இத்தனைக்கும் இருவரும் ஒரு நாளில் கருத்தரித்து ஒரே நாளில் பிறந்தவர்கள்.
அவன் பெயர் ராசு, இவள் ராசி. இருவருக்குமிடையில் ஐந்து நிமிடங்கள் மூப்பு, இளமை, இருவரில் ராசிதான் மூப்பு. இருவரும் அத்தனை அன்பாக, நெருக்கமாக இருந்தவர்கள்தான். ராசு
என்று அழைத்தாலும், ராசியென அழைத்தாலும் இருவருமே ஒரு சேர திரும்பிப் பார்த்தவர்கள்தான்.
ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாகக் கிளம்பியவர்கள்தான். யார் கண் பட்டதோ, இருவரும் இரு
வேறு கிரகவாசிகளைப் போல நடந்துகொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் வயது பத்து முடிந்து
பதினொன்றேதான். அவர்களுக்குள் சண்டை, சச்சரவு நடந்தேறுகையில் அவளால், அந்தக்
குரங்கையும் நாயையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தஞ்சாவூர் ராஜா
மிராசுதார் மகப்பேறு மருத்துவனையில்தான் இருவரையும் பெற்றெடுத்தாள். மகள் சுகப்பிரசவம்.
மகன் அறுவை சிகிச்சை. தொப்பூழ்கொடி தலைசுற்றி பிறந்தவன் ராசு. பானுமதி பிரசவம்
முடிந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து தாயும் குழந்தையுமாக வார்டிலிருந்து
வெளியேறுகையில் அவளது தாய் பேரனைத் தூக்கிக் கொண்டாள். நாத்தனார் கையில் மகள்.
இருவரும் அவளுக்கு முன்னே, பின்னே நடக்க பானுமதி மெல்ல காலடிகள் எடுத்து வைத்து வெளியேறுவதாக
இருந்தாள்.
அவள் கட்டிட
கூரையின் நிழலிலிருந்து விலகி ஒரு மரத்தின் நிழலுக்கு வருகையில் அவளது கண்களில்
முதலில் தெரிந்தவை அந்தக் குரங்கும் நாயும்தான். வார்டுக்கும் வெளியே உட்கார்ந்திருந்த
ஆண்களும் பெண்களும் இரண்டையும் பார்க்க, வியக்க, சிரிக்கவென இருந்தார்கள். செவலை
நாய் அது. பெட்டை. அதே நிறத்தில் ஆண் குரங்கு. இரண்டுக்கும் ஒரே மாதிரியான வால்,
உடம்புத் தினவு. வயதும் கூட ஏறக்குறைய ஒன்றாகவே இருக்க வேணும்.
பெரிய
பொந்துகளும், குடைவான குழிகளும் விழுந்துபோன அந்தப் புளியமரத்தின் நிழல் மேகத்
திட்டைப் போல கவிழ்ந்து கிடந்தது. அந்நிழலில்தான் அந்த நாய் வாலைத்
துருத்திக்கொண்டு, காதுகளை ஆட்டிக்கொண்டு மரத்தை வெறிக்கப் பார்க்கவும்,
குரைக்கவுமாக இருந்தது. மரத்தில் ஆண் குரங்கு உட்கார்ந்திருந்தது. அது ஒரு
கிளையைப் பிடித்து தொங்கியபடி, நாயின் வாலைப் பிடித்து ஒரு இழு இழுத்துவிட்டு ஒரு
கிளையிலிருந்து மறு கிளைக்குத் தாவி கைக்கொட்டிக் கொள்வதாக இருந்தது.
இரண்டையும்
சற்று நேரம் நின்று பார்த்தாள் பானுமதி. இரண்டும் தானொரு நாய், குரங்கு என்பதை
மறந்து விளையாடிக் கொண்டிருந்தன. சுற்றிநின்று மனிதர்கள் தங்களைக் கவனிக்கிறார்கள்
என்கிற பதற்றமோ, பயமோ அவைக்கு கிஞ்சிற்றுமில்லை.
நாயின்
செய்கையைவிடவும் குரங்கின் சேட்டைதான் பலரையும் கவர்ந்திருந்தது. பானுமதி சேலையைக்
கணுக்காலுக்கும் மேலாகத் தூக்கிக்கொண்டு, அறுவை சிகிச்சை வலியை உதட்டில்
சுழித்துக்கொண்டு நடக்கையில், ஒருவர் சொன்னார், ‘ இதென்ன வேடிக்க, நேத்தைக்குப் பார்த்திருந்திருக்கணும்.
குரங்கு மடியில நாய் படுக்க, நாய்க்கு குரங்கு பேன் பார்க்க...’ மீதத்தைச் சொல்ல
முடியாமல் சிரிப்பாக உதிர்த்தார். இதைக் கேட்கையில் பானுமதியின் மனதிற்கு இதமென இருந்தது.
இதற்கு முன்பு, அவள் ஒரு நாயின் மடியில் ஓர் ஆடு பால்குடிக்கப்
பார்த்திருக்கிறாள். இன்னொரு நாள், ஒரு நாயும் பூனையும் ஒன்றையொன்று செல்லமாகக்
கடித்து விளையாடியதைக் கண்டிருக்கிறாள். அதைவிடவும் அவளுக்கு வேடிக்கையாகவும்,
மனதிற்கு நெருக்கமாகவும் இருந்தது இந்தக் குரங்கும், நாயும்தான்.
என் பிள்ளைகள்
இரண்டும் வளர்ந்து இவைப் போல ஒற்றுமையாக இருந்தால், எப்படியிருக்கும், வாஞ்சையோடு
நினைக்கையில் அவளுக்குள் உயிர்வாயு சுருளெடுத்து கண்களில் நீர்ப்பூத்தது.
‘ அங்கே என்ன
பண்றே ஆத்தா...’ கையிலும் மார்போடும் குழந்தையை வைத்திருந்த அவளது தாய் கூப்பாடு
போட்டாள். ‘ அண்ணி, வாங்க...’ நாத்தனார் கேட்டுக்கொண்டாள். ‘ இதோ வந்திட்டே...’
என்றவள், மெல்ல காலடிகள் எடுத்து வைத்து நடந்தாள்.
பானுமதி,
குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனைக்கு வந்திருந்த இந்த ஒரு வார காலத்தில் அவள் எத்தனையோ
காட்சிகளைக் கண்டிருக்கிறாள். அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள
நுழையும் செல்வந்தர் மனைவிகள்; ஆங்காங்கே, ஆலமரத்தடியின் கீழ் வெள்ளை சட்டை, நீல பாவாடையில்
ஒரு குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும் கர்ப்பிணிகள்; ட வடிவ வார்டுக்குள் கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்கள்;
ப வடிவ கட்டிடத்தில் குழந்தைப்பேறுக்காக காத்திருப்பவர்கள்; அதன் பக்கத்து வார்டில் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு
மார்பில் பால் கட்டிப்போய், கண்களில் துக்கம் சூழ, கன்னமும் வயிறும் புடைத்து அவள்
வயதையொத்த பெண்கள்; நேர் தெற்கே முனியன்கோவில் ஆலமரத்தில் தாய்,சேய்களைப் பார்க்க
குழுமியிருக்கும் உறவினர்கள்; அங்கே நின்றபடி பார்க்கையில் மேற்கில் தெரியும் தஞ்சை
பெரியகோவில் வாயில், கோபுரம், கும்பம், கலசம்,.. இத்தனை அதிசயங்களையும் பார்த்து
கடந்தவளுக்கு ஓர் ஆண் குரங்கும், ஒரு பெட்டை நாயும் இணக்கமாக உறவாடி
விளையாடிக்கொண்டிருந்த காட்சிதான் அவளது மனதில் பசையென ஒட்டிக் கொண்டது.
மிராசுதார்
மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் யாரும் ஆலமரத்தடியின் கீழ்
அருள்பாலிக்கும் முனியன்சாமிக்கு, ஊஞ்சல் கட்டிப் போடாமல், சூடம், பத்தி ஏற்றாமல்
செல்வதில்லை. தாயும் நாத்தனாரும் கோவில் வாசலில் நின்று, குழந்தையை மார்போடு
தாங்கியபடி பார்க்கையில் பானுமதி நடக்க, நிற்க, குரங்கு நாய் விளையாட்டைப்
பார்க்கவென நடந்து வந்தாள். முனியன்சாமியைப் பார்த்து கையெடுக்கையில் கூட அவளது ஒரு
கண் அந்த குரங்கு, நாயின் மீதே இருந்தது.
இப்பொழுது ராசு, ராசி இருவரும் நன்கு வளர்ந்து விட்டவர்கள். உள்ளூர்
பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள். கர்ப்பப்பைக்குள் பத்து மாதங்கள்
ஒருவருக்கொருவர் துணையாக இருந்தவர்களால், பத்து நாழிகை இணக்கமாக இருக்க முடிவதில்லையே
என்கிற கவலைதான் பானுமதியைப் பெரிதும் வாட்டுவதாக இருந்தது. கொஞ்ச நாட்களாகத்தான்
இப்படி. ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டு, அடித்துக்கொண்டு, அடம் பிடித்துக்கொண்டு,...‘
அம்மா பாரும்மா இவன’; ‘ நானல்ல, இவள்தாம்மா...’ இப்படியாகத்தான் எந்நேரமும்!
வீட்டிலிருந்து
பார்த்தால் தெரிகிற தூரம்தான் பள்ளிக்கூடம். இருவரும் சொல்லி
வைத்தாற்போல கேட்டார்கள், ‘ ஸ்கூல்க்குப் போக சைக்கிள் வேணும்மா’
‘ இய்னே
இருக்கிற ஸ்கூலுக்கு ஏன் சைக்கிள்...?’
‘ ஊர்க்காட்டுப் பிள்ளைகங்க சைக்கிள்ளேதே
வாராங்க’
‘ அவங்க வந்தா
என்னவாம்...?’
இருவரும்
ஒன்று போலவே அடம் பிடித்தார்கள்.
‘ ரெண்டு
பேருக்கும் ஒரு சைக்கிள்தே வாங்கித் தருவேன். சரியா...?’
இருவர் தலையும்
ஒன்றாக ஆட்டின. ஒரு நாள் அவனை உட்கார வைத்து இவள் ஓட்டினாள். மறுநாள் இவளை வைத்து அவன் ஓட்டினான். அப்படியாகத்தான் இருவரும் பள்ளிக்குப் போய்
வருவதாக இருந்தார்கள். என்ன நினைத்தானோ, யார் பேச்சைக் கேட்டானோ, அவள் ஓட்டுகிற
சைக்கிளில் நான் ஏறமாட்டேன் என்கிறான் ராசு. அவனுக்கென தனி சைக்கிள் வேணுமென அடம் பிடிக்கிறான்.
ஏனெனக் கேட்டால், அவளுக்கு என்னை வைத்து ஓட்டத் தெரியவில்லை என்கிறான். இத்தனைக்கும் ராசுவை விடவும் ராசி நன்றாக
சைக்கிள் மிதிக்கிறவள்தான். தாயை உட்கார வைத்து ராசு மேட்டில் ஏற்றுகையில்,
மிதிக்க முடியாமல் தாயை இறங்கச்
சொல்லிவிடுவான். ஆனால், ராசி ‘நீ இறங்கிடாதேம்மோவ்’ என்றவளாய் உடம்பை உந்தி, எக்கி
தாவி மிதித்து மேட்டில் ஏற்றி பெருமிதத்தைப் பெருமூச்சாக வெடிப்பவள். அத்தகையவளைதான்
ராசு சொன்னான், ‘இவளுக்கு சைக்கிள் மிதிக்கத் தெரியலை’ என்று.
‘சரி, இவள வச்சி நீ ஓட்டே’ என்றாள் பானுமதி. அவன்
உதட்டைச் சுழித்து கொடும்பால் கேலி செய்வதைப்போல அவளை ஒரு பார்வைப் பார்த்து, ‘யாரு இவளையா, இவளுக்கு உட்காரவே தெரியாது’ என்றவனாய்
உதட்டுடன் சேர்த்து முகத்தைச் சுழித்தான். எப்போதிலிருந்து அவனுக்கு இந்த மாற்றம்,..?. இவள் பெரிய பெண்ணாகி, ஊரும், சாதி சனமும் வந்து சடங்குச் சுத்திவிட்டு
சென்றதிலிருந்துதான்.
ராசு பெரிய பெண்ணானதற்குப் பிறகு அவளிடம்
ஏற்படும் உடல் மாற்றத்தை விடவும் ராசுவிடம் ஏற்பட்ட மாற்றம்தான், அவளைப்
பெரிதாக யோசிக்க வைத்து, நகத்தைக் கடித்து துப்ப வைத்தது.
இப்பொழுது
ராசுக்கென்று தனி தட்டு. தனி சோப்பு, சீப்பு, கண்ணாடி. ராசி தோஸை வேணுமெனக்
கேட்டால், இவன் இட்டலி வேணும் என்கிறான். இவளுக்குச் சாம்பார் என்றால் அவனுக்குப்
புளிக்குழம்பு.
பல நேரம்
இருவரும் மாறி மாறி பிடிக்கும் அடம், அவளது தலையை உண்டு, இல்லையென உருட்டும். அந்நேரம்
அவள் வேறு வழியில்லாமல் வெளிநாட்டிலிருக்கும் கணவனைத் தொடர்புகொண்டு, நான் என்ன
செய்ய எனக் கேட்டு நிற்பாள். ‘ அவங்களுக்காகதானே நான் கடல் தாண்டி வந்து
உழைக்கிறேன். பிள்ளைங்க என்ன கேட்குறாங்களோ, அதையே செய்து கொடு’ என்பதாக அவரிடமிருந்து
பதில் வரும். அவள் கணவனின் உத்தரவுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவர்களின் தேவையை
நிறைவேற்றத் தொடங்கிவிடுவாள். இருவரும்
மாறிமாறி செய்யும் உடும்புப்பிடி அடம், யார் பக்கம் நியாயமிருக்கிறதென அவளால் பிரித்தறியத்
தெரியாது. இருவரின் பிடிவாதத்திற்கும் செவி சாய்க்கும் படியான தராசு ஆகியிருந்தாள்
பானுமதி.
ராசி, பூப்பெய்த பிறகும்கூட அவள் தானொரு பெண் பாலினமென
உணர மறுத்தவளாக இருந்தாள். ராசு என்ன ஆடை உடுத்துகிறானோ, அதையே அவளும் உடுத்த
விரும்புகிறாள். பள்ளிக்குச் சுடிதார், கோட், சூ, சாக்ஸ் உடுத்திச் செல்கிறவள், சனிக்கிழமை பள்ளிக்கூடமென்றால், அவனைப் போலவே ஜீன்ஸ், சட்டை உடுத்திக்கொண்டு கிளம்பிவிடுகிறாள்.
அவள் அணியும் ஆடையும், உடையும் ராசுவிற்கு எரிச்சலையே மூட்டின.
பானுமதி, மகளுக்கு முடி வளர்த்து சடைபின்னிப்
பார்க்கவே ஆசைப்படுகிறாள். ஆனால் ராசிக்குப் பிடித்தது கிராப் வெட்டுதான். வீட்டிலிருந்து
இரண்டு வீடு தள்ளி சலூன் கடை என்பதால், அவன் முடி வெட்டிக்கொண்டு வருகிற அன்றைய தினம்,
அவனைப் போலவே முடியைக் குறைத்துக்கொண்டு அவன் முன் போய் நின்று அவனது கோபத்தை
மூட்டுகிறாள்.
' பாரும்மா இவள...' ராசு அவளது கிராப் வெட்டைப் பார்த்துக் குதிப்பான்.
' என் முடிய நான் வெட்டிருக்கேன், ஒனக்கு என்னடா வந்தது' பதிலுக்கு இவள் அவனிடம் சண்டைக்கு நிற்பாள்.
' என் முடிய நான் வெட்டிருக்கேன், ஒனக்கு என்னடா வந்தது' பதிலுக்கு இவள் அவனிடம் சண்டைக்கு நிற்பாள்.
தீபாவளி
வந்திருந்தது.
‘பண்டிகைக்கு ஆயிரம் ரூவாய்க்குக் குறையாம புது ட்ரெஸ் எடுத்துத் தரணும்’ என ஐப்பசி பிறந்த நாளிலிருந்தே கேட்டுவந்தான் ராசு.
பண்டிகை, திருவிழா, விஷேச காலமென்றால் முதலில் கோரிக்கை வைப்பது அவன்தான். மகள் பெரிதாக எதையும் கேட்டுவிட மாட்டாள். அவன் என்ன கேட்கிறான் என்பதைக்
கவனிப்பாள். ‘அம்மோவ், எனக்கும்மோவ் ’ என ஒரு சுதியோடு சொல்லி நிறுத்துவாள். அவ்வளவேதான் அவளுடைய
கோரிக்கை. அப்படியாக நீட்டி மடக்கிச் சொல்லுகையில், அவளையே வெறிக்கப் பார்ப்பான். பதிலுக்கு இவள், ‘என்னடா, அப்டி பார்க்கே. எனக்கும் அவ்ளோ ரூபாய்க்குதான் அம்மா எடுத்துத் தரும்,என்னம்மா...’
என்றவளாய் தாயைத் துணைக்கு இழுப்பாள்.
' அம்மோவ், எனக்கு லெட்சுமி வெடி ஒருக்கட்டு, அணுகுண்டு நாலு, யானை வெடி நாலுக்கட்டு...'
' எனக்கும்மோவ்...’
' எனக்கும்மோவ்...’
‘ செலவுக்கு
ஐநூறு ரூபா’
‘
எனக்கும்...’.
தீபாவளிக்கும்
முதல் நாள் இருவரையும் கூட்டிக்கொண்டு ஜவுளிக் கடைக்குப் போனாள் பானுமதி. இருவரும்
ஒன்று போலவே ஜீன்ஸ் பேண்ட்டில் கடைக்கு வந்தார்கள். மகள் முழுக்கைச் சட்டை. இவன் டீ சர்ட்.
அண்ணா சிலையைச் சுற்றிலும் கூட்டம் வட்டம் கட்டியிருந்தது.
என்னவென்று, ராசு ஒரு கணம் ஓடி எட்டிப் பார்த்துவிட்டு வந்தான். ‘ அம்மாவ்,
பாம்பாட்டிம்மா. நல்லபாம்பையும், சாரைப்பாம்பையும் விளையாட விட்டு வேடிக்க
காட்டுறாரும்மா...’ என்றவனாய் அங்கலாயித்தான். அதைக் கேட்கவே அவளுக்கு மலர்ச்சியாக
இருந்தது. அதைப் பார்த்துவிட தலையை எட்டி, நீட்டிப் பார்த்தாள். சுற்றிலும்
ஆண்களின் தலைகளாக இருந்தன. மகனை நெருக்கமாக அணைத்துக்கொண்டு சொன்னாள், ‘ பார்த்தேதானே,
ரெண்டும் எப்படி ஒத்துமையா இருக்குதென. நீயுந்தே இருக்கே. ராசி கூட சண்டப் போட்டுக்கிட்டு....’
‘ என்னம்மா,
எப்பப் பார்த்தாலும் என்னையே நொட்டம் சொல்றே நீ...’
‘ நீதானேடா
என்க்கிட்ட சண்டைக்கு நிற்கே..’
‘ நீ ஏன் நான்
கேட்கிறதயே கேட்கே...’
‘ நான்
எங்கேம்மா கேட்டேன். பாரும்மா இவனே’
‘ சரி சரி
வாங்க. கடைத்தெரு சனமே நம்மள வேடிக்கப் பார்க்குது...’ பானுமதி இருவரையும்
சமாதானம் செய்து ஜவுளிக்கடைக்குள் அழைத்துச் சென்றாள்.
'அம்மோவ், அவனுக்கு எடுக்கிற போலதான் எனக்கும்
எடுக்கணும், சொல்லிட்டேன்...' ராசி தாயிடம் கண்ணடித்துச் சைகையால் சொன்னாள்.
' சரி சரி வா..' அதற்கு மேல் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
கடைக்காரர் மூவரைப் பார்த்ததும் யாருக்கென்று கேட்காமல் ஜீன்ஸ் பேண்ட்
கட்டுகளைக் கலைத்து அவர்கள் முன் போட்டார். ராசுதான் அதிலிருந்து ஒன்றிரண்டை
எடுத்து விரித்துப் பார்த்தான். அதிலிருந்து ஒன்றை எடுத்து தன் உடம்பில் ஒட்டிப்
பார்த்து, ‘இதுதே வேணும்’ என்றான். எப்போதும் நிறத்தைப் பார்த்து எடுக்கிறவன், அன்றைய தினம் விலையைப் பார்த்து ஒன்றை எடுத்திருந்தான்.
' வேற எடுவேயன்டா. கலரு என்னவோ மாதிரி இருக்கு' என்றாள் பானுமதி.
' மத்ததெல்லாம் அறநூறு, எழுநூறு. இதுதே ஆயிரம்’ என்றவன், அதை ராசியிடம் கொடுத்து, ‘இது எப்படி இருக்கு?’ எனக் கேட்டான். அதை வாங்கிய அவள், அவனை அப்படியும், இப்படியுமாக நிற்க வைத்து அவனையொட்டி பார்த்து ' நல்லாருக்குடா, இதையே எடுத்துக்கோ...' என்றாள். பிறகு அவன், அதற்குப் பொருத்தமாக ஒரு சட்டையை எடுத்தான். சட்டை இரு பக்கமும் பைகள் வைத்திருந்தன. இரண்டுக்கும், ஆயிரத்து எண்ணூறு வந்திருந்தது.
' மத்ததெல்லாம் அறநூறு, எழுநூறு. இதுதே ஆயிரம்’ என்றவன், அதை ராசியிடம் கொடுத்து, ‘இது எப்படி இருக்கு?’ எனக் கேட்டான். அதை வாங்கிய அவள், அவனை அப்படியும், இப்படியுமாக நிற்க வைத்து அவனையொட்டி பார்த்து ' நல்லாருக்குடா, இதையே எடுத்துக்கோ...' என்றாள். பிறகு அவன், அதற்குப் பொருத்தமாக ஒரு சட்டையை எடுத்தான். சட்டை இரு பக்கமும் பைகள் வைத்திருந்தன. இரண்டுக்கும், ஆயிரத்து எண்ணூறு வந்திருந்தது.
அடுத்ததாக ராசி. அவள் அவளுக்கான
ஆடையையெடுத்துக்கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் எடுத்த விலையிலும், அதே நிறத்திலும் அவளுக்கொரு பேண்ட் கிடைத்திருந்தது. அதை அவள் எடுக்கையில் அவளையும் அறியாமல் சிரிப்பு வந்தது. அதற்குப் பொருத்தமாகச் சட்டை எடுக்கத்தான், கொஞ்ச நேரம் பிடித்தது. அவனைப் போல பேண்ட் எடுத்தவளுக்கு அவன் எடுத்ததைப் போன்று ஒரு சட்டையை எடுக்க முடியவில்லை. அவன் எடுத்ததை விடவும்,
குறைவான விலையில் டி சர்ட்டுடன் கூடிய கோட் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
மூவரும் வீடு வந்து சேர்கையில் மணி பத்தாகி இருந்தது. தீபாவளிக்காக முன்னமே பலகாரம் செய்திருந்ததால் வடை, சுழியத்தைக் காலையில் செய்துகொள்ளலாமென படுத்து, அதிகாலையில் எழுந்து இரண்டையும் செய்து முடிக்கையில் இருவரும் கீரியும்,
பாம்புமாக ஆகியிருந்தார்கள்.
அன்றைய தினம், சண்டைக்குக் காரணம் ராசிதான். அவள் முதலாளாக
எழுந்து, எண்ணைய்த் தேய்த்துக் குளித்து முதல் நாள் எடுத்த புத்தாடையை எடுத்திக்கொண்டு,
குளிருக்குச் சுருண்டு போர்த்திக்கொண்டு தூங்கியவனை எழுப்பி, ‘ எப்படிடா,
இருக்கு...’ எனக் கேட்டு நிற்கையில் கிளம்பியது கலகம். அவன், அவளது ஆடையைக்
குறுகுறுவெனப் பார்த்தான். தன் மேல் போர்த்திருந்தப் போர்வையை எடுத்து விளாசி, கையை
ஓங்கியபடி அவளை விரட்டினான்.
‘ டேய்,
டேய்... தீவளியும் அதுவுமா ஏன்டா அவள விரட்டுற...?’
அவள்
அவனிடமிருந்து தப்பித்து ஓடி எங்கேயோ மறைந்துவிட்டிருந்தாள். அவன் கையில்
கிடைத்ததையெல்லாம் எடுத்து எறியவும், மண்ணில் புரண்டு அழவும் செய்தான். இப்படியாக இதற்கு முன் அவன் அழுது பார்த்ததில்லை. என்ன நடந்தது, ஏன் இப்படி உருண்டுப் புரள்கிறான்...?
பானுமதி ஓடி, அவனைத் தூக்கி நிறுத்திக்
கேட்டாள்.
' அவ என்னோட பேண்ட்ட போட்டிருக்கா ' என்றான்.
அவள் இன்னொரு பேண்டை எடுத்து வந்து காட்டினாள். இரண்டும் ஒன்று போலவே இருந்தது. ' ரெண்டும் ஒரே பேண்டுதான்டா. பார், ஒரே விலையும் கூட'
'அவ போட்டிருக்கிறது என்னோடது' என்றான்.
எதை வைத்துதான் தன்னுடையதென்று அடையாளம் கண்டானோ, அவளால்
புரிந்துகொள்ள முடியவில்லை. ராசியைத் தேடினாள். அவள் அடுத்த வீட்டு சந்தில்
ஒழிந்துகொண்டு, தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தாள். ' ஏனடி, அவன் சொல்றது உண்மையா?'
அவள் பதில் சொல்லாமல் நகத்தைக் கடித்தபடி நின்றாள்.
' பண்டிகையும் அதுவுமா, ஏனடி என்னைப் படுத்துறே..’ என்றவள் ' அதைக் கழட்டி அவன்க்கிட்ட கொடடி' என்றாள். அவள் வீட்டிற்குள் ஓடி வந்தாள். பழைய ஆடையை உடுத்திக்கொண்டு அவன்
உடுத்தியிருந்த பேண்டை அவிழ்த்து ‘ இந்தாடா’ என்றவளாய் அவனிடம் நீட்டினாள். அதை அவன் வாங்க மறுத்தவனாய், ' இது எனக்கு வேணாம்' என்றான்.
'சரி, அப்ப இதையே வச்சிக்கோ'
'அது அவளுக்கு எடுத்தது..’ என்றான்.
‘ உனக்கு இது வேணுமா, அது வேணுமா...?’
‘ரெண்டுமே
வேணாம்...’ என்றவன் முகத்தைத் தூக்கி தலையில் வைத்துகொண்டு ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்தான்.
பானுமதிக்கு
என்ன செய்வதென்று தெரியவில்லை. இட்டலி எடுத்தாகி விட்டது. அதற்கு சட்டினி,சாம்பார்
செய்ய வேண்டியிருந்தது. மகன் சமாதானமாகாமல் தீபாவளியாவது, கொண்டாடுவதாவது...?
அவர்களின்
பஞ்சாயத்து வெளிநாட்டிலிருக்கும் அப்பாவிடம் சென்றது. அவரிடமிருந்து பானுமதிக்கு அவசர
உத்தரவு வந்தது. ' இதெக் கொண்டுபோய் எடுத்தக் கடையில கொடுத்திட்டு அவனுக்கு வேறத மாத்திக்கொடு...’
‘ சரிங்க....’
என்றவள் முகம், நெற்றியைத் துடைத்தபடி கிளம்பினாள்.
‘ ராசு வா,
போய் மாத்திட்டு வந்திடலாம்...’
அவன் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்தபடி, ' போ, நான் வரமாட்டேன் ' என்றான்.
' அப்ப, அம்மா போயி மாத்திக்கிட்டு வரட்டா ?'.
' இம்...' என்றவாறு தலையை ஆட்டினான்.
மகள் உடுத்திய பேண்ட்டை அவளிடமே கொடுத்துவிட்டு, இன்னொரு பேண்டையும் அதற்குரிய விலை ரசீதையும் எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றாள். பண்டிகைக்
காலம் என்பதால் கடை அந்த அதிகாலையிலும் திறந்திருந்தது. அந்நேரத்திலும் நான்கைந்து
பேர் ஆடைகளை எடுக்க , விரிக்க, பார்க்கவென இருந்தார்கள்.
பானுமதி கையில் வைத்திருந்த பையையும் ரசீதையும் நீட்ட, அதை
வாங்கிப் பார்த்த கடைக்காரர், எடுக்கப்பட்ட ஆடைகள் மாற்றுவதில்லையென விதிமுறை பேசினார். கடைக்காரரிடம் கெஞ்சிப்பேசி அதை மாதிரி , அதைவிடவும் ஐநூறு ரூபாய் அதிகமான விலையில் ஒரு பேண்டை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.
ராசு ஜீன்ஸை வாங்கியதும்
விலையைதான் முதலில் பார்த்தான். நேற்று வாங்கியதை விடவும் கூடுதல் விலையிலிருந்ததைக் கண்டு பூரித்து குதித்தான். அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு, தலையில் எண்ணைய் வைத்துக்கொண்டு குளிக்கப்போனான்.
ராசி நலுங்காமல், குலுங்காமல் அவனது பையை எடுத்து, பேண்டை விரித்துப் பார்த்தாள். அவளுக்குச்
சிரிப்பு வந்தது.
‘ ஏனடி
சிரிக்கே...?’
‘ அம்மா, லேடீஸ் பேண்ட்ட வாங்கிட்டு வந்திருக்கே '.
பானுமதிக்கு ‘பக்’கென இருந்தது. அவளுடைய வாயை இறுகப் பொத்தினாள். ' ஏ, அவனிட்ட சொல்லிடாதேடி. தீவளிய உண்டு இல்லைனு பண்ணிடுவான்' என்றவள், இதற்கு என்ன செய்யப் போகிறானோ, எதை உருட்டப் போகிறானோ, கைகளைப் பிசைந்தபடி நிற்க,
நடக்கவென இருந்தாள்.
அவளது கைகள்
சட்னி, சாம்பார் செய்வதாக இருந்தாலும் அவளது கண்கள் அவனையே சுற்றிச்சுற்றி வந்தன. முதலில்
சட்டையை உடுத்தியவன், பேண்டை விரித்து அப்படியும் இப்படியுமாக பார்த்தவாறு நின்றான்.
' ராசு, புது ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு வந்து பலகாரத்தச் சாப்பிடப்பா
’ என்றாள் பானுமதி. அவன் பேண்டை உடுத்துவதாக இல்லை. அதை எடுக்கவும், பார்க்கவும்,
விரிக்கவுமாக இருந்தவன், பிறகு வேறு
வழியில்லாமல் அதை உடுத்திக்கொண்டு கண்ணாடி முன் போய் நின்றான்.
ராசி சிரித்து தொலைத்துவிட்டால் அவ்வளவேதான். மகளை அவசரமாக
அழைத்தவள், அவளிடம் பலகாரங்கள் கொடுத்து பக்கத்து வீடுகளில் கொடுத்து வரச்
சொல்லி அனுப்பி வைத்தாள். அவள் அதை வாங்கிக்கொண்டு நடக்கவும், சன்னல் வழியே எட்டிப் பார்க்கவும் கொடும்புக்குள் சிரிக்கவுமாக நடந்தாள். அவனது நடை உடையைப்
பார்ப்பதற்கென்று போன வேகத்தில் திரும்பி வந்தாள் ராசி. ராசு, பேண்டை உடுத்திக்கொண்டு வீட்டிற்குள்ளாக நடந்தான்.
' இம், நல்லா இருக்குய்யா, ஆயிரத்து ஐநூறு ரூபா...’
தாயின் வார்த்தைக்கு அவனால் ஒரு பதிலுரை சொல்ல முடியவில்லை.
அவன் ராசியை, ' இங்கே வாயேன்' என அழைத்தான். அவள், சிரிப்பைக் கொடும்புக்குள் அதக்கிக் கொண்டு, ' என்னடா ராசு ' என அவன் முன் போய்
நின்றாள்.
'இத, நீயே போட்டுக்கோ '
' அப்பப்பா, நான் மாட்டே. உன் பேண்ட் எனக்கு வேணாம் '
' இல்ல, போட்டுக்கோ '
' அப்ப உனக்கு ? '
' உன்னோடத கொடு,
போட்டுக்கிறேன் ' என்றவனாய், அவளிடம் கெஞ்சி நின்றான்.
பானுமதி குளித்து சமையலறைக்கு வருகையில் இருவரின் பேண்டும் இடுப்பு மாறி இருந்தன. 'எப்படிம்மா இருக்கு ? ' இரண்டு பேரும் ஒரு சேரக் கேட்டார்கள்.
பானுமதி இருவரையும் ஒரே கண்ணாகப் பார்த்தாள். புன்முறுவல்
பூத்தவளாய், ‘ நல்லா இருக்கீங்க..’ என்றாள். அவளுக்கு குரங்கு, நாய் நினைவுக்கு
வந்தன.
- கணையாழி - பிப்ரவரி 2020

கருத்துகள்
கருத்துரையிடுக