முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதுதான் இது

‘அதுதான்க இது...’ செந்தில்நாதன் சொன்னதும் பஞ்சாயத்தாரர்களுக்கு கண், மண் தெரியாத கோபம் நாசியில் வெடித்தது. பின்னே, எத்தனை முறை, எத்தனை சுற்றுக்கேள்விகள். கடைசியில் அதுதான்க இது என்கிற ஒன்றை மட்டுமே பதிலாகச் சொன்னால் எப்படி. இம்...? அவனைச் சூழ்ந்து நின்றவர்கள் அவனை அடித்து, கும்மி, பிழிந்து காயப் போடாத குறையாக ஆத்திரம் பொங்க நின்றுகொண்டிருந்தார்கள்.


செந்தில்நாதன், ஒரு பதட்டமுமில்லாமல் ஆசுவாசமாக நின்றுகொண்டிருந்தான். ஒவ்வொரு விரலையும் விரல்களுக்கிடையில் கொடுத்து, நெட்டிப் பறித்தவாறு கவுண்டமணியாரை பார்த்தான். பலருக்கு, அவனை அடித்து மூக்கு முகறையெல்லாம் பிய்க்க வேண்டும் போலிருந்தது.
கவுண்டமணியார் விரல் நீட்டி அவனை அருகினில் அழைத்தார். அவரது அழைப்பில் மிரட்டலும், எப்படியேனும் உண்மையைக் கறந்துவிட வேண்டும் என்கிற தொனிப்பும் நா, கண்கள், உதடுகளின் வழியே துருத்திக்கொண்டிருந்தன. கவுண்டமணியார், ஊரின் பெருந்தலை. நாட்டாமைக்காரர். பெரிய மீசை வைத்த நிலக்கிழார். புலியின் மீசையையொத்த மீசையை புறங்கையால் நீவி விட்டபடி எச்சிலை எச்சில் கோப்பையில் ‘ பொளிச்..’ எனத் துப்பினார். பிறகு இடுப்பில் தொங்கிய ஊசியை எடுத்து பற்களைக் குத்திக்கொண்டு முகத்தை கடுவாண் மாதிரி வைத்துக்கொண்டு சொன்னார் ‘ எலே, இன்னும் கிட்டே வாலே...’
செந்தில்நாதன் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு தப்படி முன்னே எடுத்து வைத்து பவ்வியமாக வந்து நின்றான். அவனது நிற்றலில் பணிவும், பயம் கலந்த தொனிப்புமிருந்தது. அவன் கவுண்டமணியாரை நெருங்க, நெருங்க அவனைச் சூழ்ந்திருந்த வட்டம் சுருங்கி, நெருங்கியது.


‘ எல்லாம் தள்ளி நின்னுங்கலே....’ கவுண்டமணியார் குரல் கொடுத்ததும் நெருங்கி வந்திருந்தக் கூட்டம் தெறித்து விலகி பெரிய வட்டம் கட்டி கசகச, கொசகொச..’ என கரைந்தபடி விலகி நின்றது.
‘என்னலே பேச்சு, என்ன பேச்சுங்கிறே...’  மீசையை ஒரு பக்கமாகத் தடவிக்கொண்டு கூட்டத்தைப் பார்த்துக் கேட்டதும் கூடியிருந்த பஞ்சாயத்து ஒற்றைப்புள்ளியில் அமைதிக்கு வந்தது. கவுண்டமணியார் செந்தில்நாதனைப் பார்த்துக் கேட்டார். இதற்கு முன் கேட்ட அதே கேள்வியைதான் கேட்டார். ஆனால் கேட்டத் தொனியில் மாற்றமிருந்தது.
‘ எலே, ஓங்கிட்ட ஓ முதலாளி எவ்ளோ பணம் கொடுத்தார்...?’
‘ ஐநூறு ரூவா கொடுத்தாருங்க..’
‘ என்னலே வாங்கிக்கிட்டு வரச்சொன்னார்...?’
‘ ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கிக்கிட்டு வரச்சொன்னாருங்க..’
 ‘ எங்கேலே வாங்கிக்கிட்டு வரச்சொன்னார்...?’
‘ சந்தையில போயி வாங்கிக்கிட்டு வரச்சொன்னார்ங்க...’
‘ நீ வாங்கப் போனீயாலே...?’
‘ போனேங்க...’
‘ எங்கேலே போனே...?’
‘ ரயில்வே ஸ்டேசனுக்கும் பக்கத்திலிருக்கிற சந்தைக்கு போனேங்க...’
‘அங்கே ஏன்லே போனே...?’
‘ அங்கேதாங்க, எப்பவும் கறி கெடைக்கும்...’
 ‘எத்தன மணிக்குலே போனே...?’
‘ காலையில ஆறு மணிக்கு போனேன்ங்க’
‘ சந்தையில கடையெல்லாம் தொறந்திருந்துச்சாலே...?’
‘ ஆமாம், இருந்துச்சுங்க...’
கவுண்டமணியார் செந்தில்நாதனிடமிருந்து பார்வையை எடுத்து கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் அவர் கேட்ட கேள்வியிலும், அதற்கு அவன் சொல்லும் பதிலும் உள்வாங்கி அடுத்தென்னக் கேள்வி என்கிற எதிர்ப்பார்ப்பில் தொடுக்கியிருந்தது. பிரச்சனையை விசாரிக்கையில் மக்களின் மனவோட்டம் எப்படியாக இருக்கிறது என்பதைக் கணிக்க அவர் அப்படியாகப் பார்ப்பதுண்டு. கூட்டத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் வந்தது. ‘ நாட்டாமைக்காரரே, பிரச்சனையை சட்டுப்புட்டென விசாரிச்சு பாதிக்கப்பட்ட எனக்கு ஒரு தீர்ப்ப வழங்குங்க...’ என புகார் கொடுத்தவர் சத்தமிட்டதும் கவுண்டமணியார், சத்தம் கொடுத்தவரை ஒரு கணம் ஏறிட்டுப்பார்த்து, ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.
‘  எந்தெந்த கடையெல்லாம்லே தொறந்திருச்சு...?’
செந்தில்நாதன் விரலை முகவாய்க்கட்டைக்குக் கொண்டுச்சென்று பெரிதென யோசித்தான். பிறகு வானத்திலிருந்து பார்வையையும், முகவாயிலிருந்து விரலையும் எடுத்தபடி சொன்னான் ‘ ஆ,..ஆட்டுக்கறி கடை, அப்பறம் இன்னொரு ஆட்டுக்கறி கடை, அடுத்து மற்றொரு ஆட்டுக்கறி கடை,....’
‘ வெறும் ஆட்டுக்கறி கடையாத்தான் இருந்துச்சு, அப்படிதானேலே...?’
‘ ஆமாங்க....’
‘ நீ என்ன கறி வாங்கப் போனே...?’
‘ ஆட்டுக்கறிங்க...’
‘ வாங்குனீயா...?’
‘ வாங்கினேங்க..’
‘ அது ஆட்டுக்கறிதானு பார்த்தீயாலே...?’
‘ பார்த்தேங்க...’
‘ எப்படிலே பார்த்தே...?’
‘ கறி தலை கீழா தொங்குனீச்சுங்க...’
கூட்டத்திலிருந்து சலசலப்பு வந்தது. ஒன்றிரண்டு பேர் சத்தமாகப் பேசினார்கள். கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டக் கேள்வியை அப்படியே உள்வாங்கி கவுண்டமணியார் அவருக்கே உரித்தான தடித்தக் குரலில் கேட்டார் ‘ கறி தலை கீழா தொங்கினா, அது ஆட்டுக்கறி ஆயிடுமாலே...?’
‘ கடையில ஆடு வரைஞ்ச போர்டு மாட்டியிருந்துச்சுங்க...’
‘ அது, ஆடுதானானு நல்லாப் பார்த்தீயாலே...?’
‘ பார்த்தேங்க...’
‘ என்னலே பார்த்தே..?’
‘ தலை இருந்ததுங்க, அப்பறம் வாலு, நாலு கால்க இருந்ததுங்க...’
‘ வரைஞ்சிருந்தது, செம்மறி ஆடா, வெள்ளாடாலே...?’
செந்தில்நாதனால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. சற்று நேரம் யோசிக்க வேண்டியிருந்தது. அவன் யோசிப்பதைப் பார்க்கையில் கவுண்டமணியாருக்கு பெருமை தலைக்கு ஏறியது. அவரையும் அறியாமல் தலை ஆடி, கண்கள் ஆடின. நெற்றியை உச்சந்தலைக்கு ஏற்றியபடி உட்கார்ந்திருந்தார். அவனால் சட்டென பதில் சொல்லிட முடியாத கேள்வியொன்றை கேட்டுவிட்ட திளைப்பில் ஆழ, அவன் என்ன பதில் சொல்லலாமென்கிற யோசனையில் ஆழ்ந்தான்.
‘ என்னலே யோசனை, வரைஞ்சிருந்தது வெள்ளாடா, செம்மறி ஆடாலே...?’
‘ ரெண்டுமே இல்லைங்க...’
கவுண்டமணியார் அவரையும் அறியாமல் நாற்காலியின் முன் விளிம்பிற்கு வந்தார். ‘ இரு பக்க மீசையை இரு விரல்களால் நீவி விட்டுக்கொண்டார். ‘ இப்ப நீ மாட்டுற’ மனதிற்குள் சொல்லிக்கொண்டு கூட்டத்தினரை ஏளனப் பார்வையில் பார்த்தார்.
‘ வரைஞ்சிருந்தது ஆடு இல்ல, சரிதானேலே...’
‘ ஆடுதாங்க..’
‘ அப்ப, வெள்ளாடா, செம்மறியாடானு சொல்ல வேண்டியது தானேலே...’
 ‘ கறுப்பு ஆடுங்க...’
பஞ்சாயத்தில் கூடி நின்றவர்கள் ‘கொக், பக்..’ கெனச் சிரித்தார்கள். ‘எவன்யா சிரிக்கிறது...’ ஒருவன் வெடித்தான். மற்றொருவன் செந்தில்நாதனை அடிக்க கையைத் தூக்கிக்கொண்டு ஓடினான். அவனை ஒருவன் தடுத்து நிறுத்தினான். அவர்களுக்குள் வாய்த்தகறாறு வெடித்தது. ‘அதான் கேட்கிறோம்ல. பின்னே ஏன் கை நீளுது.., அவ எப்படி தெனாவாட்டா பதில் சொல்றானு பார்க்கிறே தானே... அதுக்காக கை ஓங்குவீங்களோ, அடிச்சி அவன் செத்துப்போனா யார்யா பொறுப்பேற்கிறது... கவுண்டமணியாரே, என்ன பஞ்சாயத்து பண்றீங்க. அவனவன் நாட்டாமைப்  பண்றான். வேடிக்கப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இதுதான் உங்க பஞ்சாயத்தா,...’
கவுண்டமணியார் எழுந்தார். ‘ எலே, நிறுத்துலே...நிறுத்துலேங்கிறே...’
சச்சரவு சட்டென அமைதிக்கு வந்தது. நின்றுகொண்டிருந்தவர்கள் உட்கார்ந்தார்கள். சிலர் வேட்டியை பிட்டத்து வரைக்குமாகத் தூக்கி விட்டுக்கொண்டு  உட்கார்ந்தார்கள். அடிக்க ஓடி வந்தவர் மட்டும் முகத்தை வேறொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு வானத்தை வெறிக்க பார்த்தபடி நின்றார்.
‘ எலே, என்னலே பேசுறே, கறுப்பு ஆடுதானேலே, வெள்ளாடு...’
செந்தில்நாதனுக்கு என்னச் சொல்வதற்கு தெரிந்திருக்கவில்லை. தலையை கீழே தொங்கவிட்டபடி நின்றவன் வேறு வழியில்லாமல் ‘வெள்ளாடு வரைஞ்சிருந்துச்சுங்க...’ என்றான்.
‘ ஆடு வரைஞ்சிருந்தா, அந்தக் கடையில் போடுற கறி ஆட்டுக்கறியாகிடுமாலே...?’
‘ எழுதியும் போட்டிருந்தாங்க...’
‘ என்னலே எழுதிப் போட்டிருந்தாங்க...?’
‘ இங்கு ஆட்டுக்கறி கிடைக்கும்னு..’
‘ சரி, எழுதியும், வரைஞ்சும் போட்டிருந்தா, அது ஆட்டுக்கறினு எப்படிலே நம்புறது...?’
 ‘ விலையைக் கேட்டேன்க..’
‘ எவ்ளோலே சொன்னான்..?’
‘ நானூத்து அம்பது ரூபானு சொன்னாப்டி...’
‘ நானூத்து அம்பது ரூபானு சொன்னா, ஆட்டுக்கறியாகிடுமா...?’
‘ ஆகாதுங்க., கடைக்காரர்க்கிட்ட கேட்டேன்க..’
‘ என்னலே கேட்டே...?’
‘ இது ஆட்டுக்கறி தானானு கேட்டேன்..’
‘ கடைக்காரன் என்னலே சொன்னான்...?’
‘ கிடாக்கறினு சொன்னாப்டி..’
‘ என்னக் கிடானு கேட்டியாலே...’
‘ அவரெ என்னங்க கேட்குறது. அது ஆட்டுக்கிடாதானுங்க...’
கவுண்டமணியார் மெல்ல எழுந்தார். எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்தே இருக்கிறதாம். எழுந்து இடுப்பை ஒரு வளைவு வளைத்துக்கொண்டார்.
‘ நீ கறி வாங்கிறப்ப தலை இருந்துச்சாலே...?’
‘ இல்லேங்க...’
‘ எங்கேனு கேட்டியாலே...?’
‘ கேட்டேன்க...’
‘ கடைக்காரன் என்னலேச் சொன்னான்...?’
‘ வித்திருச்சினு சொன்னாப்டி...’
‘ இரத்தம்ல...?’
‘ இப்பதான் வாங்கிக்கிட்டு போறாங்கனு சொன்னாப்டி...’
‘ தோல் இருந்திருக்குமேலெ...?’
‘ இல்லேங்க....’
‘ விசாரிச்சியாலே...?’
‘ காயுதுனு சொன்னாப்டி...?’
‘ கறியத் தொட்டுப் பார்த்தீயாலே...?’
‘ பார்த்தேன்க...’
‘ எப்படிலே இருந்துச்சு...?’
‘ ஜில்னு இருந்துச்சு...’
‘ ஆ..த்தூ,..’ காறித் துப்பினார் கவுண்டமணியார். அவர் துப்பியதும் பஞ்சாயத்தில் கூடியிருந்த அத்தனைப்பேரும் துப்பினார்கள். ‘ ஜில்லுனு இருந்தா அது ஐஸ்ல வச்சக் கறிலே’
‘ ரொம்ப ஜில்லுனு இல்லங்க...’
‘ கறியில கைய வச்சியே, விரல்ல இரத்தம் ஒட்டுனீச்சா....?’
‘ இல்லைங்கலே...’
‘ அப்பவே ஒனக்கு சந்தேகம் வந்திருக்கணுமெலே..?’
‘ அந்தக் கறியதான் நாலஞ்சுப் பேரு வாங்குனாங்க....’
‘ வாங்கினது ஆக்கித் திங்கனு நீ எப்படிலே கண்டே...?’
‘ கூடையில தக்காளி, இஞ்சியெல்லாம் வாங்கியிருந்தாங்க...’
கூட்டத்தினர், அனுமார் வாலைப்போல நீண்டுக்கொண்டிருக்கும் கேள்வியையும், பதிலையும் வேறு வழியில்லாமல் உள்வாங்கி, யாரை வெறிப்பது, யாரை முறைப்பது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள்.
‘ ஆட்டுக்கறினா கறி இரத்தமா, சிவப்பா இருந்திருக்கணுமே, இருந்துச்சா...?’ கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவரிடமிருந்து அந்தக் கேள்வி வந்தது. இவனுக்கெல்லாமா பதில் சொல்ல வேண்டும் என அலட்சியமாக நின்றுக்கொண்டிருந்தான் செந்தில்நாதன்.
‘ கேட்குறார்ல, சொல்லுடா..’ எனக் கூட்டத்திலிருந்து மற்றொருவர் குரல் கொடுக்க அவன் சொன்னான், ‘இல்லைங்க. வெள்ளையாதான்க இருந்துச்சு...’ என்றான் செந்தில்நாதன் பவ்வியமாக.
‘ அப்பவே நீ கேட்டிருக்கணும்ல...?’
‘ கேட்டதுக்கு, வெள்ளாட்டுக்கறி வெள்ளையா இருக்காம, வேற எப்படி இருக்குமெனக் கேட்டாப்பிடிங்க..’
‘ கொழுப்பு இருந்துச்சா...?’
‘ இல்லைங்க...?’
‘ ஆட்டுக்கறினா கொழுப்பு இருந்திருக்கணுமே...?’
‘ கொழுப்பில்லாத கறினு சொன்னாப்டி..’
‘ கால்கள பார்த்தீயா...?’
‘ பார்த்தேன்க...’
‘ எப்படி இருந்துச்சு...?’
‘ எப்படினா..?’
‘ முன்னங்கால்,பின்னங்கால் இரண்டும் எப்படியெப்படி இருந்துச்சுனு கேட்கிறே...?’
‘ முன்னங்கால் நீளமா இருந்துச்சுங்க...’
‘ பின்னங்காலை விட...’
‘ ஆமாங்க...’
‘ ஆட்டுக்கு பின்னங்கால்தானே நீளமா இருக்கணும்...’
‘ முன்னங்கால்தான்ங்க நீளமா இருந்துச்சு...’
‘ அப்ப அது ஆட்டுக்கறி இல்லங்க...’ தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி மறுதோளில் கிடத்திக்கொண்டு எச்சிலை காறித் துப்பினார். ஒட்டுமொத்த பஞ்சாயத்திற்கும் சேர்த்து துப்பிய எச்சிலாக அது இருந்தது.
‘  அது ஆட்டுக்கறிதான்க...’ செந்தில்நாதன் உறுதிப்பட சொன்னான்.
‘ எப்படி சொல்றே, அது ஆட்டுக்கறினு..’
‘ தொடை ஆட்டுக்கு இருப்பதைப்போல இருந்துச்சுங்க...’
‘ ஆட்டுக்கு இருந்தது மாதிரினா எப்படி...?’ கவுண்டமணியார் இந்நேரம் வரைக்கும் கேட்காது விட்டிருந்த கேள்வியைக் கேட்டு வைத்தார்.
‘ சப்பையா இருந்துச்சு...’
‘ தொடைக்கறி சப்பையா இல்லாம வேற எப்படிலே இருக்கும்...ம்...?, சப்பையில கறி நிறைய இருந்துச்சா...?’
‘ இல்லைங்க....’
‘ அப்ப , அது எப்படி ஆட்டுக்கறியாக இருக்க முடியும்..?’
‘ ஆட்டுக்கறித்தான்க அது..’
‘ இல்ல. அது ஆட்டுக்கறி இல்ல..’
‘ கடைக்காரர் அப்படித்தான்க சொன்னாப்டி.’
‘ அவன் சொன்னா, ஆட்டுக்கறியாகிடுமா....?’
‘ போலீஸ்க்காரர் ஒருத்தர் வந்தாருங்க. அவரும்கூட சொன்னாருங்க...’
‘ என்னலே சொன்னாரு...’
‘ இது ஆட்டுக்கறிதானு...’
‘ போலீஸ்க்கு என்னத் தெரியும், ஆட்டுக்கறியப் பத்தி...?’
‘ நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க. அது ஆட்டுக்கறிதான்க.. என்னால உறுதியா சொல்ல முடியுங்க...’ செந்தில்நாதன் சொல்லிவிட்டு பயந்து நடுங்குவதைப்போல நின்றுகொண்டிருந்தான்.
‘ இல்லே, இல்லே, இல்லே, அது ஆட்டுக்கறி இல்லேவே இல்ல...’ புகார் கொடுத்தவர் சத்தமிட்டு கத்தினார். அவனை அடிக்க கையைத் தூக்கிக்கொண்டு ஓடினார்.
‘ அது ஆட்டுக்கறி இல்லை. நுகர்ந்து பாரு. வயித்தப் பெறட்டுது...’ கறியை எடுத்து பையோடு அவனது முகத்தில் வீசினார். வீசியப் பையை பிடித்தான் செந்தில்நாதன். அதை அவன் ஒரு முறை நுகர்ந்து பார்த்துவிட்டு கறியை கவுண்டமணியார் முன் வைத்தபடி சொன்னான் ‘ நாறுறது கறியில்லேங்க. யாரோ குளிக்காம வந்திருக்காங்க. அதுதான்க நாறுது...’ என்றவாறு கூட்டத்தைப் பார்த்தான். கூட்டம் சற்று விலகி நின்று நாசியைச் சுழித்தது.
‘ இது ஆட்டுக்கறிதானு வெட்னரி ஹாஸ்பிடல்ல வேலப் பார்க்கிற டாக்டரு கூட சொன்னாருங்க...’
கூட்டத்தினர் அமைதிக்கு வந்தார்கள். அத்தனை பேரின் கண்களும் கவுண்டமணியாரை மொய்த்தன. ‘ இந்தாப்பாருலே செந்தில்நாதன், உன்க்கிட்ட உன் முதலாளி ஐநூறு ரூபா பணம் கொடுத்திருக்கிறாரு. கொடுத்து ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கிக்கிட்டு வரச் சொல்லிருக்கிறாரு. நீ ஆட்டுக்கறிய வாங்காம, வேறென்னத்தையோ, நாறிப்போனத ஆட்டுக்கறினு வாங்கிக்கிட்டு வந்து, இது ஆட்டுக்கறிதானு கொடுத்திருக்கே, இது ஆட்டுக்கறி இல்ல. உன்ன வாங்கிக்கிட்டு வரச் சொன்ன ஆட்டுக்கறி எங்கே..?’
செந்தில்நாதனுக்கு கண், மண் தெரியாமல் கோபம் வந்தது. வந்த கோபம் கை வழியே கவுண்டமணியாரின் கன்னத்தில் அறையாக விழுந்தது. விழுந்த அறையில் சூழ்ந்த நின்ற கூட்டம் நாலாபுறமும் தெறித்து விலக, மறு அறை விட்டபடி சொன்னான் செந்தில்நாதன்,      ‘அதுதான்டா இது...’.


காமதேனு இதழ் ஏப்ரல் 24




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசலி

வரலாற்றுப்புனைவு ஒ ட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர் பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும், தனி ஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார். அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு , அதில் வைக்கோல் நிரவி தண்ணீர் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன. பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொது மக்கள் வருமிடங்களிலும் நடைபாதையிலும், அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியைப் பட்டித் தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரகாலம் நடைபெறும்   ஜமாபந்தி அது. தாசில்தாரரின் அறிவித்தலின் பேரில் ஊர் தலையாரிகள் ...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள்

இரண்டாவது அப்பா பற்றியக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகந்தி. இருவரில் எனக்கு பிடித்தது முதல் அப்பாதான் எனச் சொல்கையில், வித்யா அவளது முகத்தை நின்று திரும்பிப் பார்த்தாள். இதைச் சொல்ல இவளுக்கேன் வெட்கமில்லை, என அலப்புறுவதைப் போல அவளது பார்வை இருந்தது.  வித்யாவின் முகம் அவளையும் அறியாமல் சுழிந்தது. அவளது முகச்சுழிப்பைச் சுகந்தி கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால், அனிச்சம் போல, முகம் வாடியிருப்பாள். ‘ஏனடி முகம் சுழித்தாய்’, எனக் கேட்டு சண்டைப் பிடித்திருப்பாள்.  சுகந்தி சொன்ன, இரண்டு அப்பாக்கள்…, அதுகுறித்து நினைக்கையில், வித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளைச் சிரிக்கவிட்டால், சித்தி சீரியலில் டைட்டில் பாடலுக்குப் பின்னே சிரிக்கும், குழந்தையைப்போல சிரிக்கிறவள். முன் பல்வரிசை மொருதைக்குள் முட்டிய சிரிப்பை, உதட்டுக்குள் அதக்கி, தொண்டைக்குள் விழுங்குகையில், அவளது தொண்டை முடிச்சு, நெல்லி உருண்டையாக உருண்டது.  ‘நெசமாவே ஒனக்கு ரெண்டு அப்பாவா..?’ இரைக்கொத்தும் காக்கையைப் போல, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கேட்டாள் வித்யா. அவளது முதுகில் ஒரு பக்கமாகப் புத்தகப்பை அணைந...