முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்றுசகோதரிகளின் கதை


மொழிபெயர்ப்பு  சிறுகதை

ஆங்கிலத்தில் . தபிஷ் ஹைர் (டென்மார்க்)

தமிழில் - அண்டனூர் சுரா.
மூன்று சகோதரிகள் பற்றியக் கதை இது. கதையிலிருக்கும் மூவரில் ஒருவரை எனக்கு நன்கு தெரியும், எழுபது வயதைக் கடந்திருக்கிற வயோதிக பெண்மணி அவர். இந்தியாவில் ஒரு சின்னஞ்சிறிய நகரத்தில் தனித்து வசிக்கக்கூடியவர். இளவயதில் விதவையான, குழந்தைப் பாக்கியமில்லாத, கூட இருந்து கவனித்துக் கொள்ள யாருமில்லாத தனி மரம் அவர்.

       அவருக்கு இரு சகோதரிகள், இருவருமே அவருக்கு மூத்தவர்கள். இவருக்கே வயது எழுபதைத் தாண்டிவிட்டது, அப்படியென்றால் அவர்களுக்கு...? இவருக்கு நேர் மூத்தவர், இவர் வசிக்கும் அதே இந்தியாவில்தான் வசித்து வருகிறார். இவரை விடவும் சற்றே பெரிய நகரத்தில் மகன், மறுமகள் ,பேரக் குழந்தைகளுடன் வசித்து வரக்கூடியவர். மகன் மத்திய அரசு துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறவர்.

       இவருடைய மூத்த சகோதரி பாகிஸ்தானில் வசித்து வருகிறார். திருமணம் நடந்தேறியதும் கணவருடன் பாகிஸ்தானிற்குச் சென்று விட்டவர். அப்படியாக அவர் இடம் பெயர்கையில் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்திருக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்தது. இன்றைக்கு அவர் தன் மகன்கள், பேரப் பிள்ளைகளுடன் கராச்சி அல்லது இஸ்லாமாபாத் இரண்டில் ஒரு நகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரண்டில் எந்நகரமென்று சரியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானில் வசித்து வருகிறார் என்று மட்டும் உறுதிபட சொல்லிவிட முடியும்.

       பிறந்தகத்தை விடுத்து வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வதும், பிறந்த மண்ணை மறந்து வாழ்வதும் முந்தைய தலைமுறைக்கு ஒன்றும் பெரிய விடயமில்லை. அதுவும் மத்தியதர முஸ்லீம் குடும்பத்திற்குச் சொல்லவே வேண்டியதில்லை. தன்னுடன் பிறந்த, உடன்பிறப்புகளை விடுத்து, சேர்ந்து பழகிய, விளையாடிய தோழிகளை மறந்து பாகிஸ்தானில் ஐக்கியமாகிவிட்டவர் அவர். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது  ஐம்பதுகளில் இத்தகையப் போக்கு சர்வசாதாரணம். தொழிற்முறை வாழ்க்கைக்கும், வணிக பயணத்திற்கும் இப்படியான இடம்பெயர்விற்குத் தேவையாக இருந்தது. சகோதரிகள் மூன்று பேரும் வெவ்வேறு இடத்தில், வேறுவேறான சூழலில் வாழ்ந்தவராக இருந்தாலும் மூன்று பேருக்குமிடையில் ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் மூவரும் விதவைகள்.

       அவர்கள் ஒன்றுசேர , அருகருகே அமர, தொட்டு உறவாட அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. அரிதினும் அரிதாகவே அவர்களின் சந்திப்பு நடந்தேறுவதாக இருந்தது. அப்படியானச் சந்திப்பு நிகழ்ந்து பல தசாப்த ஆண்டுகளாகி விட்டிருந்தன. எனக்குத் தெரிந்த குழந்தைப் பாக்கியமில்லாத அவர் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வாழ்க்கைகாகப் பொருள் தேட, அலைய, இயங்குவதாக இருக்கிறவர்கள். அவர்கள் ஒன்று கூடினால் குழந்தைப் பருவ அனுபவங்களை நினைவுகூர்ந்து பேச அவர்களிடம் நிறைய  சம்பவங்கள் இருக்கின்றன. வாழ்தலுக்கான அலைக்கழிப்புகள் அவர்களை ஒன்று சேரவிடாமல் பிரித்தே வைத்திருக்கின்றன.

       அலைபேசி வந்ததற்குப் பிறகு அவர்களிடமிருந்த தூர இடைவெளி கொஞ்சம் தளர்ந்திருந்தது. அவர்களின் இறுக்க மனநிலை மெல்ல அவிழ்ந்து பாச பிசுபிசுப்புடன் கூடிய மனலயத்தைக் கொடுத்திருந்தது. அதுவும் ஐபோன் தொழிற்நுட்பம் கைகூடியப் பிறகு இன்னும் கூட அவர்களின் பந்தத்தில் பூமழை பெய்தது என்றுதான் சொல்ல வேண்டும். மூவரும் ஐபோன் திரையில் முகம் பார்த்துப் பேச, சிரிக்க, அரட்டை அடிக்கவென இருந்ததில் தான் வெவ்வேறு பிரதேசமாகப் பிரிந்திருக்கிறோம், என்கிற எண்ணோட்டம் முழுமையாக அவிழ்ந்திருந்தது.

       பாகிஸ்தான் சகோதரி அடிக்கடி இந்திய சகோதரிகளிடம் தொடர்புகொண்டு பேசுபவராக இருந்தார். அப்படியாக பேசுகையில் பால்ய கால , பிள்ளைப்பருவ அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருந்ததில்லை. அவர் இந்தியாவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கையில் மூவரும் தன் முதுகில் ஏறியிருக்கும் முதுமையை மறந்து குழந்தையாக மாறுவதைப் போல உணர்ந்தார்கள்.

       இந்தியாவில் தனியே வாழக்கூடிய, அந்த வயோதிக பெண்மணியிடமிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வருமென்று நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒருவேளை அப்படியான அழைப்பு எனக்கு வராமல் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளும்படியான வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்காதுதான். இந்தியாவில்,ஒரு சிறுநகரத்தில், தனி மரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த வயோதிக பெண்மணியை இந்தியாவில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதை அவர் நினைவுபடுத்தியதும் எனக்கு அவர் முகம் கண்முன் வந்து நின்றது. கவலையில் தோய்ந்தும், கவலையை மறக்கும்படியான முகமாக அவரது முகம் இருந்தது. இருவரும் நீண்ட நேரம் தொட்டு பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதுதான், அவர் இருவேறு நகரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு சகோதரிகளைப் பற்றி என்னிடம் பகிர்ந்திருந்தார். அதை நினைவுப்படுத்தும் விதமாகவே அன்றைய தின தொலைபேசி அழைப்பு இருந்தது.




       நான் இந்தியாவை விட்டுப் பிரிந்து டென்மார்க்கில் குடியேறி பல வருடங்களாகி விட்டன. இந்தியாவில் பணியாற்றிய அதே பத்திரிகை துறையில்தான் இங்கேயும் பணியாற்றுகிறேன். என் தொடர்பு எண் அவருக்கு யார் வழியாகக் கிடைத்ததோ, அவரிடம் வரும் இப்படியான அழைப்பையும், அதுவும் ஒரு நாள் விடுத்து ஒரு நாள் பேசும்படியான அழைப்பையும் நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லைதான். அந்த மூதாட்டி பழைய சந்திப்புகளை நினைவு கூர்ந்து என்னிடம் பேசத் தொடங்கினார். நலம் விசாரிப்பில் தொடங்கிய அவரது பேச்சு, மெல்ல மனச்சுமைகளை இறக்கி வைக்கும் விதமாகத் தொடர்ந்திருந்தது. அவரது மனதிற்குள் சுமக்க முடியாத பாசப்போராட்டத்தை என் காதிற்குள் மெல்ல  இறக்கி வைப்பவராக இருந்தார். நான்  எதையும் பேசாமல் வெறும் இம்.. போடுபவனாக மட்டும் இருந்தேன். ஒரு தருணத்தில், ‘ஏன், என்னிடம் இவ்வளவையும் பகிர்ந்து கொள்கிறீர்கள், என்னிடமிருந்து உங்களுக்கு என்னத் தீர்வு கிடைத்துவிடப் போகிறது? ’ உருது மொழியில் கேட்டு வைத்தேன்.

       ‘ என்னைச் சுற்றிலும் என்னவோ ஒரு தவறு நடப்பதைப் போலவே இருக்கிறதப்பா, அல்லாவும், என் அருகாமைவாசிகளும் என்னை விட்டு விலகி தூர செல்வதைப் போலிருக்கிறது...’ எனச் சொன்னது விம்மலாகக் கேட்டது.

       ‘நான் உன்னுடன் தொடர்பு கொள்வதற்குக் காரணம் என் சகோதரிதான்’ என்றார். மேலும்,‘ உன்னிடம் நான் வேறெதையும் கேட்கப் போவதில்லை. நீ வெளிநாட்டில் வசிக்கிறாய். உனக்கு இந்திய அதிகாரிகள் கொஞ்சப் பேரைத் தெரியும்.  பத்திரிகையாளராக வேறு இருக்கிறாய், நீ நினைத்தால் எனக்கானப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முடியும்..’ என்றார். அதன்பிறகுதான் அவருடைய பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அவர் சொல்லி நிறுத்திய பிரச்சனையின் வீரியம் என்னவென்று மெல்ல எனக்குத் தெரியவந்தது. மூன்று சகோதரிகளுக்கிடையேயான பாசப் போராட்டமே அவரது பிரச்சனை.

       பாகிஸ்தானில் வசிக்கும் மூத்த சகோதரி, வாரத்திற்கு இரு முறை இந்தியாவில் வசிக்கும் இரு சகோதரிகளிடம் தொடர்புகொண்டு நலம் விசாரிப்பவராக இருந்திருக்கிறார். புல்வாமா குண்டு வெடிப்பிற்குப் பிறகு நினைத்த நேரத்தில் பாகிஸ்தான் சகோதரியிடம் பேச முடிந்திருக்கவில்லை. அவருக்கென்று தனியே அலைபேசி இல்லை என்பதால், அண்டை வீட்டாரின் அலைபேசிக்கே அவருக்கான அழைப்பு வரும். அப்படியாக வரும் அழைப்பை அவ்வீட்டார்கள் கூப்பிட்டுக் கொடுப்பதாக இருந்திருக்கிறார்கள். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகும் அவரிடமிருந்து அழைப்பு வந்திருந்திருக்கிறது. இனி, இந்த எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டாமென்றும் சொல்லி, அழைப்பைத் துண்டித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் பெண்மணி மனதளவில் உடைந்துபோயிருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் அந்த வயோதிக பெண்மணிக்கு மூத்த சகோதரியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. தினந்தோறும் காலை, மாலை, அந்தி,.. என்று பாராமல் பக்கத்து வீட்டில், தனக்கான அழைப்பு வராதா, என ஏங்கியபடி காத்திருந்திருக்கிறார். அழைப்பு வந்திருக்கிறது, ஆனால் அழைப்பை அவரிடம் கொடுக்க முன் வந்திருக்கவில்லை. அவர் தொடர்ந்து கெஞ்சவும் ஒரு நாள் கடிந்து சொல்லிவிட்டார்கள், ‘ பாகிஸ்தானிலிருந்து வரும் இந்த அழைப்பால் எங்களுக்குப் பிரச்சனை வருமென்றும், இனி எங்கள் அலைபேசி மூலமாக உன் சகோதரியிடம் பேச முடியாது என்றும்...’

       அதுமட்டுமன்று, அண்டைவாசிகள் அவரை ஆண்டி இந்தியனாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் தேசப்பற்று இல்லாதவரென்று சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு ஒரே ஒரு முறை பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த அழைப்பை ஏற்று சகோதரியிடம் பேசியிருக்கிறார். அப்பொழுது பாகிஸ்தான் சகோதரி சொன்னாராம், தான் மற்றொரு சகோதரியின் எண்ணிற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்ததாகவும், அழைப்பு சென்றும் அவள் அதை எடுத்து பேசவில்லையென்றும், இரண்டு நாட்களாக அழைப்பே போகவில்லையென்றும், அலைபேசி அணைத்துவைக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்லி அவள் எப்படியாக இருக்கிறாள், ஏன் என் அழைப்பை அவள் ஏற்கவில்லையென கேட்டு கண் கலங்கியிருக்கிறார். தனிமையில் வாழும் அந்த வயோதிக பெண்மணிக்கு, என்ன பதில் சொல்வதென்று தெரிந்திருக்கவில்லை. 

       இருவருக்குமான மத்திய சகோதரியின் மகன்கள் அரசு ஊழியர்கள் என்பதால் பாகிஸ்தானிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பால் மகனின் வேலைக்கு குந்தகம் ஏற்படுமென்று முன்னெச்சரிக்கையாக அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார் போலும். அப்படியாகத்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் அவர் சொன்னதிலிருந்து எனக்கு இந்திய - பாகிஸ்தான் பிரிவினை கால கசப்பான சம்பவங்கள் நினைவிற்கு வந்தது.

       பிரிவினை காலத்தில் இரு தரப்பிலும் மில்லியன் பேர்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு நிகரான வாழ்வாதாரங்களை அடியோடு குழைத்திருக்கிறார்கள். எழுபது வருடங்கள் கடந்தும், இரு பிரதேசமும் இரு நாடுகளானப் பிறகும் இரு நாட்டினருக்குமிடையில் இரத்தக்கொதிப்பு இருப்பதை நினைத்து என்னால் வெறுமென கடந்துபோக முடியவில்லை.

       அவர், அடிக்கடி என்னிடம் தொடர்புகொண்டு பேசுபவராக இருந்தார். அவர் என்னிடம் என்ன மாதிரியான பதிலை எதிர்ப்பார்க்கிறாரோ, ஒருவேளை நான் பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறவன் என்பதால் என்னால் அவருக்கு ஏதேனும் நலம்புரியுமென எதிர்ப்பார்க்கிறார் போலும். ஒரு பத்திரிகையில் இது குறித்து எழுதுவேனெ எதிர்ப்பார்க்கக் கூடும். அவரது அதிகப்பட்ச எதிர்ப்பார்ப்பு அது ஒன்றாகவே இருக்க முடியும், என்னால் இதைத் தவிர வேறென்ன செய்திட முடியும்? ஆனாலும் அவருக்கு நான் உத்திரவாதம் அளித்தேன். நான் இது குறித்து பத்திரிகையில் எழுதப் போவதாகவும், அரசியல்வாதி, அதிகாரிகள் மட்டத்தில் பேச இருப்பதாகவும், உங்கள் சகோதரியிடம் விரைவில் நீங்கள் பேசிட முடியுமென்றும்,..இதை நான் அவரது ஆறுதலுக்காகச் சொல்லி வைத்தேன்.

       சற்று முன் என்னிடம் திரும்பவும் பேசினார். அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் எனப் பலரும் அவரிடம் தானாக முன் வந்து பேசுகிறார்களாம். பாகிஸ்தானிலிருக்கும்  சகோதரியிடம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்களாம். இந்து, முஸ்லீம் என இரு தரப்பினரும் அவரைப் பார்க்கையில் அது குறித்தே பேசுகிறார்களாம். அத்துடன் வாயிற்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு பிறகு சமாதானப்படுத்தும் விதமாக மனதிற்கு ஆறுதலாக ஒன்றிரண்டு வார்த்தையைச் சொல்லிவிட்டு கலைந்து போகிறார்களாம். ‘ நான் வயதானவள், எனக்கு என் தேசம் வேண்டுமா, என் உறவினர் வேண்டுமா, என முடிவெடுக்கத் தெரியவில்லை.. எனக்கு இரண்டும் வேறு வேறாகத் தெரியவில்லை. நான் அவரிடம் பேசவா , வேண்டாமா?  அவர் என்னிடம் தொடர்பு கொண்டால் அவரிடம் நான் என்னச் சொல்லி அழைப்பைத் துண்டிக்க?, எனது இரண்டாவது சகோதரி குறித்தும், அவரது குடும்பத்தை பற்றியும் விசாரித்தால் அவர் குறித்து நான் என்னச் சொல்ல?,அவரது மகன்கள் அரசு ஊழியர் என்பதால் உன்னால் அவர்களுக்குப் பிரச்சனை வரக்கூடுமென பேச மறுக்கிறார்கள் எனச் சொல்லி விடட்டுமா? அப்படியாகச் சொன்னால் அவளால் அதை ஏற்க முடியுமா? என்னைக் குறித்து நான் என்னச் சொல்ல?, அவளை நான் மறந்துவிடத்தான் வேணுமா?, அப்படியாக என்னால் முழுமையாக மறந்துவிட முடியுமா?,...’ இப்படியானக் கேள்விகளால் என்னைத் துளைப்பதாக இருந்தார்.

       அவருக்கு நான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என் ஒருவனால் அவருக்கானப் பதிலை எப்படி சொல்லிவிட முடியும்? அவருக்கானப் பதில் என்பது ஒரு நபராக இருந்து சொல்லக் கொடுக்கக் கூடிய ஒன்றா?  ஒரு பாமரனின் இதயத்தை பிரிவினைவாதம் எப்படியெல்லாம் துண்டாடி விடுகிறது. காந்திய தேசத்தில் வாழ்கிறோம், காந்திய தேசத்தில் வாழ்வதைப் போலவா வாழ்கிறோம்...? என் கேள்வியினூடே அவரது கேள்விகளுக்கானப் பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சவரக்கத்தி

அ ப்பா, வழக்கமாக க் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையை த் திறந்திருந்தேன். அப்பா, எப்பொழுது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாக கண்ணாடியை எடுத்து வெளிச்சுவற்றில் மாட்டிவிட்டுதான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக்கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன்.   அப்பா கடைக்குளில் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலிய...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

புதுக்கோட்டை எழுத்தாளர்கள்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 01 #அகிலன் - சித்திரப்பாவை.  நான் வாசித்த முதல் நாவல். கரம்பக்குடி பள்ளி தமிழாசிரியர் திரு #மலையாண்டி அவர்கள்  இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த நாவலை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்ததற்குக் காரணம், இந்த நாவலிலுள்ள #மாணிக்கம் என்கிற கதாபாத்திரம். "வாழ்க்கை மிகவும் அழகானது. அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தி விடாதே". புதுக்கோட்டை எழுத்தாளர் -02  #புதுகை_சஞ்சீவி, சரக்கு வாகன ஓட்டுநர். மகத்தான சிறுகதை எழுத்தாளர்.  நிகழ் இலக்கிய நிகழ்வில், இவரை நான் முதலில் சந்தித்தேன். இவரது சமீப வெளியீடான #நிழல்_பிம்பங்கள் சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு நாள் சொன்னார், " இந்தத் தொகுப்பு ஓரளவேனும் வாசகர்களால் கவனிக்கப்படுமென எதிர்பார்த்தேன். சற்றே எனக்கு ஏமாற்றம்தான்".  பதிலுக்கு நான் சொன்னேன்,"எனக்கோர் ஆசை,  #நிழல்_பிம்பங்கள் போல ஒரு சிறுகதையை நான் எழுதிப் பார்த்திட வேண்டும் " என்று.  புதுக்கோட்டை எழுத்தாளர் - 03  #பெரி_சே_இளங்கோவன், அறந்தாங்கியில் வசித்து வரும் இவர், பட்டதாரி தமிழாசிரியர். நான், புதுகை புழங்க...