முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொசக் குட்டி

டையன் எப்பொழுது  கொல்லைக்காட்டிற்குச் சென்றாலும் திரும்பி வருகையில் ஏதேனும் ஒன்றை இழுத்து வரவே செய்வார். நரி, கொக்கு, பாம்பு,.. இப்படி ஏதேனும் ஒன்று அவரது கையில் செத்து காலும், வாலும் தரையில் இழுபட்டுக்கொண்டு வரும். சில நேரம் அவர் ஏதேனும் ஒன்றை உயிருடன் பிடித்து வருவதும் உண்டு.

‘வவ்...வவ்...’ தெரு நாய்கள் அவரைக்கண்டு ஆலவட்டமடிக்கும். தொண்டைத் தண்ணீர் வற்றக் குரைக்கும். நாய்கள் ஊரையே கூட்டுவதைப் போல குரைத்துக்கொண்டிருந்தால் சடையன் வீடு திரும்புகிறார் என்று அர்த்தம். அவரது பேரன் அருணும் பேத்தி வினுவும் வாசல் வரைக்குமாக ஓடி வந்து எட்டிப் பார்ப்பார்கள். ஒரு நாள் அவர் ஒரு நரியை உயிருடன் பிடித்து கழுத்தை கால்களுடன் சேர்த்து இறுகக் கட்டி தூக்கிக்கொண்டு வந்திருந்தார். ஊரும், தெருவும் வீடு வரைக்கும் வந்து நெற்றி சுருங்கப் பார்த்துச் சென்றது. இன்னொரு நாள், ஆளுயர சாரைப் பாம்பை அடித்து வால்பகுதியைப் பீச்சாங்கையால் பிடித்து இழுத்துகொண்டு வந்தார். தெருவே நாலாபுறமும் தெறித்து ஓடியது. இப்படியாக சடையன் பிடித்து வரும் பறவைப்பட்சிகள் ஊரைத் திரட்டவும், சில நேரம் விரட்டவும் செய்யும். அவரது கைக்கு ஒன்றும் பிடிபடாவிட்டால் இருக்கவே இருக்கின்றன, பட்டமரங்கள். வேரோடு பெயர்த்து இழுத்துகொண்டு வருவார்.

அன்றைய தினம் அவர் பிடித்து வந்திருந்தது ஒரு முயல். உயிர் முயல். இரண்டு கைகளால் கச்சிதமாகப் பொத்தித் தூக்கும் அளவிற்கு  அடக்கமாக இருந்தது. கொழுகொழுவென உடம்பு. வால் சிறுத்து, வயிறு பெருத்து, சாம்பல் நிறத்தில் அத்தனை அழகாக அது இருந்தது.

தூரத்தில் சடையன் வரும்போதே அதை வினு பார்த்துவிட்டாள். ‘ அய்...’ என்று துள்ளிக்குதித்தாள்.     ‘ என்ன வினு...?’ என்று கேட்டான் அருண்.

‘ அப்புச்சி மொச கொண்டுக்கிட்டு வருது...’

முயலின் கால்கள் அசைவது தெரிந்தது. இருவரும் கார் ஓட்டுவதைப் போல வளைந்து, நெளிந்து உதடுகளைப் பிதுக்கி ‘டர்ர்ர்ர்.....’ என்று ஒலி எழுப்பியவாறு, அவரை நோக்கி ஓடினார்கள். அருண்தான் முதலில் முயலைத் தொட்டான். வாலின் பெரும்பகுதி சாம்பல் நிறத்திலிருந்தது. மிருதுவான தோல். மடல் போல் விரிந்திருந்தன அதன் காதுகள்.

ஒரு செவ்வாழைத் தாரினை அதன் தண்டைப் பிடித்து தூக்கி வருவதைப் போல, முயலின் காதுகளைப் பிடித்து தூக்கிவந்திருந்தார். அப்படியாகத் தூக்கிக்கொண்டு வந்தது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அம்முயலை ஒருவன் விலைக்குக் கேட்டான். சடையன் ஒரு கணம் நின்று முயலைக் கேட்டிருந்தவரின் முகத்தின் முன் தூக்கி, அப்படியும், இப்படியுமாகத் திருப்பி, ரெண்டு கிலோ தேறும் என்றார். அவர் ஒரு விலை சொல்ல , கேட்டிருந்தவர் இன்னொரு விலை சொல்ல,...சடையன் நடக்கத் தொடங்கினார்.

‘ மொச எனக்குதே...’

‘ ம்கூம் எனக்குதே...’



அருணும் வினுவும் போட்டா போட்டி போட்டார்கள். வினு கைதட்டிக்கொண்டே உற்சாகமாகக் குதித்தாள். முயல் அவள் பக்கமாகத் தலை திரும்பிப் பார்த்தது. கண்களை உருட்டித் திரட்டி விழித்தது. முயலைப் போலவே அவளும் விழித்தாள். கண்களைச் சிமிட்டினாள். அவளது செய்கை பலரையும் சிரிக்க வைத்தது.

முயல் வீடு வந்து சேர்ந்தது.

முயலைப் பார்த்ததும் சிவப்பாயிக்கு என்னவோபோல் இருந்தது. ‘இந்த மனுசன் ஏன் இத இழுத்துக்கிட்டு வரணுமாம்...’ என்று வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

‘ அடியே, கறியிலே நல்ல ருசியான கறி முயல்கறிதான். தெரியாத மாதிரி பேசுறீயே...’ என்றபடி முயலைத் தூக்கிப்பிடித்தார் சடையன்.

சிவப்பாயி கையில் ஒரு பிடி விறகு இருந்தது. விறகைத் தோளில் சாய்த்துக்கொண்டு குனிந்து முயலின் முகத்தைப் பார்த்தார். ‘ என்னடி இப்டி பார்க்கே, மூஞ்சுற பார்க்கிற மாதிரி, இது மொசடி. மான் கறிக்கு அடுத்து உசத்தியான கறி மொசக்கறித்தான். ஆக்கி வைச்சா ஆறுறதுக்குள்ள தின்னுப்புடலாம்...’ என்றார் சடையன்.

‘ ஆக்கி வச்சா யாருதான் தின்ன மாட்டாக. கொன்னு, உரிச்சி, கொத்தி அள்ளி வராம, உசிரோட கொண்டுக்கிட்டு வாறியளே. இத எப்படி சமைக்கிறதாம்...?’.

‘ கோழிய கழுத்தத் திருகிக் கொல்லுற மாதிரி இதையும் கொன்னுபுடு புள்ள..’

‘ இந்த உசிரக் கொல்ல யாருக்கு மனசு வரும். என்னால முடியாதுங்க...’ என்ற சிவப்பாயி, முயலின் கண்களைத் துழாவிப் பார்த்தார்.  ‘ அது பார்க்கிறத பாரு. கொழந்த மாதிரி... என்னால இந்த உசிர கொல்ல முடியாது. எங்கேயாச்சும் குடுத்துக் கொன்னு எடுத்துட்டு வந்தா ஆக்கி வக்கிறே..’ என்று சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றுவிட்டார்.

சடையன் பின்வாசலுக்கு அருகில் ஒரு பிரம்புக் கூடைக்குள் முயலை வைத்தார். அதன் மீது இன்னொரு கூடையை வைத்து மூடினார். அருணும், வினுவும் கூடைக்கு வெளியே தலையை வைத்து நெடுவாக்கில் படுத்து அதன் அழகைப் பார்த்தார்கள். குட்டியான கண்கள், குவிந்த உதடுகள், ஏறி இறங்கிய நெற்றி. எடுத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது இருவருக்கும்.

சடையன் வீட்டிற்குளிலிருந்து இரண்டு கேரட்டும், கொஞ்சம் கோஸ் இலைகளையும் எடுத்து வந்தார். கூடையை ஒரு பக்கமாகத் தூக்கி அவற்றைக் கூடைக்குள் எறிந்தார். முயல் இரண்டையும் ஒரு முறை நுகர்ந்து மட்டும் பார்த்தது. தின்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

மீண்டும் அருணும் வினுவும் போட்டி போடத் தொடங்கினார்கள்.

‘ எனக்குதே இந்த மொச..’ என்றாள் வினு.

‘ இல்ல...எனக்குதே...’ என்றான் அருண்.

‘ இந்த மொசல வச்சி நீ என்ன செய்வ...?’

‘ வெளையாடுவேன், நீ என்ன செய்வே...?’

‘ நா குளிப்பாட்டி, பொட்டு வச்சி, அதோட கழுத்தில மணி கட்டிவிடுவேன்...’

‘ அய்யே, அது என்ன பாப்பாவா, பொட்டெல்லாம் வக்கணுங்கிறே....?’

‘ பாப்பா மாதிரிதானே இருக்கு...’, ‘ அண்ணே, கால்கள்ள வளையல் போட்டா அழகா இருக்கும்ல...’., ‘ அண்ணே அதோட வாலப் பாறேன். தாத்தா மீச மாதிரி இருக்கு...’ அவள் அப்படி சொன்னதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. இருவரும் முயலைப் பார்க்க, சிரிக்கவென இருந்தார்கள்.

அங்கு வந்த சடையன் ‘ பார்க்க மட்டும் செய்யுணும். தொறந்து விட்டுறக் கூடாது...என்ன...?’ அதட்டுவதைப்போல சொல்லிவிட்டு முயலைக் கொன்று உரிக்க ஆள் அழைத்துவரச் சென்றுவிட்டார்.

இருவரும் முயலைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள்.  வெளியில் ஓடி புல் பிடுங்கி வந்தார்கள். முயல் பின் கால்களை உட்புறமாக மடக்கி, முன்னங்கால்களை மெல்லத் தாங்கி உட்கார்ந்திருந்தது.

‘ நாம ரெண்டு பேரும் புல்லைப் போடுவோம். யாரோட புல்லைத் திங்குதுனு பார்ப்போம்...’,    

‘ சரிண்ணே...சூப்பர் விளையாட்டு...’

‘ யாரோட புல்லத் தின்னுதோ, அவங்களுக்குதே மொச...நான்தான் ஃபர்ஸ்ட்டு  போடுவேன்...’ என்றான் அருண். அவள் கண்களைக் கசக்கினாள்.

‘ என்னாச்சு வினு.....?’

‘ புல்ல நீ மொதல்ல நீ போட்டா ஓம் புல்லதானே ஃபர்ஸ்ட்டு திங்கும்...’

‘ சரி ரெண்டு பேரும் போடுவோம்...’

இருவரும் மேல் கூடையைத் திறந்து முயலுக்குப் புல்லைப் போட்டார்கள். முயல் எழுந்திருக்கவில்லை. நுகர்ந்து பார்க்கவில்லை. காது மடல்களைக்கூட ஆட்டாமல் உட்கார்ந்தபடியே இருந்தது.

‘என்னாச்சுண்ணே மொசலுக்கு..?’

அவள் முயலின் முகத்துப் பக்கமாகச் சென்று பார்த்தாள். முயல் கண்களை மூடி அழுவதைப் போலிருந்தது. தலை தொங்கிப்போய், காது மடல்கள் தளர்ந்துபோயிருந்தன. ‘ அண்ணே, மொச சாகப் போகுதுண்ணே...’ அவளது உதடுகள் துடித்தன.

இருவரும் கூடையிலிருந்து சற்று விலகி நின்றார்கள். கைகளைத் தட்டி ‘ உச்சூ...உச்சூ...’ என்றார்கள். முயல் கண்களைத் திறக்கவில்லை. அருண் ஒரு குச்சியை எடுத்து முயலின் காதிற்குள் கிச்சுக்கீச்சு மூட்டினான். முயல் காதுகளை ஆட்டவில்லை. முதுகை மெல்லத் தட்டினான். முதுகைக் குலுக்காமல் வெறுமென உட்கார்ந்திருந்தது..

‘ அண்ணே மொச. செத்துதானே போகப்போவுது...’ வினுவுக்கு அழுகை வந்தது. தரையோடு படுத்துவிட்டிருந்தாள்.

முயல் இறுக மூடியிருந்த கண்களை  மெல்லத் திறந்தது. அதன் கண்கள் கலங்கிப்போய், பார்க்க சிவப்பாக இருந்தன. கண்களிலிருந்து கண்ணீர் வடிவது போல் இருந்தது. அதன் உடம்பு விடைப்பதைப் போலவும், வயிறு மெல்ல ஊதி, மெலிவதைப் போலவும் இருந்தது. வினு கையிலிருந்த குச்சியால் கேரட்டை அதன் வாயருகே தள்ளினாள். முயல் திரும்பவில்லை.

வீட்டிற்குள் ஓடினான் அருண். ‘ அப்பாயி, மொசல வந்து பாரேன்...’

அவர் அம்மியில் மிளகாய் மல்லி அரைத்துக்கொண்டிருந்தாள். ஒரு காலை அம்மி கட்டுக்கு கொடுத்து , மறுகாலை பின்பக்கமாக நீட்டி , கைகளை முன்னே, பின்னே நீட்டு இழுத்து அரைத்த மல்லியை வழித்து அம்மியின் மையத்தில் வைத்து குழவியை ஒரு பக்கமாகத் தூக்கி அழுத்தி அரைத்துகொண்டிருந்தாள்.

‘ அப்பாயி, மொச பாவம்...சாவப்போவுது’

 ‘ சாவாது கண்ணு... தூங்கியிருக்கும்...’

‘ வந்து பாரு அப்பாயி..’

‘ தோ வர்ரேன் கண்ணு’

சிவப்பாயி பேரனைத் திரும்பிப் பார்க்கவில்லை. நெற்றியில் வழிந்த வியர்வையைக் கூட வழிக்காமல் மல்லியை அரைத்து , வழித்துவிட்டு, ஒரு தேங்காய்த் துண்டை அம்மியின் மையத்தில் வைத்து நைத்து ‘ வேகு, வேகு..’ வென இழுத்தாள்.

அருண் ஓடி வந்தான். முயலைப் பார்த்தான். முயல் முன்னே விடவும் சோர்ந்துபோயிருந்தது. கண்கள் இமைகளுக்குள்ளாக இடுங்கிப் போயிருந்தன. வாய் ஆ...வெனத் திறந்தபடியே இருந்தது. முகம் களையிழந்து, செத்துவிட்டதைப் போலிருந்தது.

‘ அண்ணே, அதுக்கு தண்ணீ வப்போம்ண்ணே...’ என்றவள் அவளே ஓடிச்சென்று ஒரு தட்டில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

‘ எப்படிண்ணே வக்கிறது...?’

‘ கூடையைத் திறக்கலாம்,...’

 ‘ ஓடிட்டா...?’,

‘ பிடிச்சிடலாம்..’

‘ அண்ணே, மொசலுக்கு என்னமோதாண்ணே ஆச்சு...’,

‘ ஆமாம் வினு. தண்ணீ குடிக்க மாட்டேங்குது, புல்ல தின்ன மாட்டேங்குது,..’

வினுவிற்கு, கொஞ்ச நாட்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு  செத்துப்போன ஆட்டுக்குட்டி நினைவிற்கு வந்தது. அந்த ஆட்டுக்குட்டி இப்படித்தான், வாயைத் திறந்து வைத்துகொண்டு,  மூச்சை விட முடியாமல் விட்டுக்கொண்டு, கண்கள் இமைக்குள் சொருகிப்போய், காது, கால்களை அசைக்காமல்  செத்துப்போய்விட்டது.

‘ அண்ணே, நம்ம ஆட்டுக்குட்டியும் சாகிறதுக்கு முன்னாடி இப்படிதானே பண்ணுனுச்சு...’

 ‘ அப்படிச் சொல்லாதே வினு... அப்றம் மொச நெஜமாவே செத்துப் போயிடும்...’

அவள் நாக்கைக் கடித்துகொண்டாள். தலையில் கொட்டிக்கொண்டாள்.

‘ ஓடிப்போயி அப்புச்சிய கூப்பிட்டு வரலாமா...?’ என பரபரத்தான் அருண்.

‘ சரிண்ணே...’

இருவரும் ஓடினார்கள். எங்கு தேடியும் அப்புச்சியைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.  ஏமாற்றத்துடன் திரும்பிவந்தார்கள். இந்நேரத்திற்கு முயல் செத்துப்போயிருக்கும். வெள்ளை முழி வெளியே தள்ள, வயிறு உப்பிப்போய், செத்துப்போன ஆட்டுக்குட்டியைப் போலவே செத்துப் போயிருக்கும்... அதை நினைக்க நினைக்க வினுவுக்கு அழுகை வந்தது.

இருவரும் வீட்டை நோக்கி ஓடி வந்தார்கள். அப்புச்சி தலையைச் சொறிந்து கொண்டும், அப்பாயி இடுப்புக்குக் கையைக் கொடுத்தும் நின்றுகொண்டிருந்தார்கள்.

‘ என்னாச்சு?’

அருணும் வினுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே மெல்ல நடந்து முயல் அருகே வந்தார்கள்.

‘ அய்...’ என்று கத்தினாள் வினு.

முக்கால் உயிர் போயிருந்த முயல் பிழைத்திருந்தது. சில நிமிடங்களுக்கு முன்னர்தான் அது குட்டிகளை ஈன்றிருந்தது.

காது மடல்களை தாழம்பூ மடல்களைப்போல தூக்கிக்கொண்டு தலையைத் திருப்பி வினுவைப் பார்த்தது. அது ஈன்ற இரண்டு குட்டிகள் முயல் பொம்மையைப் போல் அத்தனை அழகாக இருந்தன. அருண் ஓடிச்சென்று ஒரு குட்டியைத் தூக்கினான். குட்டியூண்டு கால்கள், கண்கள். பஞ்சு போல, பூவைப்போல மிருதுவான சருமம்,...

வினு, தாய் முயலைத் தூக்கி முதுகைத் தடவிக்கொடுத்தாள். அதன் பின் பகுதி இரத்தத்தால் தோய்ந்துபோயிருந்தது.


                                                - செப்டம்பர் 22, 2019 காமதேனு.                                                                                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சவரக்கத்தி

அ ப்பா, வழக்கமாக க் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையை த் திறந்திருந்தேன். அப்பா, எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாக கண்ணாடியை எடுத்து வெளிச்சுவற்றில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன்.   அப்பா கடைக்குளில் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலிய...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

புதுக்கோட்டை எழுத்தாளர்கள்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 01 #அகிலன் - சித்திரப்பாவை.  நான் வாசித்த முதல் நாவல். கரம்பக்குடி பள்ளி தமிழாசிரியர் திரு #மலையாண்டி அவர்கள்  இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த நாவலை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்ததற்குக் காரணம், இந்த நாவலிலுள்ள #மாணிக்கம் என்கிற கதாபாத்திரம். "வாழ்க்கை மிகவும் அழகானது. அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தி விடாதே". புதுக்கோட்டை எழுத்தாளர் -02  #புதுகை_சஞ்சீவி, சரக்கு வாகன ஓட்டுநர். மகத்தான சிறுகதை எழுத்தாளர்.  நிகழ் இலக்கிய நிகழ்வில், இவரை நான் முதலில் சந்தித்தேன். இவரது சமீப வெளியீடான #நிழல்_பிம்பங்கள் சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு நாள் சொன்னார், " இந்தத் தொகுப்பு ஓரளவேனும் வாசகர்களால் கவனிக்கப்படுமென எதிர்பார்த்தேன். சற்றே எனக்கு ஏமாற்றம்தான்".  பதிலுக்கு நான் சொன்னேன்,"எனக்கோர் ஆசை,  #நிழல்_பிம்பங்கள் போல ஒரு சிறுகதையை நான் எழுதிப் பார்த்திட வேண்டும் " என்று.  புதுக்கோட்டை எழுத்தாளர் - 03  #பெரி_சே_இளங்கோவன், அறந்தாங்கியில் வசித்து வரும் இவர், பட்டதாரி தமிழாசிரியர். நான், புதுகை புழங்க...