடு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடை இருந்தது. இத்தனைக்குமிடையில்
பெரிய்ய்ய கடையொன்றும் இருந்தது. அக்கடை, ஒரு வீட்டின் திண்ணைக்கடையாக இருந்தது. எங்கும்,
சுற்றிலும், வீதியெங்கும் கடைகள்,கடைகள், கடைகடையாய் கடைகள்.
அன்றைய தினம், கோவில் திறக்கப்படாத
நாள் என்பதால் கோவிலின் தேரடி பாதையில் மக்கள் நடை உடையில்லாமல் துடைத்துக் காய்ந்து
கொண்டிருந்தது. அந்நாளில்தான் நான்கைந்து பேர் நிலம் அளக்கும் கன்னியால் குறுக்கு,
நெடுக்குமானத் தெருவை அளந்துகொண்டிருந்தார்கள். அளவைகள் இரு பக்க திண்ணையைத் தாண்டி,
முற்றத்தைத் தாண்டி எல்லையைத் தாண்டி குறிகளாக உள்ளே வெளியே விழுந்துகொண்டிருந்தன.
குழந்தையின் முகத்தில் விழும் கிழட்டுச் சுருக்கம் போலவே அக்குறியீடுகள் சற்றும் பொருத்தமில்லாமல்
இருந்தன. மக்கள் தடுக்க வேண்டியக் கையை வாயிலும் தலையிலும் வைத்துக்கொண்டு துக்கப்
பார்வையில் பார்க்கவும் வெறிக்கவும் இருந்தார்கள்.
அங்கே, இங்கேயென
சுண்ணாம்பு கட்டியினலான குறிகள் விழுவதாக இருந்தன. முன் இட்ட குறி அழிக்க, அடுத்தக்
குறி அதன் உள்ளே நுழைந்து குறியிடுவதாக இருந்தது. கடையைத்தாண்டி, திண்ணைக்குள், வீட்டிற்குள்.
வீடு தாண்டி, வாசலென,..எங்கும் அளவீடுகள். கன்னி அளவை சங்கிலிக்கு மாறியது. சங்கிலியின்
அளவு அகலக்காலானது. கால் அளவை, கண் அளவை, மிரட்டல் அளவையில் வந்து நின்றது.
‘அய்யோ, என் வீடு,
அய்யகோ! என் கூடு..’. ‘ என் வாசல் போகிறதே, என் வாயிலும் போகிறதே...’ மக்களின் மனக்கொதியில்
அமிலக்கொதிப்பு.
‘ வியர்வையில்
பூத்தக் கட்டிடம் இது. எங்களை விட்டு கைக் கழுவ நிற்கிறது..’
‘ பத்பநாபா, நீயே எல்லாத்தையும் எடுத்துக்கோ, என்
உயிரையும் சேர்த்து எடுத்துக்கோ. இதோ,
என் கணவன், இதோ என் பிள்ளைகள், எல்லா உயிரையும் சேர்த்து எடுத்துக்கோ...’
தலைவிரிக்கோலமாக கோவிலை நோக்கி ஓடினார்கள்.
துன்பத்துள் துன்பம்!
கடவுளே, இது உனக்கே அடுக்குமா, தலையில் அடித்துக்கொண்டார்கள். சுவரில் மோதிக் கொண்டார்கள்.
வாய் பேச வேண்டியதை கண்கள் பேசுகின்றன. கண்கள் பார்க்க வேண்டியதை கண்ணீர்த்துளிகள்
பார்க்கின்றன.
இத்தனை ஆண்டுகாலம்
கட்டிக்காத்த இத்தெருவும், வீடும் , கடையும் இயந்திரத்தின் கோரப் பிடிக்கு உள்ளாகப்
போகிறதே, தகதகக்கும் தவிப்பு. பதபதவெனப் பதைப்பு. கைகள் கைகளைப் பிசைகின்றன. கால்கள்
கால்களை மிதிக்கின்றன.
‘ மக்களின் வயிற்றில்
உங்களின் கால்கள் படத்தான் வேண்டுமா, மன்னன் கால்கள் என்ன அத்தனை புனிதமா?. அரண்மனை மேயவும் குடிசைகள்
செரிக்கவுமா..?’ மக்கள் மனதில் காந்தல் வலி. ஒவ்வொருவரின் முகத்திலும் மின்வெட்டுக்
கோபம். கோபம் நல்லது, ஒன்றுத்திரண்டால் ! ஆனால்
அவர்களின் கோபம் நாலாபுறமும் சிதறுவதாக இருந்தது.
‘ பின்னே, சாலையை
விரிவாக்க வேண்டாமா, மக்கள் பெருக வீதி பெருக்க வேணாமா?, சரியான முடமூளைகள்..’
‘ யாரைச் சொன்னாய்
முடமென்று...’
‘ இச்சாலை வரவை
எதிர்ப்பவர்களைச் சொல்கிறேன்...’
‘ என் வீடு அஸ்தியாய்
கரையவும், உன் வீடு அஸ்திவாரமாக நிற்கவுமா?’
‘ நம் சமஸ்தானத்திற்காக,
நம் மன்னருக்காக உன் வீட்டை விட்டுக்கொடுத்தால் என்னவாம்..?’
‘ என்னச் சொன்னாய்,
என்னே சொன்னாய், என்னையாச் சொன்னாய்...’ கோபம் அவளை நோக்கியே திரும்பியது. தலையில்
தலையில் அடித்துக்கொண்டாள்., வாயிலும் வயிற்றிலும் குத்திக்கொண்டாள். மக்கள் முகத்தில்
துக்கக்காடு. தூக்கணாங்குருவிக் கூட்டை குரங்குக்கைக்கு கொடுத்து விட்டதைப் போல கையறு
நிலையில் நின்று, நிற்க முடியாமல் நடந்து, நடக்க முடியாமல் அமர்ந்து....
‘ நாட்டிற்காகத்தானே
இந்த எட்டு வழிச் சாலை...’
‘ என்னச் சொல்கிறீர்கள்...?’
‘ ஆமாம், சாலை
அமைத்தால் நிதி கூடும்..’
‘ சாலைக்கும் நிதிக்கும்
என்ன இருக்கிறது...?’
‘ நிறைய இருக்கிறது...’
சாலையை அளக்க வந்தவர்கள்
வானத்தையும் சேர்த்து அளக்கிறார்கள். ஒவ்வொரு அளவையிலும் கனவு சரிகிறது. அளவைக் கண்டு
ஒரு தாய் வெடித்தழுகிறாள். அவளைக் கண்டு ஒரு குழந்தை அலறுகிறான். ஆம்பளைகள் என்னச்
செய்வதென்று தெரியாமல் நெஞ்சுக்குள் புழுங்கி, குமுறி கவலையில் தேய்கிறார்கள்.
‘எட்டு வழிப்பாதை
கூடாது..’. ‘சாலை விரிவாக்கம் கூடாது....’ அவரவர் சேலையை உருவி சாலையில் கிடத்தி உட்காரும்
படலம் நடந்தேறியது. வீட்டுக்குள் அடைந்துக் கிடந்த பெண்கள், சிறுமிகள் அலறியடித்து
வீதிக்கு ஓடி வருகிறார்கள். வீதியில் அளந்துகொண்டிருந்தவர்கள் வீட்டுக்குள் ஓடுகிறார்கள்.
மக்களின் ஓட்டம் ஊசலாட்டமாக இருக்கிறது. சாலைக்கும் வீட்டுக்குமான ஊஞ்சலாட்டமாக மாறுகிறது.
சாலையின் இருபக்க
குடியிருப்புகளையும் அதிரடியாக இடிக்கும் நிலைக்கு வந்து நின்றது சமஸ்தானம். திவானின்
இதயம் துருஇரும்பானது. மூளைக்குள் சிலந்தி வலைப் பின்னியது. இயந்திரத்தை விடவும் கொடூரமாக
முகத்தை வைத்துக்கொண்டிருந்த ஆயுதபாணிகள் வீதியில் குவிந்தார்கள். வெட்ட, இடிக்க, அழிக்க,
தோண்ட, அகலப்படுத்த,...எனக் கண், காதற்ற கருவிகள் குவிந்தன.
‘ ஒரே, ஒரு இரவு
அவகாசம் தாருங்கள்...’ மக்கள் ஓடிப்போய் திவானின் கால்களில் விழுந்தார்கள். கண்ணீர்
வடித்துக் கெஞ்சினார்கள்.
திவான் முதலில்
பதுங்கினார். பின்னர் பணிந்தார். ‘ ஒரே ஒரு இரவு. சரி தருகிறேன்...’
மறுநாள் பொழுது விடிந்தது,
அரண்மனைக்குள்
குவியல்கள், குன்றுகள். அரண்மனைக்கு வெளியே வணிகர்கள், வியாபாரிகள், வேளாண் குடிகள்,
பாமர மக்கள்,...
எத்தனை ஆண்டுகால
சேமிப்போ. எத்தனை மக்களின் உழைப்போ, அவர்களின் கை, கால், கழுத்து நகைகள் அரண்மனைக்குள்
வந்து விழுந்தன. ஏணியில் ஏற்றி வைத்தது. பரணியில் பத்திரமாக வைத்தது. சுருக்குப்பைக்குள்,
உப்புப்பானைக்குள்,..வைத்த நகை நட்டு நாணயங்கள் சில்லறையாக, முடிச்சுகளாக, கொத்துகளாக,...சிலர்
செப்புக்குடம், சிலர் தவலைகள்,..சரம் சரமாக, அணி அணியாக...அரண்மனைக்குள் கொட்டினார்கள்.
ஒரு ஏழைத்தாய்
ஓடி வந்தாள். இதோ இது என் தாலி, என்னிடமிருக்கிறது இது மட்டும்தான்! படக்கென அறுத்து
அரண்மனைக்குள் எறிந்தவள் கண்ணீர் மல்கச் சொன்னாள் ‘ எனக்கு என் குடிசை வேணும்..’.
மற்றொரு தாய்,
‘இது என் பேரனின் அருணாக்கொடி, எனக்கு என் காணி நிலம் வேணும்’.
‘ இது பிறக்கப்போகும்
என் பிள்ளைக்கு வாங்கிய தாயத்து, இது எனது மெட்டி..’
‘ இது என் காதலன்
எனக்கு அணிவித்த கணையாழி..’
அறுபடும் சத்தமும்,
விட்டெறியும் சத்தமும் ஒரு சேரக் கேட்கின்றன.
ஒரு பொன்க்குன்று
மெல்ல வளர்ந்து மலையாகிறது. மலையில் தாலிகள், பொட்டுக்காசுகள் விழ மலை சரிந்து ஓடையாக
ஓடுகிறது.
திவான், சாட்டை
சலசலங்க, சதுரமணிகள் கிண்கிணுங்க குதிரை வண்டியில் வந்திறங்கினார். மக்கள் இலையுதிர்
காடாக நின்றார்கள். வாய் உடைந்த பானையாக, மூக்கு உடைந்த சிற்பமாக,.. அவர்களின் காது,
மூக்கு, கழுத்துகள் மூழியாக இருந்தன.
குதிரைவண்டியால்
அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை. குண்டுமணி நகைகள், பவளங்கள், பட்டுகள், முத்துகள்,..
ஆங்காங்கே சிதற உருள தெறித்துக்கிடந்தன. பூக்கள் மீது உருள வேண்டிய வண்டிச்சக்கரம்
நகைகள் மீது உருண்டன. பொன் உடைந்து, நசுங்கி சக்கரத்தின் விளிம்பில் பிதுங்கின. மூச்சு
நிற்கப்போகும் பெரும்நோயாளியின் நாசியைப் போல வண்டியின் பேரரவம்.
திவான், கால்கள்
பொற்குவியலின் மீது அவிழ வண்டியிலிருந்து இறங்கினார். அரண்மனையை ஒரு சுற்று வலம் வந்தார்.
அரண்மனை, வாசல், முற்றமென...எங்கும் பொற்குவியல்கள். மின்ன, மினுங்க, அணியாக, சரமாக
மிதந்தன.
அவரது மூளையை மெச்சிக்கொண்டார்.
தன் உடம்பை சாக்கு மூட்டையைப் போலக் குலுக்கிக்
கொண்டார். மன்னருக்கு அவசரமாக செய்தி அனுப்பினார்.
திருவிதாங்கூர், அடுத்தக் கொண்டாட்டத்திற்குத் தயாரானது.
- நன்றி - படைப்பு தகவு ஏப்ரல் 2019 இதழ்
- நன்றி - படைப்பு தகவு ஏப்ரல் 2019 இதழ்

கருத்தும் கதையை நகர்த்திய விதமும் அருமை.. வரலாற்றையே ஒரு உருவகமாக பயன்படுத்தும் உங்கள் உக்தி அருமை.வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு