முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர்கள்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 01

#அகிலன் - சித்திரப்பாவை.  நான் வாசித்த முதல் நாவல். கரம்பக்குடி பள்ளி தமிழாசிரியர் திரு #மலையாண்டி அவர்கள்  இந்த நாவலை எனக்கு அறிமுகம் செய்தார். இந்த நாவலை என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்ததற்குக் காரணம், இந்த நாவலிலுள்ள #மாணிக்கம் என்கிற கதாபாத்திரம். "வாழ்க்கை மிகவும் அழகானது. அதை மேலும் அழகுப்படுத்தாவிட்டாலும் அசிங்கப் படுத்தி விடாதே".



புதுக்கோட்டை எழுத்தாளர் -02 

#புதுகை_சஞ்சீவி, சரக்கு வாகன ஓட்டுநர்.
மகத்தான சிறுகதை எழுத்தாளர்.  நிகழ் இலக்கிய நிகழ்வில், இவரை நான் முதலில் சந்தித்தேன். இவரது சமீப வெளியீடான #நிழல்_பிம்பங்கள் சிறுகதைத் தொகுப்பு குறித்து ஒரு நாள் சொன்னார், " இந்தத் தொகுப்பு ஓரளவேனும் வாசகர்களால் கவனிக்கப்படுமென எதிர்பார்த்தேன். சற்றே எனக்கு ஏமாற்றம்தான்".  பதிலுக்கு நான் சொன்னேன்,"எனக்கோர் ஆசை,  #நிழல்_பிம்பங்கள் போல ஒரு சிறுகதையை நான் எழுதிப் பார்த்திட வேண்டும் " என்று. 


புதுக்கோட்டை எழுத்தாளர் - 03 

#பெரி_சே_இளங்கோவன், அறந்தாங்கியில் வசித்து வரும் இவர், பட்டதாரி தமிழாசிரியர். நான், புதுகை புழங்கும் சொற்கள், சேகரிக்கத் தொடங்குகையில் #சேலம்_பொன்_குமார்  அவர்கள் #அறந்தாங்கி_வட்டார_வழக்குச்சொல்_அகராதி எனும் இப்பிரதியை எனக்கு அறிமுகம் செய்தார். புதுக்கோட்டை மாவட்ட வட்டாரச் சொற்கள் சேகரிப்பின் முன்னத்தியான இப்பிரதியை #அகநி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

புதுக்கோட்டை எழுத்தாளர் -04 

#ந.சோலையப்பன்,  புதுக்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது, #காவியம்_பல்சுவை_மாத_இதழ். ஒரு சிறுகதைக்காக #ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு பெற்றவர். #நண்பர்கள்_குழு என்றொரு இதழ் நடத்துகிறார்.  #மண்_உப்பு என்கிற இந்தக் குறுநாவல்  கடலை எல்லையாகக் கொண்டிராத சமஸ்தான கால புதுக்கோட்டையில் #உப்பு_காய்ச்சி மன்னராட்சிக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்த உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு, மர்ம கதையாக புனையப்பட்டது.

புதுக்கோட்டை எழுத்தாளர் -05 

#முனைவர்_தெ_திருஞானமூர்த்தி, புதுக்கோட்டையில் வசித்து வரும் இவர், #மேலைச்சிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவரது #மாணிக்கத்தடம் எனும் இந்நூல் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்த்தொண்டை ஆய்வு செய்கிறது. திருக்குறளுக்குக் #குறள்_வடிவில் தெளிவுரை எழுதியவர் மாணிக்கனார். " தண்ணீரில் முதலை எதனையும் வெல்லும்; தரையில் முதலையை எதுவும்வெல்லும்"


புதுக்கோட்டை எழுத்தாளர் - 06 

#சச்சின், ஆலங்குடியில் பிறந்தவர். மின்பொறியாளராக பணியாற்றுகிறார். நிலவை முடையும் கவிஞரான இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஆனந்த விகடன். கெட்டியான மொழி, அடர்ந்த சொற்கள், பூடகமான கவிதைகளால் கவனம் பெற்றவர். #ஷெர்லாக்_ ஹோம்ஸ் _ஜேம்ஸ்பாண்டாகிறார் என்கிற கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு எழுதுவதைக் குறைத்துக்கொண்டார். இத்தொகுப்பில் இடம்பெற்ற #மாந்தளிர்_நிறப்பெண், மலர்களுக்கு லீவு விடுங்கள், உவமைக்குக் கட்டுப்படாதவள்,..போன்ற கவிதைகளால் பெருங்கவனிப்பிற்கு உள்ளானவர். தொடர்ந்து அவர் படைப்புகளைத் தர வேண்டும், என்பது என் பேரவா!

புதுக்கோட்டை எழுத்தாளர்- 07 

#கவிவர்மன், பூர்வீகம் அறந்தாங்கி. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்ஸிஸ்ட் ) #மாவட்டச்_செயலர். முத்தன் பள்ளம் நாவல் வெளியீட்டின் போது, #வெற்றி_அல்லது_வீரமரணம் என்கிற இந்நூலைக் கொடுத்தார். முதல் சந்திப்பும் அதுவே. #இளைஞர்_முழக்கம் இதழில் கவிதையில் தொடராக எழுதிய #சே_குவாரா வின் வாழ்க்கை வரலாற்று.  " இறந்த பிறகும் திறந்தே இருந்த / #சேயின்_கண்கள் / உயிரோடிருப்பது போலவே / உறுத்தியது #ஏகாதிபத்தியத்தை / புதைக்கும் முன் / உலகையே ஆரத்தழுவிக்கொள்ளத்/ #துடித்தவனின்_கைகள் / மணிக்கட்டோடு_துண்டிக்கப்பட்டது/ #சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உயிரூட்டியவன்/ பூமியில் வந்து போன/ #முழுமையான_மனிதன்/ சே_குவாரா.

புதுக்கோட்டை எழுத்தாளர் - 08 

#சிங்கமுத்து, புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். தமிழாசிரியர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நகரக் கிளைத் தலைவர். #தொடரும் காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். #யாவர்க்குமாய்_இல்லை_நாம் , இவரது முதல் கவிதைத் தொகுப்பு இருபது ஆண்டுகால கவிதையனுபவம். #மனிதர்களின்_சரணாலயக்_கவிஞர் இவர். பெரியோரிடத்தில் / மிகச் சிறியோனாக/ சிறியோரிடத்தில்/ மிகப் பெரியோனாக/ சீச்சீ.../ இதிலென்ன இருக்கிறது / மனிதனிடத்தில் மனிதனாக!/



புதுக்கோட்டை எழுத்தாளர் - 09

#ப.உமாபதி, #கரம்பக்குடி. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுகிறவர்.#இந்த_பூமியில்_நான்_கழித்த_பொழுதுகள், எனும் இந்நூல் சிறந்த தன்வரலாறு பிரிவில் தமிழ்நாடு அரசின் #தமிழ்_வளர்ச்சித்_துறை_விருது பெற்றது. தத்துவம், மெய்யியல் சார் நூல்கள் எழுதியுள்ளார். இந்நூல், அவரது வாழ்க்கை வரலாற்றினூடே  புதுக்கோட்டை ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மேற்கு அரண்மனை  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமாக மாற்றப்பட்ட கால நிகழ்வுகளைப் பேசுகிறது.



புதுக்கோட்டை எழுத்தாளர் 

#கந்தர்வகோட்டை, #முதுகுளம்  கிராமத்தில் பிறந்தவர் ந.சுலோச்சனா. கரம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்#தமிழ்த்துறை_உதவிப்_பேராசியராக பணியாற்றுகிறார். இவரது கணவர் திரு சகாதேவனும் எழுத்தாளரே. இவரது பெயரின் பிற்பகுதியைச் சேர்த்து #மனுசியப்புத்திரியும்_தேவனும் என நீளமான புனைப்பெயராகக் கொண்டிருக்கிறார்.  தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் பாகுபாடு, சாதிய வன்முறை, மாணவர்களிடம் எதிர்கொண்ட சாதியஅவமதிப்பு,... இவற்றைத் தோழிகளுக்குச் சொல்வதைப் போல எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பு, #அன்புள்ள_தோழி. இத்தொகுப்பில் காதலுக்கு இவ்வாறாக ஒரு வரையறை தருகிறார். " எதுவாகட்டும் தோழி... வெளிச்சத்தைச் சுற்றும் விட்டில்கள்/விளக்கையே  எரித்துவிடும் வித்தைதான்/காதல்...

புதுக்கோட்டை எழுத்தாளர்

#ரெ_இராமையா, #கம்பன்_கழகத்-தலைவர். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கட்டப்பட்டு  இன்டர்மீடியட் என்கிற இடைநிலை வகுப்பு தொடங்கப்பட்ட காலத்தில் படித்தவர். #பாழ்படுத்தப்பட்ட_ஒரு_அழகிய_நகரம்  எனும் இச்சிறு நூல் புதுக்கோட்டை நகர் சுற்றியுள்ள குளங்கள், அழகான நகர வீதிகள் குறித்து பேசுகிறது. #மேஜர்_பிளாக்_பர்னே என்கிற ஆங்கிலேயர் யோசனையில் உருவாக்கப்பட்ட நகரம் புதுக்கோட்டை. இன்றைய மாவட்ட ஆட்சியர் குடியிருக்கும் பங்களாவில் முதலில் தங்கியவர், மன்னரைக் கண்காணிக்க பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்ட அதிகாரி #டாட்டன்ஹாம். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து விட , அவரது உடல் தஞ்சை சாலையிலுள்ள -மாதா_கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது கல்லறை வாசகம் இது, " Here lies an Englishman who loved pudukottai state and its people "


























#மு.கீதா, தேவதா தமிழ் என்றும் அறியப்படுகிறவர். புதுக்கோட்டையில் வசித்துவரும் இவர் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், #வீதி_கலை_இலக்கிய_களம் ஒருங்கிணைப்பாளர். 'கவிதை எழுதும் போது உயிருடன் இருப்பதாக உணர்கிறேன்' என்பதாகக் கூறும் அமெரிக்கக் கவிஞர் #லூயிஸ்_எலிசபெத்_க்ளூக் உள்ளிட்ட பதினைந்து உலகக் கவிஞர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. நம்மூர் கவிஞர்களில் ஔவை, கவிக்குயில். கிரேக்க கவிஞர் #சாஃபோவுக்குச் சிலை இருந்தது, என்பதாக ஒரு குறிப்பு. #வல்லினச்_சிறகுகள்  இதழில் தொடராக எழுதிய #உலகப்_பெண்_கவிஞர்_யார்_எவர்? என்கிற இந்நூல் பெண்கள் வசிக்காத நாடு #வாடிகன்_சிட்டி போல, #ஆண்கள்  இடம்பெறாத நூல் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசலி

வரலாற்றுப்புனைவு ஒ ட்டப்பிடாரம் தாலுகா ஆபிஸ் நடக்கயிருக்கின்ற ஜமாபந்தியால் களைக்கட்டியிருந்தது. அவ்வூரை தாலுகா கிராமமாக அறிவித்ததன் பிறகு கூடும் முதல் ஜமாபந்தி என்பதால் பந்தல்கால் ஊன்றுதல் தொடங்கி தண்ணீர் பந்தல் அமைக்கிறது வரைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்தேறின. அவ்வூருக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த தாசில்தார் பஞ்சமன் அத்தனை வேலைகளையும், தனி ஒருவராக வரிந்துகட்டி செய்துகொண்டிருந்தார். அதிகாரிகள் மனு வாங்குவதற்கும் மக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கும் உகந்ததாக பெரிய பந்தல் போடப்பட்டு , அதில் வைக்கோல் நிரவி தண்ணீர் தெளித்து அதன் மீது பின்னிய பனைமட்டைகள் விரிக்கப்பட்டிருந்தன. பஞ்சமன் திட்டமிடலின் பேரில் ஜமாபந்தி நடப்பதால் பொது மக்கள் வருமிடங்களிலும் நடைபாதையிலும், அவர்கள் இளைப்பாறுவதற்குக் கூடுமிடங்களிலும் பெரிய மண்சால்களில் தண்ணீர் வைத்தார். ஜமாபந்தியில் எத்தகைய மனுக்கள் வாங்கப்படும் என்கிற செய்தியைப் பட்டித் தொட்டியெங்கும் தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார். ஒரு நாளைக்கு நான்கு ஊரென ஒரு வாரகாலம் நடைபெறும்   ஜமாபந்தி அது. தாசில்தாரரின் அறிவித்தலின் பேரில் ஊர் தலையாரிகள் ...

விராட்டி

வெ ள்ளி முளைக்கிற நேரத்துக்கெல்லாம் சீனிக்கடை முக்கத்திற்கு வந்திருந்தாள் பார்வதி. இத்தனை ஆண்டுகளில், இத்தனை சுருக்காக அவள் எழுந்ததில்லை, இங்கே வந்ததுமில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கூடைகளை ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, இடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைத் தாண்டுகையில் முதல் சேவல் கூவியிருந்தது. எப்போதும் சேவல் கூவிதான் பார்வதி எழுந்திருப்பாள். அன்று, அவள் எழுந்து சேவல் கூவியிருந்தது. இரவு அவள் தூங்கியல்லவா, அவளை சேவல் எழுப்ப வேண்டும். இரவு அவளைக் கண் விழித்துப் பார்த்திருந்ததைப் போலதான், அன்றைய இரவு அவளுக்கு இருந்தது. அவளுக்கும் வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. இதுநாள் வரை இப்படியான அவமதிப்பை அவள் எதிர்கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளை அப்படியாகக் கேட்டவன், இருபத்தைந்து முப்பது வயதுக்குட்பட்டவனாகவே இருந்திருந்தான். அவன் கேட்டிருந்த அக்கேள்வி, காது வழியே நெஞ்சுக்குள் இறங்குகையில், அடிவயிறு குடலுடன் சேர்ந்து குமட்டிக்கொண்டு வந்தது. எனக்கு தம்பியென்று ஒருவன் இருந்திருந்தால் அவன் வயதில்தான் இருந்திருப்பான். நான் கல்யாணம் செய்துகொண்ட இத்தனை காலத்திற்கு, என் புருசன் சாகாமலிருந்து, அப்பொழுதே எனக்கெ...

வித்யாவுக்கு மூன்று அப்பாக்கள்

இரண்டாவது அப்பா பற்றியக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகந்தி. இருவரில் எனக்கு பிடித்தது முதல் அப்பாதான் எனச் சொல்கையில், வித்யா அவளது முகத்தை நின்று திரும்பிப் பார்த்தாள். இதைச் சொல்ல இவளுக்கேன் வெட்கமில்லை, என அலப்புறுவதைப் போல அவளது பார்வை இருந்தது.  வித்யாவின் முகம் அவளையும் அறியாமல் சுழிந்தது. அவளது முகச்சுழிப்பைச் சுகந்தி கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால், அனிச்சம் போல, முகம் வாடியிருப்பாள். ‘ஏனடி முகம் சுழித்தாய்’, எனக் கேட்டு சண்டைப் பிடித்திருப்பாள்.  சுகந்தி சொன்ன, இரண்டு அப்பாக்கள்…, அதுகுறித்து நினைக்கையில், வித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளைச் சிரிக்கவிட்டால், சித்தி சீரியலில் டைட்டில் பாடலுக்குப் பின்னே சிரிக்கும், குழந்தையைப்போல சிரிக்கிறவள். முன் பல்வரிசை மொருதைக்குள் முட்டிய சிரிப்பை, உதட்டுக்குள் அதக்கி, தொண்டைக்குள் விழுங்குகையில், அவளது தொண்டை முடிச்சு, நெல்லி உருண்டையாக உருண்டது.  ‘நெசமாவே ஒனக்கு ரெண்டு அப்பாவா..?’ இரைக்கொத்தும் காக்கையைப் போல, தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு கேட்டாள் வித்யா. அவளது முதுகில் ஒரு பக்கமாகப் புத்தகப்பை அணைந...