முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சவரக்கத்தி

ப்பா, வழக்கமாகக் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையைத் திறந்திருந்தேன். அப்பா, எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாக கண்ணாடியை எடுத்து வெளிச்சுவற்றில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன். 

அப்பா கடைக்குளில் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலியில் விசாலமாக உட்கார்ந்துகொண்டு தலையை நாற்காலியின் மேற்கட்டையில் சாய்த்து ஒரு பக்க கையைத் தூக்கி அக்குளைக் காட்டி உட்கார்ந்திருக்க, அப்பா ஒரு துண்டை எடுத்து உதறி அக்குளுக்குக் கீழாக விரித்து பிளேடை எடுத்து கையால் அப்படி, இப்படியுமாக இரண்டு முறை உராய்த்து மேலிருந்து கீழாக ‘சரட்...சரட்...’ என வழித்து அதை விரலால் எடுத்து ஒரு பேப்பரில் வைப்பார். அப்பாவிற்கு அக்குளைக் கொடுப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு சுகத்தில் இமை மூட, அப்பா அதை மேலிருந்து கீழாக வழித்து பேப்பரில் வைத்து ஒரு பெட்டிக்குள் போடுவதைப் பலமுறை கவனித்திருக்கிறேன்.

ஒருநாள், கடைக்குள் அப்பா இல்லாத நேரம் பார்த்து கத்தரிகோலை எடுத்து, விரல்களால் ‘ கிரிச்,கிரீச்..’ என ஒலியெழுப்பிக்கொண்டிருக்க, திடீரென்று அப்பா வந்துவிட்டார். ஒரு பெரிய சீப்பை எடுத்து ' இதை இனிமே நீ எடுப்பியா....எடுப்பியா....' என்று கேட்டுக்கொண்டே என்னை அடித்தது இன்னமும்  நினைவில் இருக்கிறது.

அப்பா, ஏன் என்னை அடித்தார்,.. என அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இரவு தூக்கத்தின்போது அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. 'புள்ளைய கடையில வச்சி நல்லா அடிச்சிப்புட்டேண்டீ ….’ என அப்பா சொல்ல, அம்மா ‘அய்யய்யோ ஏன் அடிச்சீங்க…’ என்று பதறினாள்.

‘ நான் செய்ற தொழிலயே என் புள்ளையும் செய்யக் கூடாதுன்னுதானே இவ்ளோ கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறேன். நான் பார்க்கவே அவன் கத்திரியை எடுத்தா எப்படிப் புள்ள,...’ என்று சொல்லும்போது அப்பாவின் குரல் உடைந்ததை உணர முடிந்தது.

அப்பாவின் கடை வெறும் கூடாரம் அளவிலேயே இருந்தது. மூன்று பக்கமும் மண் சுவர்கள். உடைந்துபோன ஓட்டுக் கூரை. சாக்கு போர்த்திய ரீப்பர் கதவு. கைக்கு எட்டும் உயரத்தில் ஒரு குண்டு பல்பு. மின்விசிறி வசதி கிடையாது. இரு பக்க மண் சுவற்றில் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளும் படியாக இரண்டு கண்ணாடிகள். கண்ணாடியையொட்டி நான்கைந்து சீப்புகள். ஒரே ஒரு மர நாற்காலி, வாடிக்கையாளர்கள் உட்கார அதன் மேல் ஒரு துண்டு,... அவ்வளவேதான், அப்பாவின் கடை.

நான் கடையைத் திறக்கையில் கடை முழுவதும் வெறும் முடிகளாக இருந்தன. ஒரு வாரத்திற்கு முந்தைய முடிகள். முடிகளைக் கூட்டிப் பெருக்கி சுவரின் மூலையில் ஒதுக்கி,  அக்குள் முடிகள் வழிக்கப்பட்ட கொசகொசத்த, நுரைப்பான முடிகளை முறத்தால் அள்ளி சாக்கிற்குள் திணித்தேன்.   இன்னொரு மூலையில் இரு பாதிகளாக உடைக்கப்பட்ட பிளேடுகள் கிடந்தன. அதை அள்ளி பழைய தினசரியில் போட்டலம் போலச் சுருட்டி  சாக்கிற்குள் திணித்தேன். கையோடு அதை எடுத்துப்போய் ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் எறிந்துவிட்டு வந்தேன்.

நான் திரும்பி வருகையில் கடைக்குள் செய்தித்தாள் விழுந்து கிடந்தது.
அதை  எடுத்து வாடிக்கையாளர் உட்காரும் இருக்கையில் வைத்துவிட்டு, துண்டால் நாற்காலியைத்  துடைத்து கையில் விபூதியைக் கொட்டி தண்ணீரால் குழைத்து கண்ணாடியைப் ‘பளிச்’செனத் துடைத்தெடுத்தேன்.

ஒரு சிறுவன் ஓடி வந்தான். கடையை எட்டி நாலாபுறமும் பார்த்தான். ' கடையில யாருமில்லையா..?' என்று கேட்டு நின்றான்.

சொல்லுப்பா, நான்தான் இருக்கேன்ல...'

 ஒரு பெரியவர் இருப்பாரே ...?'

 அவருக்கு முடியல’

 நீங்க யாரு..?'

' நான் அவரோடப் பையன்...'

அச்சிறுவன் அதற்கு மேல் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. வந்த வேகத்தை விடவும் வேகமாக ஓட்டமெடுத்தான். சற்று நேரத்தில் திரும்பவும் வந்தான். ' தாத்தா ஆஸ்பத்திரிக்குப்  போகணும்...சேவ் பண்ண  கத்தரி, பிளேடு எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரச்சொல்றாரு...’

'  பெரியவரோட பையன்தான் கடையில இருக்கார்னு சொன்னியா…?’

' ம்…சொன்னேன். உன்ன வரச் சொல்றாரு...’

சின்னப் பையன்தான். அவனது துருத்தல் பேச்சு எனக்குக் கொஞ்சம் வலியூட்டச் செய்தது.

‘ உன் தாத்தா ஆஸ்பத்திரி வரைக்கும் ஏன் போகணும்? டாக்டரை கூப்பிட்டால்தான் வீட்டுக்கே வருவாரே…?’

‘ அது எப்படி? டாக்டர வீட்டுக்குக் கூப்பிட்டு விட முடியுமா?’

‘ அப்ப நான் மட்டும் வருவேனா..?’

அவன் மெல்ல நழுவுவதாக இருந்தான். எனக்குச் சிரிப்பு வந்தது. அதே நேரம் அப்பாவின் மீது கோபமும் வந்தது. அப்பா வீடு வீடாகச் சென்று முடி திருத்தும் வேலையைச் செய்கிறார் என்றுதானே தாய் மாமன்கள் சேர்ந்து வாடகைக்கு ஒரு கடையைப் பிடித்து இந்தக்கடையை வைத்துக்கொடுத்தார்கள்! அதன் பிறகும் அப்பா வீட்டிற்குச் சென்று முடித்திருத்தம் செய்திருக்கிறாரே...நினைக்கையில் எனக்குள் குறுகுறுத்தது.

அந்த சிறுவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தாலும் மெல்லிய பயம் என் மனதிற்குள் இழையோடியது. ஒரு வேளை அவர் கடைக்கு வந்துவிட்டால், வந்து நாற்காலியில் அமர்ந்துவிட்டால், என்னால் அவருக்கு முகச் சவரம் செய்துவிட முடியுமா…?  கேள்விகள் எனக்குள் உதைத்தது.

எனக்குள்ளாக அப்பா வந்து போனார். தொழில் கற்றுக்கொள்ள யார் கடைக்கு வந்தாலும் அப்பா, அவரது கையில் சவரக் கத்தியைக் கொடுத்து, தான் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு முகச் சவரம் செய்துவிடச் சொல்வார். புதிதாக வேலைக்கு வந்திருப்பவனின் முகத்தையும் கையில் லாவகத்தையும் கவனிக்கச் செய்வார். அவனது முகம் கோணினாலோ, கை நடுங்கத் தொடங்கினாலோ இத்தொழிலுக்கு லாயக்கற்றவன் என்று அனுப்பிவிடுவார். அவரது சோதனையில் தேர்ந்தவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். அவர்கள் ஆறு கடை தள்ளி பெரிய அளவில் கடை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நான் இத்தொழிலுக்கு ஒத்துவருவேனா, எனும் கேள்வி எனக்குள் துளைத்தது. யாரைக் கொண்டு சோதித்துப் பார்ப்பது…? நான் சோதிக்கப்போகும் முகம் சற்று முன் வந்துப்போன சிறுவனின் தாத்தா தானோ…? அதை நினைக்க சிரிப்பும், பதட்டமும் ஒரு சேரத் தொற்றிக்கொண்டன.

அப்போது, என் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் வசிக்கும் பையன் கடைக்கு ஓடிவந்தான்.  அவனது முகம் வியர்த்திருந்தது. அவன் சற்று பதற்றமாகவே இருந்தாலும் நின்று நிதானித்துப் பேசத் தொடங்கினான்.

‘ அண்ணே, அம்மா உன்ன கடையச் சாத்திட்டு வெரசா வீட்டுக்கு வரச் சொன்னுச்சு…’

‘ஏன்டா தம்பி...?’ என்றேன். அவன் முகத்தைத் துடைத்துக்கொண்டவனாய்,‘ தெரியல. ஆனா வெரசா வரச்சொன்னுச்சு…’ என்றவாறு மூச்சு வாங்கி நின்றான்.

இதுநாள் வரைக்கும் செவ்வாய்க் கிழமை தவிர மற்ற நாட்களில் அப்பா கடையைச் சாத்தியதில்லை. அப்பா கடைக்கு வராத ஒரு வாரம்கூட கடை திறக்கவும், பொழுதுபட்டால் சாத்தவுமாகவே இருந்தது. எனக்குக் கல்லூரி விடுமுறை என்பதால், இன்றைக்குத்தான் நான் கடையைத் திறந்தேன். அதையும் சாத்தும்படியாகிவிட்டது. யோசனையுடன் கடையைச் சாத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

வீடு ஒரே இரைச்சலாக இருந்தது. அம்மா தலைவிரிகோலமாகக் கதறிக்கொண்டிருந்தாள். சுற்றிலும் பெண்கள் குழுமி உட்கார்ந்திருந்தார்கள்.  பங்காளிகள், ஊர் ஆட்களிடம் வேலை ஏவிக்கொண்டிருந்தார்கள். அப்பா இறந்துவிட்டிருந்தார். 

‘அப்பாவைக் குளிப்பாட்டும் சடங்கு தொடங்கியது. தேங்காய், ஊதுவத்தி, விளக்கு, படி, நெல், செப்புக்குடம்…. எடுத்துவர உறவினர்கள் பரபரப்புடன் விரைந்தார்கள். நான் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அப்பாவிற்கு முன் வழுக்கை என்பதால் அவ்விடத்தைத் தவிர மற்ற இடங்களில் முடிகள் கொசகொசத்துப் போயிருந்தன.

எத்தனையோ பேருக்கு முகச்சவரம் செய்துவிட்டவர் அப்பா. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமா...? நீண்ட கால வாடிக்கையாளர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவரது வீட்டிற்கே சென்று  பிரேதத்திற்கு முகச்சவரம் செய்துவிடுவார்.  மீசையை அழகாகக் கத்தரித்து, அக்குள் முடிகளை எடுத்து,.. அம்முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டுதான் வீடு திரும்புவார். அவரது இச்செய்கை பலநேரம் அம்மாவைக் கோபமூட்டச் செய்திருக்கிறது. பல முறை சண்டையே வந்திருக்கிறது.

அப்போதெல்லாம் அப்பா சொல்வார், ‘ அடியே, நீ அதைப் பிணமாப் பார்க்கிறே... நான் என் வாடிக்கையாளராப் பார்க்கிறேன்....’ அதற்கு மேல் சண்டைப்பிடிக்க அம்மாவிடம் வார்த்தை இருக்காது.

அப்பாவைக் குளிப்பாட்ட வீட்டின் மூலையில் கிடந்த ஒரு மரநாற்காலியை எடுத்து வந்தார்கள். அப்பாவை அதில் உட்காரவைத்துத் தலையில் தண்ணீரை ஊற்றினார்கள். உடம்பில் உயிர் இருக்கும் வரைதான் உயிரற்ற மீசை முறுக்கிக்கொண்டிருக்கிறது. உயிர் அறுந்துவிட்டால் மீசையும் தளர்ந்துவிடுகிறது. அப்பாவின் மீசை வாயுடன் சேர்ந்து முகவாயை மறைத்தது. அப்பாவை அப்படிப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சவரப் பெட்டிக்குள் இருந்த  கத்தி, கத்தரிகோலை எடுத்துகொண்டு ஓடிவந்தேன்.

அம்மா என்னை வெறித்துப்பார்த்தாள். ‘ டேய், என்னடா செய்யப்போற…?’ என்று என் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்டாள். நான் அம்மாவிடமிருந்து விடுவித்து கொண்டு அப்பாவை நோக்கி வந்தேன்.

‘ அப்பன் தொழில புள்ள கையில எடுத்திட்டான்….’ என்றார் ஒருவர்.

‘ இவன் அப்பன் அப்படித்தான். யார் வீட்ல இழவு விழுந்தாலும் வீட்டுப் படி ஏறி சவத்துக்குச் சவரம் செஞ்சிட்டு வருவான். இவனும்...’ என்று சொல்லப்போக,  இன்னொருவர், ‘ யோவ்… வாய் மூடுய்யா… அப்பனுக்குப் புள்ள இதைக்கூட செய்யக்கூடாதா….?’ என்றார் கோபமாக. 

ஊர்க்காரர்களின் சடசடப்புகளை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கத்தியை உள்ளங்கையில் தீட்டி தாடியை மழித்து, மீசை மயிர்களைக் கத்தரித்தேன். அப்பா மீது தண்ணீரை ஊற்றி வெள்ளை வேட்டியை அணிவித்துவிட்டு, கை கால்களைக் கட்டி , நெற்றியில் பொட்டு வைத்து, கீழே சரிந்துவிடாமல் கிடத்தி பின்பக்கமாகக் கட்டி, கழுத்தில் ஒரு மாலையைக் கிடத்தி நாற்காலியில் சாய்த்து வைத்தார்கள்.



அத்தனை நேரம் வெறுமென நின்றுகொண்டிருந்த பெண்கள் , அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினார்கள். அம்மா என்னை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டி ‘ ராசா...உன் அப்பாவைப் பாருடா…’ என்றவாறு  கதறிக்கொண்டிருந்தாள்.

நான் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். சவரம் செய்யப்பட்ட முகத்தில் ஆங்காங்கே முடிகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கத்தி பதம் பார்த்த வெண்தோல் தடங்கள் வெளீரெனத் தெரிவதாக இருந்தன. அதன் வழியே அப்பா எனக்கொரு செய்தி சொல்லிக்கொண்டிருந்தார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசலி

வரலாற்றுப்புனைவு ஒ ட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர் பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும், தனி ஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார். அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு , அதில் வைக்கோல் நிரவி தண்ணீர் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன. பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொது மக்கள் வருமிடங்களிலும் நடைபாதையிலும், அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியைப் பட்டித் தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரகாலம் நடைபெறும்   ஜமாபந்தி அது. தாசில்தாரரின் அறிவித்தலின் பேரில் ஊர் தலையாரிகள் ...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள்

இரண்டாவது அப்பா பற்றியக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகந்தி. இருவரில் எனக்கு பிடித்தது முதல் அப்பாதான் எனச் சொல்கையில், வித்யா அவளது முகத்தை நின்று திரும்பிப் பார்த்தாள். இதைச் சொல்ல இவளுக்கேன் வெட்கமில்லை, என அலப்புறுவதைப் போல அவளது பார்வை இருந்தது.  வித்யாவின் முகம் அவளையும் அறியாமல் சுழிந்தது. அவளது முகச்சுழிப்பைச் சுகந்தி கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால், அனிச்சம் போல, முகம் வாடியிருப்பாள். ‘ஏனடி முகம் சுழித்தாய்’, எனக் கேட்டு சண்டைப் பிடித்திருப்பாள்.  சுகந்தி சொன்ன, இரண்டு அப்பாக்கள்…, அதுகுறித்து நினைக்கையில், வித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளைச் சிரிக்கவிட்டால், சித்தி சீரியலில் டைட்டில் பாடலுக்குப் பின்னே சிரிக்கும், குழந்தையைப்போல சிரிக்கிறவள். முன் பல்வரிசை மொருதைக்குள் முட்டிய சிரிப்பை, உதட்டுக்குள் அதக்கி, தொண்டைக்குள் விழுங்குகையில், அவளது தொண்டை முடிச்சு, நெல்லி உருண்டையாக உருண்டது.  ‘நெசமாவே ஒனக்கு ரெண்டு அப்பாவா..?’ இரைக்கொத்தும் காக்கையைப் போல, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கேட்டாள் வித்யா. அவளது முதுகில் ஒரு பக்கமாகப் புத்தகப்பை அணைந...