முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தம சீலர்


சாந்தினி, முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பதிவிடப்போகிறார் என்கிற செய்தியை அமலா வாயிலாக கறந்திருந்தான் சுதாகரன். அந்த ரகசிய செய்தியை அறிந்ததிலிருந்தே அவனது அன்றாட இத்யாதிகளின் நடவடிக்கையில் பெருந்துண்டு விழுந்திருந்தது.

       சில்மிங்கள் சந்திக்கு வந்தால் என்னாகுமென்று அவனொன்றும் அறியாதவனில்லை. நாய்,புதைப்பிணத்தைத் தோண்டி சந்திக்கு இழுத்து வந்து கடித்துக் குதறும் பாடுதான் என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான். சும்மாவே ஊருக்கு ஆயிரம் வாய். சுற்றும் இணைய வெளிக்கு சொல்லவா வேணும்இப்போதெல்லாம் யாரும் யாரையும் தன் கண்கொண்டு பார்ப்பதில்லை. எல்லாவற்றிருக்கும் கேமரா கண்தான். செல்பி எடுக்க ஒரு ஒரு கண். , பறவைப் பட்சிகள் பறந்தால் இருபது கண், விபத்து என்றாலும் மேலும் சில கண்.  நடிகர், நடிகைகள் வந்தால் ஆயிரம் கண். இப்படியாக கேமரா கண்களை விரிக்க; கெட்டத் தொடுதலுக்கும், பலாத்கார முயற்சிக்கும் சொல்லவா வேணும்...?.

                சாந்தினி பதிவிடப்போகும் மீ டுவில் தான் நிச்சயம் இடம் பெறத்தான் போகிறேன் என்பதை அவனது உட்கிடக்கை சொல்லியிருந்தது. அதை நினைக்கவே சுதாகரனுக்கு மண்டைக்குள் ஊட்டி ரயில் ஊர்ந்தது. மனத்திரையில் சில்வண்டு ஊரும் உணர்வைக் கொடுத்து தூக்கத்தின் திரையைக் கெடுத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் அவன் மூன்றாம் கிரேடிலிருந்து முதல் நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருந்தான். இன்னும் நான்கு வருடத்தில் ஓய்வு பெற இருக்கிறான். மீசை நரைத்தென்ன, ஆசை நரைக்க வேணுமே.

       மீ டூ ரகசியத்தை அத்தனை ரகசியமாக அவனது காதிற்குள் புனல் வைத்து கொட்டிச் சென்றவர் யாரோ அல்ல, அலுவலகத்தில் எடுபிடி வேலைப் பார்க்கும் அமலாதான். அமலாவிற்கு சொல்லவா வேணும். கேழ்வரகிலும் நெய் எடுக்கக்கூடியவர். டீ வாங்கி வர, மேசை நாற்காலிகள் துடைக்கசாப்பாடு எடுத்துவர,… என இருக்கும் அவர் அலுவலர்களின் அந்தரங்க செய்திகளைக் கறப்பதில் தெம்மாங்கு பேச்சுக்காரி அவர். எப்பேர்ப்பட்டவரின் இரகசியத்தையும் ரேடார் கண்ணால் துல்லியம் பிசகாது துழாவி உரிய இடத்தில் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்.

       சாந்தினி, அலுவலக கடிதங்களை எழுத்துருவாக்கம் செய்யும் கணினி தட்டச்சு ஊழியர். இருபத்து ஐந்து வயதிற்குள் அகப்பட்ட பட்டதாரி. குறைந்த சம்பளத்தில் தினக்கூலியில் வேலைப் பார்க்கும் வறுமை நிற சிவப்பினப் பெண். சேலைகளாக உலாவும் அவ்வலுவலகத்தில் சுடிதார் தரித்தவர் அவர் மட்டும்தான். விரல்கள் பத்தையும் மூலதனமாகக் கொண்டவர். அவர் மீதுதான் சுதாகரன் ஒரு கண் வைத்திருந்தான். அவரது நடை, உடையை ரிமோட் கண்ணால் கண்காணிக்கச் செய்தான்.

       ஏழைக் குடும்பம். சக்கரங்கள் அப்படியும், இப்படியுமாக அலாவும் சைக்கிளில் அலுவலகத்திற்கு வரக்கூடியவராக சாந்தினி இருந்தார். அவர் அலுவலகத்திற்குள் நுழைகையில் அவரது முகத்தில் வியர்வை வழிந்து நெழியும். ஒன்றாம் தேதியானால் தவறாது சம்பளம் வாங்கி விடுபவர்களெல்லாம் அலுவலக நேரத்திற்கு முன்னே, பின்னே வர, சாந்தினி குறித்த நேரத்திற்கும் முன்னதாகவே வந்துவிடக் கூடியவர். அவர் அலுவலகத்திற்கு வந்ததற்குப்பிறகே காலை சிற்றுண்டிக்காக கையடக்க டிபன் பாக்ஸைத் திறப்பார்.

       சுதாகரன், சாந்தினிக்கு அப்பா வயதை ஒத்தவனாக இருந்தான். மீசை நரைத்து உச்சந்தலையுடன் கூடிய முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. நரையில் கருப்பு மை பூசி ஓரளவான இளமைக்கு திரும்பியிருந்தாலும் பற்களின் வெத்திலைக்கறையும், மங்கிய கண்களில் துருவேறிய மூக்குக் கண்ணாடியும் அவனது வயதை பத்து வயது குறைத்து இரு மடங்கில் பெருக்கிக்காட்டியது.

        ஒரு நாள்  சாந்தினி , அவருக்கு வந்திருந்த அழைப்பில் அவருக்கு நெருக்கமான தோழியிடம்  மனந்திறந்து பேசியதை அமலா ஒட்டுக் கேட்டிருந்தார். ' இந்தப் பேச்சி பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது ' திரைப்பட வரலெட்சுமி வசனத்துடனேயே அவரது பேச்சுத் துவங்கியது. அமலா டீக்குவளைகளை எடுத்து அடுக்கி வைப்பதைப்போல அவரது காதினை சாந்தினியின் பக்கம் திருப்பினார். சாந்தினியின் விரல்கள் கணினி எழுத்துருக்களில் தவழ, அலைபேசியை இடது காதின் பக்கம் வைத்துக்கொண்டு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அவருக்கேற்பட்ட இன்னல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘பார்க்கத்தான் நான் பால், கொதித்தால் திராவகம்’ எனும் வாக்கில் அவரது பேச்சு நீண்டது. ' வேலை, பெரிய வேலை. இந்த வேலையை விட்டா எனக்கு வேற வேலை கிடைக்காதுபாரு... இவன்கள இப்படியே விட முடியாது. இவன்களுக்கு நானென்ன கசாப்புக்கடை கறித்துண்டா, என்னை யாரு என்ன நினைச்சாலும் பரவாயில்ல. மீ டு பக்கத்தில எனக்கு ஏற்பட்ட அவமானத்த ஸ்டேடஸ்ஸா போடத்தான் போறேன்....'என்றதும் அமலாவிற்கு தேவையான தகவல் கிடைத்துவிட்ட திருப்தியில்  தலையை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டார்.

                அமலாவின் நடையில் மாற்றமிருப்பதை சுதாகரன் கணித்திருந்தான். பெண்ணின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு காரண காரியமிருக்கிறது என்பது அவனது நீண்ட நாட்களுக்கு முந்தைய கண்டுபிடிப்பு. முன் வழுக்கையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு அமலாவை அருகில் அழைத்துக் கேட்டான். ‘ இந்த நடைக்கு என்ன அர்த்தமாம், நம்ம ஆபிஸ்ல உலாவும் சீக்ரெட் செய்தி என்னவாம்...?’. அவனது கேள்வியில் கேலியின் குருத்து இருந்தது. அப்படியாக அவன் கேட்டதில் அமலாவிற்கு கொஞ்சம் வியப்புத் தட்டவே செய்தது. பின்னே இல்லையா! இத்தனை நேரம் இதைக் கேட்காமல் இப்பொழுதுதானே கேட்கிறார். ஒரு வேளை சாந்தினி பேசியது இவருக்கு கேட்டிருக்குமோ, எப்படி கேட்கும்...? சாந்தினி கண்ணாடியால் சூழப்பட்ட அறைக்குளிருந்தபடியல்லவா பேசினாள். அவளது வாய் அசைவுகளை வைத்து கணித்திருப்பாரோ...?

        அமலா முன்னே பின்னே ஒரு பார்வைப் பார்த்துவிட்டு இணைய கோபுரம் சமிக்ஞை கிடைத்ததும் தேங்கிக்கிடந்த செய்திகளெல்லாம் வாட்ச்அப்பில் மளமளவென இறங்குவதைப்போல அவனது காதிற்குள் செய்தியைக் கொட்டினார். அச்செய்தியை உள்வாங்கிக்கொண்ட அவனுக்கு அமலாவிற்கு கூட மீ டு பற்றித் தெரிந்திருக்கிறதே...என்பதை விடவும் தன் பெயர் அதில் இடம் பெறப் போகிறது என்கிற பயம்தான் பதட்டமாக நெஞ்சுக்குள் இறங்கியது. கொஞ்ச நாட்களாகவே அலுவலகம் பதற்றமாகவே இருந்தது. இதுநாள் வரைக்குமில்லாது உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்வதுதான் காரணம். இந்தப் பதற்றம் போதாது என்று மீ டூ வேறா...? அவனது உள் உதடுகள்  பதற்றத்தால் வறட்சியாக காயத் தொடங்கின.

       சாந்தனி, அந்த அலுவலகத்தில் கணினிப் பெண்ணாக பணியேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவரது  முகநூல் பக்கத்தில் மீ டுவாக இடம் பெறும் அளவிலான  செய்கையில்  இறங்கியிருந்தான் சுதாகரன். ' பீடி பற்ற வைக்கணும் தீப்பெட்டி  இருக்கா...' என ஓர் அலட்டலுமில்லாமல் கேட்டுவிடும் சாமார்த்தியம் கொண்டவனாகத்தான் சுதாகரன் இருந்தான். எந்தப் பெண்ணாக இருந்தால் என்ன, அவனுக்குப் பிடித்தவராக இருந்துவிட்டால் போதும் உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா எனக் கேட்டுவிடுவதைப்போல கேட்டுவிடுவான் ‘என் மனசில நீங்க இருக்கீங்க, உங்க மனசில நான் இருக்கேனா...?’. இப்படிதான் அவன் தன் பேச்சைத் துவங்குவான். அப்படியாகத் துவங்குவதில் சின்னதாக ஒரு சிரிப்பு, உதட்டுச் சுழிப்பு, சாந்தக் கண்களில் காந்தமாக அனல் எரிந்திடும். எதையும் சிரித்துக்கொண்டே  கேட்டுவிடும் வாயும் நாக்கும் பற்களும் அவனுக்கு இயல்பாகவே கிடைத்திருந்தது. இப்படியாகக் கேட்டுவிடும் சந்தர்ப்பம் சாந்தினி விசயத்தில் அவனுக்குக் கிடைத்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக அவரைக் கவரும்படியான நளினத்தை காட்டியிருந்தான்.  

                 அவனது கேட்டலிலிருந்த நரகல் தனத்தை அவனது பற்கள் சிரித்து மழுப்பியிருந்தது. கீழ்மையில் வழியும்  எச்சிலை அவனது கைக்குட்டை இலாவகமாகத்  துடைத்து மறைத்திருந்தது. அவனது ஆடை அலங்காரமும் உதடுகளில் நளிந்த அதரங்கமும் மோதிரங்களின் மினுமினுப்பும் அவனது கேட்டல் தவறல்ல, இதுவொரு நவீன நாகரிகமென தூக்கிப்பிடிக்கும் வேலையைச் செய்திருந்தது.
       சாந்தினியை அவன் முதலில் ஓய்வறையிலிருந்து வெளியேறும் சமயத்தில் நெருங்கியிருந்தான். அவரை அவன், ஒரு பூனையிடம் ஒரு பூனை நெருங்குவதைப் போலவே நெருங்கச் செய்தான். காதினில் அலைபேசியை வைத்துகொண்டு எங்கேயோ வேடிக்கைப் பார்ப்பதைப் போல பார்த்து பேசிக்கொண்டு அவரை உரசியிருந்தான். உரசலுக்குப் பிறகு சின்னதாக ஒரு சிரிப்பு. பதிலுக்கு சிரித்தால் சிரிக்கும்படியான உதடுகள் விரிப்பு. ஒரு வேளை சிரிக்கவில்லையென்றால் மன்னிப்பு கேட்டுவிடுவதைப்போல முகத்தில் தவிப்பு. இத்தனையையும் ஒரு சேர செய்துவிடும்படியாக முகத்தை நவரசமாக வைத்திருந்தான்.

       சுதாகரனின் தீண்டலில் சாந்தினி சிரிக்கவில்லை. முறைக்கவுமில்லை. சிரிப்பும் முறைப்புமில்லாத அவரது பார்வை அவனை என்னவோ செய்திருந்தது. திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்த அவன் தன்னை அவள் திரும்பிப் பார்க்கிறாளா, எனப் பார்த்தான். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. விரலுக்கும் மேல் தனக்கு வேலை இருக்கிறது என்பதாக அவர் கணினியில் மூழ்கிப்போயிருந்தார்.

       சுதாகரனின் அடுத்த எதிர்கொள்ளல் வேறொரு விதமாக இருந்தது. உதடுகளில் நெளிப்பு, கண்களில் ஒரு கெஞ்சல். இமைகளில்  பயம் தடிக்க , செயற்கையாக வெட்கத்தை வைத்துக்கொண்டு சாந்தினியைப் பார்த்தான். அவர் மீதான மோகத்தை இமை வரைக்குமாக ஏற்றி, காமத்தை கண்களில் கனலாகக் காட்டி,  ஓநாய் வாநீர் வடிப்பதைப்போல எச்சில் ஒழுக, விரல்கள் பரபரக்க, உடம்பை அப்படியும் இப்படியுமாக வளைத்து,முடிகளைக் கோதிவிட்டுக்கொண்டு, ஒரு வளைவு வளைந்து , குடைந்து, அவரது உதடுகளை அவனது  கண்கள் பார்க்கக் கேட்டிருந்தான். கேட்டவன் அதே இடத்தில் நின்றிருக்கவில்லை. ஒரே இடத்தில் நிற்கும் படியான வேலையையா அவன் செய்திருந்தான். இந்திரன் குசும்பை அல்லவா அவன் செய்து முடித்திருக்கிறான். அவன், இருக்கைக்கும் ஓய்வு அறைக்குமாக நடந்தான். ஓய்வு அறையில் மீசையை  நீவுவதும், முகத்தைக் கழுவுவதும், வாசனை பூச்சை அடிப்பதும், அவனது பையைத் திறந்து சென்ட் பாட்டிலை எடுத்து கையைத் தூக்கி இரு பக்க அக்குள்குள் அடித்துக்கொண்டு தொண்டையைச் செருமிக்கொண்டு சாந்தினி பார்க்கும் படியாக அவரது இருக்கைக்கு நேரே மேசையை இழுத்து கிடத்திக்கொண்டு நாற்காலி நெட்டி பறிக்கும்படியாக குலுங்க உட்கார்ந்தான். உட்கார்ந்தவன் கோப்புகளை வரிசையாக அடுக்கி தலைக் குனிந்து கீழ் இமைக்குள் விழிகள் சொருக சாந்தினியை ஒரு பார்வைப் பார்த்தான். சாந்தினி அவனது பார்வையை ஒரு பொருட்டென  சட்டைச் செய்யாதவராக தலையைச் சற்றும் நிமிர்த்தாமல், ஒரு  முறைப்பு முறைக்காமல் சாவியால் இயங்கும் ரோபோ பெண்ணைப்போல ஒரே சீரான வேகத்தில் கணினியில் இயங்கிக்கொண்டிருந்தார்.  

அடுத்தடுத்து எத்தனையோ சந்திப்பு, எதிர்கொள்ளல், பார்த்தல், சிரித்தல்,...சாந்தினியிடமிருந்து கனத்த மவுனமே பதிலாக வந்தது. மவுனம் சம்மதத்தின் அறிகுறி என்பதாகவே சுதாகரன் புரிந்து கொண்டான்.  அதை நினைத்தே அவன் அவரை மனதிற்குள் உருட்டினான். அவனது உருட்டலில் சாந்தினி தெங்கம்பழமாகிப் போனார். அவரது மவுனமும், எதையும் அலடிக்கொள்ளாத இருப்பும் மீ டூ வில் வந்து நிற்குமென அவன் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

       சாந்தினி எடுத்திருக்கும் முடிவை அமலா அவனது காதிற்குள் கொட்டியதும் அவர் கொதிக்கும் நீருக்குள் விழுந்திட்ட ஆமையைப் போலாகிவிட்டிருந்தான்இப்பொழுதுதான் அவனுக்கு வீடொன்று இருப்பது நினைவிற்கு வந்தது. தன்னை விடவும் பத்து வயது குறைவான மனைவி நினைவிற்கு வந்தாள். பருவ மகள்கள், மகன், அத்தை, மாமா ... என பலரும் நினைவு முற்றத்திற்கு வந்து ஏன் இப்படியெல்லாம் செய்தீர்கள் எனக் கேட்பதைப் போலிருந்தார்கள். அவனது வேலையும், பதவி உயர்வும், ஓய்வுக்காலமும், பென்சனும் நினைவிற்கு வந்தன.

       சுதாகரன் தனக்கென்று ஒரு முகநூல் பக்கம் வைத்திருந்தான். அதில் பலரும் கலாய்க்கும் படியான மீம்ஸ்களை பதிவிட்டு லைக்ஸ்கள் வாங்கியிருந்தான். இது தவிர இரண்டு வாட்ஸ்அப் குழுவிற்கு அட்மினாக வேறு இருந்தான். இத்தனையும் இருந்து தானும், தன் பெயரும் மீ டூவில் பகிரப்பட்டால் என்னாகுமென்று அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. சில்மிஷங்களில் பலரின் பெயர் அடிபடுகையில் சிரிக்க, குதூகலிக்க, பகிர, லைக், கமெண்ட் கொடுக்கவென இருக்கக் கூடியவன் சுதாகரன். இரண்டு மூன்று படங்களை எடுத்துவைத்துகொண்டு  மீம்ஸ் வேறு எழுதுவான். அவன் எழுதிய மீம்ஸ் ஒன்று பிரபல வார இதழில் வந்து பலரின் பகிர்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஒரு வேளை தன் பெயர் மீ டூவில் அடிப்பட்டால் அது எப்படியெல்லாம் கேலிக்கும், பகிருதலுக்கும் உள்ளாகும் என்பதை நினைக்கையில் அவனுக்கு ஜன்னி எடுத்தது. # சாந்தினி, மீ டு சுதாகரன். இப்படியாக முகநூலில் பகிர்கையில் என்னாகும்...? அதை நினைக்கவே அவனது தலை இணைய உருண்டையைப் போல  உருண்டது. வியர்க்காத உதட்டிலும் வியர்த்தது.        

       முகநூல் பகிர்வு இத்துடன் முடிந்து விடப்போவதில்லையே. இது மனைவிக்குத் தெரிய வந்தால் அவள் என்ன நினைப்பாள்...? மகள்களுக்குத் தெரிய வந்தால் அவர்களின் படிப்பும், தன் மீதான அன்பும் என்னாகும்...? அவரால் தூங்க முடியவில்லை. தூங்குகையில் திடுக்கென ஒரு விழிப்பு. படப்படப்பு கூடியிருந்தது. எப்பொழுது விழித்தாலும் அவன் முதல் வேளையாக சாந்தினியின் முகநூல் பக்கத்தைப் பார்வையிடுவதாகவே இருந்தான். அப்பக்கத்தில் மீ டு பதிவிட்டிருக்காததை நினைக்கையில் அவனுக்கு சுவாசம் பெரு மூச்சாக வெடித்தது.

       ‘ ஏன் ரெண்டு நாளாகவே ஒரே இறுக்கமாக இருக்கீங்க...?’ மனைவி வேறு கேட்டிருந்தாள்.

       ‘ இல்லையே, நல்லாதானே இருக்கேன்...’

       ‘ ஏங்க , இருபது வருஷமா உங்கக் கூட காலம் கழிக்கிற எனக்குத் தெரியாதா...?’

       சுதாகரனின் தண்டுவட முடிச்சு மெல்ல அவிழ்வதைப் போலிருந்தது.

       ‘ ஆமாம், அது யாருங்க, சாந்தினி...?’ முதல் கேள்வியைப் போல மறுகேள்வியை  அவனால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவளது கேட்டலில் டீப்பாய் மீதிருந்த டீ தவறி நாலாபுறமும் சிதறியது. ‘ யா..யா...யாரது சாந்தினி...?’ அவனது உதடுகள் குழறின.

       ‘ என்னங்க, நான் உங்களக் கேட்கிறேன். நீங்க என்னையக் கேட்கிறீங்க...?’

       ‘ தெரியலையே யாரு...?’ அவனது கண்கள் அன்றைய தினசரியைத் தேடின. மனைவியிடமிருந்து பார்வைத் திருப்ப எதையாவது ஒன்றை தேடுவதே உசிதமென இருந்தது. மனைவி அவரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தாள்.

       சாந்தினியை இவளுக்கு எப்படி தெரியும்..? ஒரு வேளை சாந்தினி என்னை குறித்து முகநூலில் எழுதிவிட்டாளோ...? அவனது கை வேகமாக அலைபேசியைத் துழாவி வேகமாக முகநூல் பக்கத்திற்குள் நுழைந்தது. முகநூல் இரவு பார்த்துவிட்டு வைத்த சாந்தினி பக்கத்திலேயே இருந்தது. சாந்தினி எதுவும் அப்பக்கத்தில் புதிதாக எழுதியிருக்கவில்லை. இப்பக்கத்தை மனைவி எடுத்துப் பார்த்திருப்பாளோ..!. அப்படியாக பார்க்கும் பழக்கத்தை இதுநாள் வரைக்கும் ஒரு பழக்கமாக கொண்டிருக்கவில்லையே! நேற்றைய தினம் நான் நடுநிசியில் கண் விழித்துப் பார்த்தேனே, அதை பார்த்திருப்பாளோ, இவளுக்கு எப்படி தெரிய வந்தது சாந்தினியைப் பற்றி...? இதுக் குறித்து கேட்கக்கூடாது என்றுதான் நினைத்தான். ஆனால் அவனையும் அறியாமல் ஒரு கேள்வி வந்து விழுந்தது. ‘ ஆமாம், யாரு சாந்தினி...?’

       அவனது கேள்வி மனைவியின் காதினில் விழவே செய்தது. ஆனால் அவள் நீண்ட நேரத்திற்குப் பிறகே பதில் சொல்லியிருந்தாள் ‘ எனக்கென்ன தெரியுமாம், நீங்கதானே ராத்திரி சாந்தினி, சாந்தினினு முணங்கிக்கிட்டிருந்தீங்க...’. இதைக் கேட்டதும் அவனது உடம்பு வியர்த்தது. அவன் பருகிய டீ புரை ஏறியது. ஆனால் சுதாகரன் தன்னை ஒரு முறை சுதாகரித்துக்கொண்டு பதில் சொன்னான் ‘ அப்படியாகவா சொன்னேன், சாந்தம் நீ, என்பதை அப்படியாகச் சொல்லியிருப்பேன்...’ என்றதும் சமையலறை பாத்திரங்கள் உருளத் துவங்கின. பாத்திரங்கள் உருள்வது தன் மீதான வெறுப்பின் வெளிப்பாடு என்பது அவன் ஒன்றும் அறியாதவனில்லை. இதற்கே இப்படி.., ஒரு வேளை மீ டூவில் தன் பெயர் இருந்துவிட்டால்...!

       வீட்டிற்குளிருக்கும் வரைக்கும் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அலுவலகத்திற்குள் நுழைகையில்தான் படபடப்பு கூடியிருந்தது. அவனுக்கு எதிரே அவர். அவருக்கு எதிரே இவன். எதிரே உட்கார்ந்திருப்பது எதிரியாக உட்கார்ந்திருப்பதைப் போலிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு வணக்கமில்லை. ஒரு சிரிப்பில்லை. சின்னதாக ஒரு நல விசாரிப்பு கூட இல்லை. அவன் உட்கார்ந்திருக்கும் இருக்கை சுமையென இருந்தது.

       ‘ சாந்தினி...’ மெல்ல அழைத்தான். ஏன் அழைத்தேன். அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சாந்தினியின் கைகள் கணினியில் இயங்க மெல்லத் திரும்பிப்பார்த்தார். ‘ குட் மானிங்க் சாந்தினி...’

       சாந்தினி பதிலுக்கு வணக்கம் சொல்லவில்லை. முகம் பழையபடி இறுக்கமாகவே இருந்தது. பின்புறம் தொங்கிக்கிடந்த பின்னலிட்ட கூந்தலை அப்படியும் இப்படியுமாக எடுத்துவிட்டு முகத்தில் கோபம் கொப்பளிக்க உட்கார்ந்திருந்தார். அந்நேரம் பார்த்து அவருக்கு திரும்பவும் ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை அவர் சட்டென எடுத்துவிடவில்லை. அதைப் பார்த்தபடியே இருந்தார். பிறகு எடுத்து காதினில் வைத்தபடி அமைதியாக இருந்தார். அவர் அமைதியாகத்தான் இருந்தாரே தவிர அவரது முகம் கோபத்தால் வெந்து குழைந்து கொண்டிருந்தது. தொடர்பு துண்டித்ததும் அவரது விரல்கள் அலைபேசிக்குள் நுழையவும் வேகமாக இயங்கவும் செய்தன.

       சுதாரனுக்கு ‘ பக்’ கென்று இருந்தது. அவள் இயங்கிய வேகத்தைப் பார்க்கையில் மீடூ எழுதியிருக்கத்தான் வேண்டும்...! அவன் வேகமாக அலைபேசியை எடுத்து சாந்தினி பக்கத்திற்குள் சென்று பார்த்தான். அவன் நினைத்தது சரிதான். சாந்தினி, தன் பக்கத்தில் மீ டூ  பதிவிட்டிருந்தார். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீ டூவில் அவனது பெயர் இருந்திருக்கவில்லை. பதிலாக அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து போகும் உயர்அதிகாரியின் பெயர் இருந்தது. அவர் பதிவிட்ட அடுத்த நொடியிலிருந்து அடுத்தடுத்து பின்னூட்டங்கள் வந்து விழுந்தன. அத்தனையும் கேலியும், கிண்டலும் கண்டனக் குரலுமாக இருந்தன.

       சுதாகரனுக்கு உட்சுவாசம் வெடித்தது. அதே நேரம் அவனுக்கு அவமானமாகவும் இருந்தது. நானும் தானே அவளை பாலியல் ரீதியில் நெருங்கியிருந்தேன். தொல்லைக் கொடுத்தேன். என் பெயர் ஏன் அவளது மீ டூவில் இல்லை. நான் எந்த வகையில் அவளுக்கு தரைக்குறைவாகத் தெரிந்தேன். என் படிப்பை அவளது படிப்புடன் ஒப்பிட்டு பார்த்திருப்பாளோ, அவளது அழகிற்கு முன் நான் வெறும் குப்பையாகத் தெரிந்திருப்பேனோ, அவளுக்குத்தான் என்னவொரு திமிர். என்னை எப்படியாக அவமதித்திருக்கிறாள்.., என் கறுப்பும், நரைப்பும் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. என் படிப்பையும், என் கிரேடையும், என் சாதியையும் அவள் நுகர்ந்து பார்க்கும் வேலையைச் செய்திருக்கிறாள். இதற்காகவா நான் இத்தனை நாட்கள் தன்னிலை மறந்து திரிந்தேன். வீட்டில் தன்னையும் மறந்து இவளது பெயரைச் சொல்லித் தொலைத்திருந்தேன்.

       ஒருவேளை மீ டு பக்கத்தில் அவனது பெயர் இடம் பெற்றிருந்தால் கூட இப்படியாக அவன் கலவரப்பட்டிருக்க மாட்டான். இத்தனை நாட்கள் எதிர்ப்பார்த்து , அதற்காகவே தூக்கத்தை இழந்து, மனதில் படபடப்பு கூடி, நிம்மதியை இழந்து பேயறைந்தவனைப் போல தவித்து திரிகையில் இவன் பெயர் இல்லையென்றால் எப்படியாம்...?.அவனால் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. அவமானம் அவரைப் பிடுங்கித் தின்பதைப் போலிருந்தது. அவளை அழைத்துக் கேட்டுவிட்டால் என்ன, என்று கூட நினைத்தான். எப்படி கேட்பது...? இதில் ஏன் என் பெயரில்லை என நேரடியாகக் கேட்டுவிட முடியுமா...? வேண்டாம், என்னை அவள் அவமதிக்கவில்லை. ஒரு வேளை என்னை மன்னித்திருக்கலாம். என் ஓய்வு வயதைக் கருத்தில்கொண்டு போனால் போகிறதென்று விட்டுத் தொலைத்திருக்கலாம்.

       மெல்ல எழுந்து சாந்தினியின் முகத்தைப் பார்த்தான். அவர் கணினி விசைப்பலகையில் முகத்தைப் புதைத்து உடல் குலுங்கிகொண்டிருந்தார். அவரது குலுங்களில் குழந்தையின் துடிப்பு தெரிந்தது. எனக்குத் தேவை கொஞ்சம் ஆறுதல் என்பதைப்போல அவரது முகம் இருந்தது. அவரது நியாயத்தின் பக்கம் நிற்கும்படியான ஒரு வாசகம் எழுதிவிடலாமென நினைத்தான் சுதாகரன். நானும் கூடத்தான்.., என பதிவிடலாம் என்று எண்ணம் அவனுக்குள் மேலோங்கியது. குற்ற உணர்வு அவனுக்குள் குறுகுறுத்தது. அவரது முகநூல் பக்கத்திற்கு சென்று அவன் சார்பில் ஒரு கருத்தை பதிவிட்டான். ‘ என் பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக நான் சுந்தமானவன் என்றாகிவிடாது,…’ பதிவிட்டவன், நாற்காலியில் அமர்ந்தான். அவன் மீது யார், யாரோ அமர்வதைப் போலிருந்தது.
                                                                     கணையாழி - ஆகஸ்ட் 2019
                         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசலி

வரலாற்றுப்புனைவு ஒ ட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர் பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும், தனி ஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார். அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு , அதில் வைக்கோல் நிரவி தண்ணீர் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன. பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொது மக்கள் வருமிடங்களிலும் நடைபாதையிலும், அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியைப் பட்டித் தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரகாலம் நடைபெறும்   ஜமாபந்தி அது. தாசில்தாரரின் அறிவித்தலின் பேரில் ஊர் தலையாரிகள் ...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள்

இரண்டாவது அப்பா பற்றியக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகந்தி. இருவரில் எனக்கு பிடித்தது முதல் அப்பாதான் எனச் சொல்கையில், வித்யா அவளது முகத்தை நின்று திரும்பிப் பார்த்தாள். இதைச் சொல்ல இவளுக்கேன் வெட்கமில்லை, என அலப்புறுவதைப் போல அவளது பார்வை இருந்தது.  வித்யாவின் முகம் அவளையும் அறியாமல் சுழிந்தது. அவளது முகச்சுழிப்பைச் சுகந்தி கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால், அனிச்சம் போல, முகம் வாடியிருப்பாள். ‘ஏனடி முகம் சுழித்தாய்’, எனக் கேட்டு சண்டைப் பிடித்திருப்பாள்.  சுகந்தி சொன்ன, இரண்டு அப்பாக்கள்…, அதுகுறித்து நினைக்கையில், வித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளைச் சிரிக்கவிட்டால், சித்தி சீரியலில் டைட்டில் பாடலுக்குப் பின்னே சிரிக்கும், குழந்தையைப்போல சிரிக்கிறவள். முன் பல்வரிசை மொருதைக்குள் முட்டிய சிரிப்பை, உதட்டுக்குள் அதக்கி, தொண்டைக்குள் விழுங்குகையில், அவளது தொண்டை முடிச்சு, நெல்லி உருண்டையாக உருண்டது.  ‘நெசமாவே ஒனக்கு ரெண்டு அப்பாவா..?’ இரைக்கொத்தும் காக்கையைப் போல, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கேட்டாள் வித்யா. அவளது முதுகில் ஒரு பக்கமாகப் புத்தகப்பை அணைந...