முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரளய காலத்தவன்

‘அய்யகோ, என் மகனை யாரேனும் காப்பாற்றுங்களேன்,....’ அத்தாயின் கதறல் எங்குமாக சலனமித்திருந்தது. இப்பொழுதுதான் போர் மண்டலம் தாழ்ந்து பனியின் பெய்யொலி கேட்கத் துவங்கியிருக்கிறது. அதற்குள் குறட்டையொலியினூடே ஓலமா? காதுகளைப் இறுகப்பொத்திக்கொண்டு சிலர் புரண்டுப்படுத்தார்கள். என்னவோ, யாரோவென சிலர் எழுந்து சுக்கு நூறாய் தகர்ந்து, புகை அப்பிப்போயிருக்கும் சாளரம் வழியே எட்டிப்பார்த்தார்கள். யாழிவன் ஒருவன் மட்டும், அந்த நடுநிசியில் அலறலொலி வந்த திசையை நோக்கி நடந்தவனாக இருந்தான்.

அத்தெருவில் விழித்தவனாக, திடுக்கென விழிப்பவனாக இருப்பவன் அவன் ஒருவன்தான். தெருவே தூங்குகையில் தூக்க முணுமுணுப்பும் நினைவிலியில் உழறும் தாய், சேய்களின் துயரத் தவிப்பும் அவனைத் தூங்க விடுவதில்லை. ஒரு பிணத்தின் கேவுதல் கூட அவனுக்குக் கேட்கவே செய்யும். அன்றைய தினமும் அப்படிதான், கதறொலி கேட்டு முதலில் விழித்தானா, எழுந்தானா அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் நடந்திருந்தான். காது செல்லும் திசையில் அவனது கால்கள் நடந்தன.

ஒரு குடிசைக்குள் விளக்கு ஒளிர்ந்தது. விளக்கு என்பது வெறும் விளக்கு அல்ல, மனிதன் வாழ்கிறான் என்பதற்கான சாட்சியம் அது. அந்த ஒளியை நோக்கி நடந்திருந்தான். அக்குடிசைக்குள் அடிப்பட்ட கரடியின் ஓலம் ஒடுங்கி முணங்குவதைப் போன்ற கேவுதல் கேட்டது.

‘தாயே...’

கதவைத் திறந்தாள் அத்தாய். வந்தவர் யாரெனப் பாராமல் இமையைக் கசக்கி  மகனின் முகத்தைப் பார்த்தவராக இருந்தாள். மகன் ஓலைப்பாயில் ஆசிரியப்பா போல கால் நீட்டி படுத்திருந்தான். மகனின் மேற்வயிறு மூச்சுவாங்கியது. கணுக்காலிடத்தில் அவனது மறுகால் கிடந்தது. கைகளில் ஒன்று துவண்டும் மற்றொன்று குவிந்துமிருந்தது. தலைக்குத் தலையணை. மார்பு வரைக்குமாக மூடிக்கிடந்தது  ஒரு கிழிந்தப் போர்வை. அவனது முகத்தில் ஒரு புத்தகம் கவிழ்ந்திருந்தது.

‘ சின்னா...’

இன்னொரு முறை அழைத்தால் அவன் விழித்துக்கொள்வான். அப்படியாகவே அவனது தூக்கமிருந்தது. எத்தனை மணிக்கு படுத்தானோ, படுத்தவுடன் தூங்கிவிடுகிற வயதா அவனுக்கு..? இந்நிலத்தின் காலநிலையும், வானிலையும் அப்படியாகவா விட்டு வைத்திருக்கிறது. தூங்குபவன் தூங்கட்டும், இன்னொரு முறை அவனை எழுப்பத் தயங்கி மகனின் முகத்தைப் பார்த்தவாறு நின்றாள்.

புத்தகத்தோடு தூங்கிப்போனவன் அவன், புத்தகத்தின் முகத்தில் விழிக்க வேண்டும் என்பதற்காகவே புத்தகத்தை முகத்தில் மூடியிருந்தான். அதன் பக்கங்கள் காற்றில் அளாவிக்கொண்டிருந்தன.

இரவு, அவள்  பாதி தூக்கத்தில் விழித்து மகனைப் பார்த்திருந்தாள். அவன், பத்து பக்கங்களவிற்கே வாசித்திருந்தான். இப்பொழுது புத்தகத்தின் பெரும்பகுதியை வாசித்துவிட்டது கவிழ்ந்திருந்த பக்கங்களில் தெரிந்தது. அவன், முயலைப் போல தலையை வைத்து வைத்தபடி தூங்கினாலும் அவனது தூக்கம் பனிக்கரடியின் குளிர்கால தூக்கத்தை ஒத்ததாக இருந்தது. கண்களின் தூக்கமல்ல அது. மூளையின் தூக்கம். வாசிப்பிலும், வாசித்தக்  களைப்பினால் வரும் தூக்கம். அவன் எழுப்பலாம், எழுந்தால் கண் விழிக்கும், நினைவு விழிக்காது.

‘ என்ன தாயே, கூடாக் கனவு எதுவும் கண்டாயா...?’ அவ்வீட்டிற்குள் நுழைந்த யாழிவன் கேட்டான். அவனது கேள்விக்கு அவளால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. மகனைப் பார்த்தபடியே நின்றாள். மகனை வாறி அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது. தூங்கும் தன் பிள்ளையைக் கொஞ்ச எத்தாய்தான் விரும்புவாள்....? கடற்கரை அலையைப் போல இமைக்கரையில் நுரை. தன் கண் முன்னே இராணுவத்தின் துவக்குக்கு கணவனை இழந்து, ‘அப்பா...’ எனக் கட்டியணைத்த மூத்த மகனையும் இழந்து, எஞ்சியது இவன் ஒருவன்தான், அவனையும்...’ அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை. கையை இறுக மூடி மடிக்குள் வைத்துக்கொண்டாள்.

‘ என்ன கனவு கண்டாய் தாயே...?’

‘ அதிகாலை கனவு பலிக்குமாமே, தம்பி...’

‘ கனவு என்பது நினைவிலும், மனதிலும் வருவது. நினைவு நடந்ததை திரும்பவும் நடப்பதாகக் காட்டும். மனது யாருக்கோ நடக்க இருப்பதை தனக்கு நடப்பதாகக் காட்டும். இரண்டில் எதை நீ கண்டாய்..’

‘ என் வீட்டிற்குள் ஒரு ஆண் சிங்கம் குட்டிப்போட்டது. புதைக்குழிக்குள் அடக்கம் செய்யப்பட்ட பிணங்கள் மண் பிழந்து எட்டிப்பார்த்தன.. நூலாம்படை மொய்த்த ஓர் அரங்கமிருக்கிறது. அதற்குள் கவியரங்கம் நடக்கிறது. நரிகள் கையில் கவிதையுடன் உட்கார்ந்திருக்கின்றன. ஒரு மான் கவிதை வாசிக்கிறது. ஒரு ஓநாய் அந்த மானைக் கடித்துக் குதறுகிறது.  யானைகள் கனைக்கின்றன. புலிகள் பிளிறுகின்றன. அரங்கம் கெலிப்பதும், சிரிப்பதும், துள்ளிக்குதிப்பதுமாக இருக்கிறது. மான்கள் தெறித்து நாலாபுறமும் ஓடுகின்றன. ஒரு சிங்கம் பூச்சி மருந்து அடித்து கவிபாடிய ஒரு மானைக் கொல்கிறது...’

யாழிவன், கனவைக் கேட்டு திகைத்து அத்தாயின் முகத்தைத் தழுவுவதைப்போல பார்த்தான். குடை விரிப்பாக அவனது புருவங்கள் ஏறி விரிந்திருந்தன. ‘ என்ன கனவோ, யாருக்கான கனவோ..’ மகனையும் அவனையும் மாறி மாறி பார்த்தபடி நின்றாள்.

யாழிவன் வேட்டியைச் சுருட்டி கொடங்கைக்குள் வைத்துக்கொண்டு ஒரு கையைத் தாங்கி கால்கள் மடக்கி உட்கார்ந்தான். ‘ தாயே, கொஞ்ச நாட்களாகவே உன் மகனின் போக்குச் சரியில்லை. எந்நேரம் பார்த்தாலும் அவன் புத்தகமும் கையுமாக இருக்கிறான். துரோ என்கிற கவிஞனின் நூலை மட்டும் வாசித்தவனாக இருக்கிறான். கண்களை மூடிக்கொண்டு என்னென்னவோ எழுதுகிறான், எழுதியதைக் கிழித்தும் , கசக்கியும் எறிகிறான். எறிந்ததை திரும்பவும் எடுத்து விரித்து சுருக்கமில்லாமல் நீவி மடித்து சட்டைப்பைக்குள் வைக்கிறான். கள்ளிக்காட்டிற்குள் நிற்கிறான், காட்டாமணக்கு புதருக்குள் நடக்கிறான். ஊமத்தம் காயைப் பறித்து அதிலொரு குச்சியைச் சொருகி முகத்திற்கு நேராக நீட்டி என்னென்னவோ பேசுகிறான். அவனது பேச்சை அவனே கைக்கொட்டி ரசிக்கிறான். அவன் தன்னை கவிஞனாகவும், புலவனாகவும் நினைக்கிறான் போலும், தாயே..’.

‘ ஆமாம் தம்பி, கண்டவர்கள் அப்படியாகத்தான் சொல்கிறார்கள்...’ அவள் முந்தாணையை கையால் கசக்கி மடிக்குள் வைத்தாள்.

‘ தாயே, இளம்பிள்ளை. ஒரே பிள்ளை, தந்தையில்லா பிள்ளை வேறு. போர் ஓய்ந்தும் போர் ஓயவில்லை. இனி ஆகாத காலம் மக்களுக்கில்லை. கவிஞர்களுக்கு....’

‘ என்னய்யா இப்படிச் சொல்கிறீர்...?’

‘ ஆமாம் தாயே, கவிஞர்களைக் கொன்று கவிஞன் வாழும் காலமிது. பிடிக்காத கவிஞர்களை வசைபாடி கழிக்கிறார்கள். சாதியைத் தேடி வருத்துக்கொட்டுகிறார்கள். தன்னை விடவும் ஒருவன் மெச்சும்படியான ஒரு கவிதை எழுதிவிட்டால் அவனது சுதியும் கதியும் அவ்வளவேதான். இப்பொழுதெல்லாம் யாரும் கவிதையில் எழுத்துப்பிழை பார்ப்பதில்லை. பிறப்பையும் குடும்பப் பிழைப்பையுமே பார்க்கிறார்கள். எழுத்துக்கொண்டு எழுத்தைக் கொல்கிறார்கள். பிறந்தக்  குழந்தை அன்றே துள்ளியோட வேண்டும். இல்லையேல், குழந்தை நடக்கும் நடையைப் பாரென பேதை என்றும், குழந்தை போதையால் தவழ்கிறது என்றும் கைக்கொட்டி கெலிக்கிறார்கள்...’

‘ இப்படியெல்லாமா நடக்கிறது..?’

‘ இளங்கவி, வளர்கவி, முதுகவி என்கிற பாகுபாடெல்லாம் இங்கு கிடையாது. எழுதிப் பழகும் எவனும் முதல் கவிதையிலேயே வள்ளுவனை மிஞ்சிவிட வேண்டும், ஷேக்ஸ்பியரைத் தாண்டிட வேண்டும். வெல்ஸின் கற்பனை என்னே பெருங்கற்பனை , என் கற்பனையைப் பாரென சொல்லில் காட்டிட வேண்டும்..அந்த கற்பனையும் அவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும்.

‘ இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்..?’



‘ நானே ஒரு கவிஞன்தான். காலாவதியான கவிஞன். தேய்ப்பிறையை ஈழப்பெண்ணென்று வர்ணனை செய்துவிட்டேன். நிலவை கற்பழித்துவிட்டேனென என் குடும்பப் படத்தைத் தேடி எடுத்து, ஆபாசமாகக் கழுவி ஊற்றிவிட்டார்கள். என் பெற்றோரைக் கொன்றொழிக்கையில் பனித் தூக்கத்திலிருந்தவர்களெல்லாம், என்னை மொழியைக் கொல்கிறான், இவன் பாதகனென்று சாபம் திறித்தார்கள். என் உயிர் என் கவிதையை விடவும் மேலானது என்று கவிதை எழுதுவதிலிருந்து விலகிக் கொண்டேன். நானொன்று சொல்கிறான், கேட்பாய் தானே தாயே...’

‘ சொல்லுடா யாழி. நீ என் வயிற்றில் பிறக்கவில்லையானாலும் நீயும் என் பிள்ளைதான். சொல்லும்..’

‘ கடந்த வாரம் வீதியில் ஒரு முதுப்பெருங்கவிஞன் செத்துக்கிடந்திருக்கிறான். அவனை எடுத்து பிரேத பரிசோதனை செய்திருக்கிறார்கள். மூளை இருந்திருக்கிறது. இதயமில்லை...’

‘ அய்யகோ, அப்படியென்றால் அவர் இதயமில்லாதவரா..?’

‘ மனச்சாட்சி இல்லாதவர். இன்னொன்றையும் சொல்கிறேன்...’

‘ சொல்லுப்பா...’

‘ சமீபகால கவிஞர்களில் யாரெல்லாம் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் கேட்டுவிட்டால் போதும், அவர்களுக்குத் தெரிந்த, உறவின, பிறக்கப் போகிற குழந்தைகளின் பெயர்களை பட்டியலில் அடுக்குவார்கள். அவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் இவனெல்லாம் ஒரு கவிஞனா எனத் தூற்றிவிடுவார்கள்...’

‘ தம்பி!’

‘ தாயே, உன் மகனை அடுத்தப் போருக்குத் தலைமைத்தாங்க சொல். அவனுக்குத் தளபதியாக என்னை இணைத்துக்கொள்கிறேன். ஆனால், கவிஞனாக மட்டும் ஆக்கிவிடாதே. கவிஞர்களைக் கொல்வதற்கென்றே கருவியொன்று கண்டுபிடித்திருக்கிறார்கள். பூச்சிமருந்தின் விலை வேறு குறைந்திருக்கிறது...’.
-----
சின்னா, விழித்ததும் முகத்திலிருந்து புத்தகத்தை எடுத்தான். விரிந்த ஏட்டிற்குள் ஒரு விரலைக் கொடுத்து மூடி முன், பின் அட்டைகளைத் தடவி முன்அட்டை பக்கத்தைக் கண்டுபிடித்திருந்தான். கண்களைத் திறந்து பார்த்தான்.  அட்டையில் கவிஞர் துரோ !

‘ தாயே, இன்றைய நாள் மார்ச் 15 தானே...?’

தாய் ஓடினாள். நாட்காட்டியைப் பார்த்துவந்து ‘ ஆமாம் சின்னா,..’ என்றவாறு கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். அந்நாளைக் கேட்டதும் அவனுக்குள் உயிரூட்டம் எடுத்தது.  இந்நாளுக்காகத்தான் அவன் இத்தனை நாட்கள் காத்திருந்தான். யாரை அவன், இந்த கவிவுலகத்தின் ஆசானாக நினைத்துக்கொண்டிருந்தானோ, அவரை கவிபாடப் போகிற நாள் இது. அவனுக்கு இது முதல் மேடை, முதல் கவிதை. முதல் அமர்வு,

துரோ பற்றி அவன் எழுதியக் கவிதையை கையில் வைத்திருந்தான். புத்தம் புதிய உரூபாய்த்தாளினைக் கசங்காமல், மடங்காமல் வைத்திருப்பதைப்போல அத்தனை பத்திரமாக அக்கவிதையை அவன் வைத்திருந்தான். வசந்தக்காலம் - சூரியனின் வெட்கையையும் துடைக்கும்படியான இளந்தென்றல் - ஒரு பேரழகியின் நிரல்நிரை - தேன் தடவிய உதடுகளின் கனிரசம் - இத்தனையும் ஒன்றுகலந்த இன்பமலையை விடவும் உயர்தரமான மயக்கும் கவிஞனை நான் காட்டட்டுமா, அவர்தான் என் துரோ.

எழுதியக் கவிதையை மேடையில் வாசிப்பதைப்போல வாசிக்கிறான். கவிதையை தேன்பருகல் போல ஜெபிக்கிறான்.

‘ மகனே சின்னா, எங்கேயடா கிளம்பிவிட்டாய்..?.’

‘ கவியரங்கத்தில் கவிபாட..’

‘ வேண்டாம் மகனே, பொல்லாத சொப்பணமொன்று நான் கண்டேனடா...’

சின்னா சிரித்தான். ‘ தாயே, உன் மனதில் நிறைய வடிவங்கள் இருக்கின்றன. அதனால் கற்பனையாக கனவுகள் நிறையக் காணுகிறாய்..’

‘ விடிகாலை கனவு பலிக்குமேயடா, இந்நேரத்தில் கண்ட கண்ணகியின் கனவு பலித்தது. சீசரின் மனைவி கல்பூர்னியாவின் கனவு பலித்தது...’

‘ தாயே, எப்பொழுது நீ நல்ல கனவு காண்பது, நான் கவிபாடி துரோவிற்கு நிகராக ஆசனத்தில் அமர்வது. நான்  சகுனங்களில் நம்பிக்கை இல்லாதவன்...’

‘ போர் வேறு திரும்பவும் மூழ இருக்கிறதாம்..’

‘ போர் எங்கே தாயே முடிந்தது, திரும்பவும் மூழ...’

‘ பார்த்தாயா, பார்த்தாயா, முன்பு போல இப்பொழுது நீ பேசுவதில்லை. எப்படியெல்லாமோ பேசுகிறாய், விடலைச் சேவலின் கூவுதல்  உன் பேச்சாகியிருக்கிறது.’

‘ கவிபாட கிளம்புகின்ற எனக்கு சீர் கொடுக்கலாம், அணிகள் நீட்டலாம். தாயே நீ, முரண் அல்லவா காட்டுகிறாய்...’

‘ மகனே, இன்று ஒரு நாள் என் பேச்சை நீ கேட்கத்தான் வேணும்...’

‘ என் பேச்சைக் கேட்க நூறு பேர் எனக்காகக் காத்திருக்க, உன் பேச்சைக் கேட்க, இது நேரமும் அன்று, காலமும் அன்று..’

‘ மகனே, எனக்கு மிஞ்சிய ஒரே பிள்ளை நீ...’

‘ தாயே, உன் உயரத்தை மிஞ்சிய தனயன் நான்.  என்னை வாழ்த்தி வழியனுப்பி வை, தாயே...’

‘ வாடா மகனே..’

சின்னா நடந்தான். அவன் மகன் முழுவதும் துரோ. துரோவைப் பாடப் போகிற உந்துதல் அவனை இளம்மானெத் துள்ளச் செய்தது. அரும்பு மீசையில் இயைபு, தளை முளைத்தது.அதோ! கவிபாடும் சீரரங்கம். இலக்கணத்தால் வடிக்கப்பட்ட இலக்கியம் போல அத்தனை கச்சிதம். ஒற்றை அரங்கம். ஒரு வாசல். ஒரே கதவு. ஒரேயொரு மேடை. அரங்கத்திற்கு வெளியே ஒவ்வொரு பக்கமாக ஒதுங்கி மிதக்கும் பாசியைப் போல கவிஞர்கள். சின்னா, ஒரு கவிதையின் கடைசி வரியையும் நெருங்கிவிட்டவனைப்போல வாயிலை நெருங்கினான். அரங்கத்திற்குள் நுழைந்தான். ஒரு கை தடுத்து நிறுத்தியது. ‘ அடேய் நில். உன் பெயர் என்ன?,  நீ எங்கே போகிறாய்?, என் கேள்விக்கு நேரான பதில் சொல்..’

சின்னா திகைத்து நின்றான். ‘ நான் கவிஞன், இளங்கவிஞன், முதல் முறையாக கவிபாடப் போகும் பிஞ்சுக்கவிஞன்,’

‘ எங்கே போகிறாய்...?’

‘ கவிஞன் எங்கே போவான்...’

‘ கவியரங்கத்திற்கு...’

‘ ஆமாம்...’

‘ சரி,உன் பெயரென்ன...?’

‘ சின்னா..’

அவனை ஒரு கை தடுக்க, ஒரு கை கண்களை மறைக்க, இழுக்க, தள்ள,... அந்த இடத்தில் ஒரே களேபரம்.

‘ நான் கவிஞன், புலவன், கவிபாடி, என்னை விட்டுவிடுங்கள்...’ கூக்குரலெடுத்துக் கத்தினான் சின்னா. தன் வயதையொத்த கவிஞரிடம் கைக்குலுக்கிப் பேசிக்கொண்டிருந்த துரோ, களேபரக் குரல் கேட்டதும் திரும்பி சின்னாவைப் பார்த்தார். அவர் பார்த்ததும் அவனைப் பிடித்திருந்த கைகள் இறுக்கம் தளர்ந்தன. கண்களைப் பொத்திய கைகள் விலகின. சின்னா கண்களைத் தேய்த்துக் கொண்டு வெளியைப் பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் காலையில் யார் முகத்தில் விழித்தானோ, இன்று அவன் யார் குறித்து கவிபாட இருக்கிறானோ, அவர் அவன் முன்னே நின்றுகொண்டிருந்தார். அவனது உதடுகள் துரோ, துரோ,.. என்றவாறு உச்சரித்தன..

தன் ஆதர்ச கவிஞரைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் பேரானந்தம் கொண்டான். அவனது கண்கள் அவரை நோக்கித் தாவின. ‘ நான்...நான்..சின்னா...கவிஞன். உம்மைப் பாடப் போகிறவன்...’

துரோ அவனைக் கூர்ந்து பார்த்தார். ‘ சின்னாவா, கவிஞனா, என்னைப் பாடப் போகிறவனா..?,  கவிதையைப் பிழையாக எழுதி மொழியைக் கொல்கிறவன் நீதானா, உன்னைத்தான்  இத்தனை நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். யாரங்கே, இவனைப் பிடியுங்கள். இவன் மீது  பூச்சிமருந்து அடித்து கொன்றொழியுங்கள்..’

அந்த ஒரு கணம் சின்னா ஆடித்தான் போனான். அவனது விழியும் முகமும் நாசியும் ஒரு சேர சிவந்துடித்தன. துரோ நீயும் கூடவா ?


(குறிப்பு - இக்கதை ஜூலியஸ் சீசர் என்கிற படைப்பில் 'சின்னா' என்கிற கவிஞரைத் தழுவி எழுதப்பட்டது)


- படைப்பு தகவு ஜூன் இதழ்

ஓவியம் - நன்றி - அன்பழகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சவரக்கத்தி

அ ப்பா, வழக்கமாக க் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையை த் திறந்திருந்தேன். அப்பா, எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாக கண்ணாடியை எடுத்து வெளிச்சுவற்றில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன்.   அப்பா கடைக்குளில் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலிய...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

புதுக்கோட்டை எழுத்தாளர்கள்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 01 #அகிலன் - சித்திரப்பாவை.  நான் வாசித்த முதல் நாவல். கரம்பக்குடி பள்ளி தமிழாசிரியர் திரு #மலையாண்டி அவர்கள்  இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த நாவலை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்ததற்குக் காரணம், இந்த நாவலிலுள்ள #மாணிக்கம் என்கிற கதாபாத்திரம். "வாழ்க்கை மிகவும் அழகானது. அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தி விடாதே". புதுக்கோட்டை எழுத்தாளர் -02  #புதுகை_சஞ்சீவி, சரக்கு வாகன ஓட்டுநர். மகத்தான சிறுகதை எழுத்தாளர்.  நிகழ் இலக்கிய நிகழ்வில், இவரை நான் முதலில் சந்தித்தேன். இவரது சமீப வெளியீடான #நிழல்_பிம்பங்கள் சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு நாள் சொன்னார், " இந்தத் தொகுப்பு ஓரளவேனும் வாசகர்களால் கவனிக்கப்படுமென எதிர்பார்த்தேன். சற்றே எனக்கு ஏமாற்றம்தான்".  பதிலுக்கு நான் சொன்னேன்,"எனக்கோர் ஆசை,  #நிழல்_பிம்பங்கள் போல ஒரு சிறுகதையை நான் எழுதிப் பார்த்திட வேண்டும் " என்று.  புதுக்கோட்டை எழுத்தாளர் - 03  #பெரி_சே_இளங்கோவன், அறந்தாங்கியில் வசித்து வரும் இவர், பட்டதாரி தமிழாசிரியர். நான், புதுகை புழங்க...